அணுகுமுறையை மாற்ற வேண்டும்!

அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கம் அரசு

அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் படித்து வந்த 16 வயதே ஆன நான்கு மாணவிகள் கடந்த வெள்ளிக்கிழமை ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, மாணவிகளின் தற்கொலைக்கான காரணங்களை அறிய, மாவட்ட ஆட்சியரால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளியின் தலைமை ஆசிரியை, வகுப்பு ஆசிரியை, இன்னொரு பள்ளி ஆசிரியை ஆகிய மூவரையும் பள்ளிக் கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட பிறகுதான், மாணவிகளின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு பொதுமக்களால் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியைகள் மீது குற்ற நடவடிக்கை வேண்டும் என்றும்; இறந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டுமென்றும்; அவர்களது குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் நிலமும், குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. 
மாணவிகளின் தற்கொலை வேதனைக்குரியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர்களது தற்கொலையைத் தொடர்ந்து எழுப்பப்படும் கோரிக்கைகள்தான் விசித்திரமாக இருக்கின்றன. இந்தப் பிரச்னையின் அடிப்படை காரணம், தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் சரியாகப் படிக்காததால் வகுப்பு ஆசிரியை அவர்களைக் கடிந்துகொண்டார் என்பதுதான். சரியாகப் படிக்காத மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் கடிந்து கொள்ளாமல் பாராட்டவா செய்வார்கள்? இல்லை, அவர்கள் எக்கேடும்கெட்டுப் போகட்டும் என்று பாராமுகமாக இருந்துவிடத்தான் முடியுமா?
கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் சாதாரணமான பிரச்னைகளுக்காக மாணவ, மாணவியர் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. தேர்வில் தோல்வி அடைந்தாலோ, போதிய மதிப்பெண் பெறாமல் போனாலோ, தாங்கள் விரும்பியதுபோல மேற்படிப்புக்கான வாய்ப்புக் கிடைக்காமல் போனாலோ, பெற்றோரோ, ஆசிரியர்களோ கண்டிக்கவோ, தண்டிக்கவோ செய்தாலோ அதன் எதிர்வினையாகத் தற்கொலை செய்துகொள்வது என்பது அதிகரித்து வருவது ஆபத்தான அறிகுறி. 
வாழ்க்கையை எதிர்கொள்ளவும், எப்படிப்பட்ட சூழலிலும் போராடி வெற்றி அடையவும், அடுத்து வரும் தலைமுறைக்குத் தன்னம்பிக்கையும் துணிவும் இல்லாமல் இருக்கிறது என்பதன் அடையாளம்தான், அதிகரித்து வரும் இதுபோன்ற தற்கொலைகள். ஒருபுறம் தற்கொலைகள் அதிகரித்து வரும் அதேவேளையில், இன்னொருபுறம் மாணவர் சமுதாயத்தில் வன்முறை உணர்வும் அதிகரித்து வருவதை நாம் கவனித்தாக வேண்டும். சக மாணவர்களையும், ஏன் ஆசிரியர், ஆசிரியைகளையேகூடத் தாக்கவும் கொலை செய்யவும் சிலர் தயங்காத சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
ஆசிரியர்கள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளவில்லை என்றும், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றும், கண்டிப்பதுடன் நின்றுவிடாமல் தண்டிக்கவும் தலைப்படுகிறார்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஐந்தாம் வகுப்புக்குக் கீழே படிக்கும் குழந்தைகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ செய்யாமல் அன்புடன் வழிநடத்திக் கற்பிக்க வேண்டும் என்பது சரி. அதேநேரத்தில், ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்கும் சிறுவர், சிறுமியர்களிடம் கண்டிப்பாக இருந்து ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதும் அவர்களது கவனம் திசை திரும்பாமல் கல்வியில் நாட்டத்தை ஏற்படுத்துவதும் ஆசிரியர்களின் கடமை என்பதையும் நாம் உணர வேண்டும். 
ஆசிரியர்களின் தரம் குறைந்துவருகிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே இருக்கிறது. அவர்களில் சிலர் ஈடுபாட்டுடன் கல்வி கற்பிப்பதில்லை என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இப்படிப்பட்ட சூழலில், மாணவ, மாணவியர் மீதும், அவர்களது வருங்காலத்தின் மீதும், அக்கறையுள்ள ஆசிரிய, ஆசிரியைகள்தான் மாணவ, மாணவியரை கண்டிக்கவும், தண்டிக்கவும் முற்படுகிறார்கள். ஓர் அரசு அதிகாரி தவறான முடிவை எடுத்தாலும்கூட, அவர் நல்லெண்ணம் கருதி அந்த முடிவை எடுத்திருந்தால், அது குற்றமல்ல என்று நிர்வாகச் சட்டம் கூறும்போது, ஓர் ஆசிரியரோ, ஆசிரியையோ மாணவ, மாணவியரின் மீதான அக்கறையின் பேரில் அவர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ முற்பட்டால் அதை மட்டும் குற்றமாகக் கருதுவது சரியல்ல.
இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் இருந்த ஆசிரியர்கள், மாணவர்களைக் கண்டித்ததையும், தண்டித்ததையும் ஒப்பிடும்போது, இன்றைய ஆசிரியர்கள் மிகவும் மென்மையானவர்களாகவே காணப்படுகிறார்கள். அரைநூற்றாண்டு காலத்திற்கு முன்னால் வரை, ஆசிரியரின் பிரம்படிக்குப் பயந்து படித்த மாணவர்கள், மிரளவும் இல்லை, வெகுளவும் இல்லை, அந்த ஆசிரியர்களை வெறுக்கவும் இல்லை. தங்கள் இறுதிக்காலம் வரை, தங்களை செப்பனிட்ட செம்மல்கள் என்று அந்த ஆசிரியர்களை இறைவனுக்கு ஒப்பாக வணங்கி வழிபட்டவர்கள்தான் அன்றைய தலைமுறையினர் அத்தனை பேரும். அதற்குக் காரணம், அன்றையத் தலைமுறைக் குழந்தைகளிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையும், அன்றைய பெற்றோர் ஆசிரியர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும்தான்.
இன்றைய மாணவ சமுதாயத்திடம் பிரச்னைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையோ, வாழ்க்கையை எதிர்கொண்டு போராடும் துணிவோ இல்லாத நிலை காணப்படுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஆசிரியர்களைத் தண்டிப்பதல்ல. பெற்றோர்களும் பள்ளிகளும் பள்ளி மாணவ - மாணவியர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுவதுதான். மதிப்பெண்கள் பெறுவது மட்டும்தான் கல்வி என்கிற எண்ணம் மாற்றப்பட்டு, நல்லொழுக்கம்தான் கல்வியின் குறிக்கோள் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com