ஜிம்பாப்வேயில் மாற்றம்!

ஜிம்பாப்வேயில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம்

ஜிம்பாப்வேயில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தாவிட்டாலும் எதிர்பாராதது என்றுதான் கூற வேண்டும். கடந்த 37 ஆண்டு காலமாக ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் அசைக்க முடியாத தலைவர் என்று கருதப்பட்ட 93 வயது அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகி ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலியிருக்கிறார். இது அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி விலகல் அல்ல. சூழ்நிலையின் கட்டாயத்தால் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. நீண்ட நாள் அதிபர்கள் பலரும், அசைக்க முடியாத சக்தி என்று கருதப்பட்டவர்களும் தூக்கியெறியப்பட்டிருக்கின்றனர் அல்லது பதவி விலகி இருக்கிறார்கள். நைஜர் அதிபர் மம்மாடெள தஞ்சா, டுனீசியாவின் சைன் எல் அபிபைன் பென் அலி, எகிப்தின் ஹோஸ்னி முபாரக், ஐவரி கோஸ்டின் லாரண்ட் பேக்போ, லிபியாவின் மும்மார் கடாஃபி, மாலத்தீவின் அம்மாடோ டெளமானி தோரே, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ஜெனரல் பிரான்கோயிஸ் போஸிúஸ, எகிப்தின் முகம்மது மோர்ஸி, பர்கினா பாய்úஸாவின் பிளேஸ் காம்ப்போரே, ஜாம்பியாவின் யாஹியா ஜமேய் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேயின் தலையும் உருண்டிருக்கிறது.
ஜிம்பாப்வேயில் அரசியல் நெருக்கடி கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இருந்து வருகிறது. ஜிம்பாப்வே என்கிற நாடு ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் இருக்கிறது. ஆங்கிலமல்லாமல் 16 அதிகாரபூர்வ மொழிகளுடன், ஹராரேயைத் தலைநகரமாகக் கொண்ட ஜிம்பாப்வேயின் மொத்த மக்கள்தொகை 1.6 கோடி. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி 1965-இல் ரொடீஷியா என்ற பெயரில் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டாலும்கூட, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து ஜிம்பாப்வே முழுமையாக விடுபடவில்லை. 15 ஆண்டுகால கொரில்லா யுத்தத்தின் முடிவில் 1980-இல் ஜிம்பாப்வேயில் மக்கள் ஆட்சி மலர்ந்து, ஜிம்பாப்வே குடியரசு உருவானது.
வெள்ளையர்களுக்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தி ஜிம்பாப்வேயை குடியரசாக மாற்றிய பெருமை ராபர்ட் முகாபேவுக்கு உண்டு. 1980-இல் பிரதமராகவும், 1987 முதல் அந்த நாட்டின் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராபர்ட் முகாபே, கடந்த 37 ஆண்டு காலமாக ஏறத்தாழ ஒரு சர்வாதிகாரியாகவே செயல்பட்டு வந்தார். ஆனாலும்கூட, மக்கள் மத்தியில் ஜிம்பாப்வேக்கு காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை வாங்கித் தந்தவர் என்பதால் செல்வாக்கு இருந்துவந்தது. 
ஒரு காலத்தில் இரும்புக் கரம் கொண்டு தன்ûன் எதிர்க்க யாரும் இல்லை எனும் அளவிலான சர்வாதிகாரியாகத் திகழ்ந்த முகாபேயின் செல்வாக்கு கடந்த 10 ஆண்டுகளாக சரியத் தொடங்கியது. வயோதிகமும், உபாதைகளும் அவரை உடல்ரீதியாக பலவீனப்படுத்தின என்றால் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்து, வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது. மக்கள் மத்தியில் முகாபேவுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வந்தது. 
இந்த நிலையில்தான் கடந்த மாதம் அதிபர் முகாபே துணை அதிபர் எமர்சன் நங்கக்வாவை பதவியிலிருந்து அகற்றினார். ஜிம்பாப்வே சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து முகாபேவுக்கு இரண்டாவது இடத்தில் இருந்து வந்த போராளியான நங்கக்வாவை கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும் ஆதரிக்க முற்பட்டனர். அதற்குக் காரணம், முகாபேயின் 52 வயது மனைவியான கிரேஸ் முகாபே, அதிபரின் வயோதிகம் காரணமாகத் தன்னை அவரது வாரிசாக நியமிக்க வற்புறுத்தி வருகிறார் என்பதுதான். 
முகாபேயின் பதவி விலகலைத் தொடர்ந்து அதிபராகப் பதவியேற்க இருக்கும் எமர்சன் நங்கக்வா எந்த அளவுக்கு தன்னிச்சையுடன் செயல்பட முடியும் என்று தெரியவில்லை. ஜிம்பாப்வே ராணுவம், வாரிசு அரசியல் உருவாவதை விரும்பாததால்தான் அதிபர் முகாபேவுக்கு எதிராகத் திரும்பியது. ராணுவப் புரட்சி என்று குறிப்பிட்டால் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்காது என்பதாலும், ஜிம்பாப்வே மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதாலும் ஜெனரல் சிவெங்கா தலைமையிலான ராணுவம் அடக்கி வாசித்திருக்கிறது. விரைவிலேயே தேர்தல் அறிவிக்கப்படும் என்று நம்பலாம்.
முகாபேயின் ஆட்சி ஜிம்பாப்வேக்கு வளமையை ஏற்படுத்தவில்லை என்றாலும்கூட, அவரது சர்வாதிகாரத் தலைமையை மக்கள் முற்றிலுமாக நிராகரித்துவிடவில்லை. ஏனைய ஆப்பிரிக்க நாடுகளைப்போல, அவருக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடவில்லை. புதிய ஆட்சியின் செல்வாக்கு குறித்து தேர்தலுக்குப் பிறகுதான் தெளிவான முடிவை எட்ட முடியும். இப்போதும்கூட கருப்பர் இன பாட்டாளி மக்கள் மத்தியில் முகாபேவுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது என்பதும், அதுதான் படித்த இளைஞர்கள் மத்தியில் அவரது ஆட்சிக்கு எதிராக ஏற்பட்டிருந்த ஆத்திரத்துக்கு அணை போட்டது என்பதும் மறுக்க முடியாதவை.
இந்தியாவைப் பொருத்தவரை, கி.பி.1500 முதல் ஜிம்பாப்வேயுடன் நமக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. என்றாலும்கூட, இரு நாட்டுக்கு இடையேயான வர்த்தகம் இப்போது வெறும் 250 மில்லியன் டாலர் மட்டுமே. ஆனாலும் ஜிம்பாப்வேயின் மீதும் ஆப்பிரிக்க நாடுகளின் மீதும் இந்தியா அக்கறைக் காட்டாமல் இருக்க முடியாது. இந்த நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு நாம் பின்துணையாக இருந்திருக்கிறோம். ஜிம்பாப்வேயில் ஜனநாயகம் மலருமானால், அதற்காக மகிழ்ச்சி அடைவதில் இந்தியர்கள் முன்னணியில் இருப்பார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com