கூடினர், பிரிந்தனர்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதவ் பாட்னாவில் கூட்டிய பேரணி உண்மையிலேயே யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு பிரம்மாண்டமாக அமைந்தது. லாலுபிரசாத் யாதவின் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கும் வடபிகாரில் உள்ள 20 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையிலும் லட்சக்கணக்கானோர் காந்தி மைதானத்தில் கூடுவார்களென்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. 
பிகார் மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றத்திற்குப் பிறகும்கூட இப்படியொரு பிரம்மாண்ட பேரணியை நடத்தும் சக்தி லாலுபிரசாத் யாதவுக்கும் அவரது ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கும் இருக்கிறது என்பதை ஞாயிற்றுக்கிழமை பேரணி உறுதிப்படுத்தியிருக்கிறது. 'பா.ஜ.க.வை அகற்றுங்கள், தேசத்தை காப்பாற்றுங்கள்' என்கிற கோஷத்துடன் கூட்டப்பட்ட அந்தப் பேரணியில் இந்தியா முழுவதிலுமிருந்து 18 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு எதிராக 18 அரசியல் கட்சிகள் ஒரே மேடையில் பங்கு பெறுவது மட்டுமே தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிர்கொள்ளப் போதுமானதல்ல. ஆனால் அதற்கான முன்னோட்டமாக இந்தப் பேரணியை கருதலாம். காங்கிரஸ் சார்பில் அதன் தலைவி சோனியா காந்தியோ, துணைத்தலைவர் ராகுல் காந்தியோ கலந்துகொள்ளாதது, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி பங்கு பெறாதது, திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி பங்கு பெற்றதால் மேடை ஏறுவதை மார்க்ஸிசிட் கம்யூனிஸ்ட் கட்சி தவிர்த்துவிட்டது என்பவை இந்தப் பேரணியின் தேசிய முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டன.
பாட்னா பேரணியில் பங்குபெற்ற 18 கட்சிகளும் பெரிய அளவில் ஒன்றுக்கொன்று தேர்தலில் பயன்படப் போவதில்லை. பிகாரின் ராஷ்ட்ரீய ஜனதா தளமோ, உத்தரப் பிரதேசத்தின் சமாஜ் வாதிகட்சியோ எந்தவிதத்திலும் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு வலுசேர்க்கப் போவதில்லை. இதேபோலத்தான் அன்றைய கூட்டத்தில் பங்குபெற்ற பல்வேறு மாநிலக் கட்சிகளும் ஏனைய கட்சிகளுக்கு அவர்களது மாநிலத்தில் செல்வாக்கு இல்லாத நிலையில் பயனடையப்போவதில்லை. இந்த மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைவது என்பது காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுமானால் தேசிய அளவில் பயனளிக்கக்கூடும். இந்த மாநில கட்சிகள், பலவீனமான நிலையில் இருக்கும் காங்கிரஸின் தலைமையை ஏற்றுக்கொள்ளுமா என்பது மிகப்பெரிய ஐயப்பாடு.
காங்கிரஸ் கட்சியும், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறது. மேற்கு வங்கத்தில் எடுத்துக்கொண்டால், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிக் கூட்டணி இரண்டில் ஒன்றுடன்தான் காங்கிரஸால் பயணிக்க முடியும். அதேபோல உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி அல்லது பகுஜன் சமாஜ் கட்சி இரண்டில் ஏதாவது ஒன்றுடன்தான் உறவு பாராட்ட முடியும். ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம், தில்லி - பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி, ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற பா.ஜ.க. அணியில் இல்லாத கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இணையத் தயாராக இல்லை. இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸ் தலைமையில் பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைவது என்பது சாத்தியமானதாகத் தெரியவில்லை. 
ராஷ்ட்ரீய ஜனதா தளம் நடத்திய அந்த மாபெரும் பேரணியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி கலந்துகொள்ளாததில் இருந்து அவர் இப்படியொரு கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் எத்தனை இடங்களில், எந்தெந்த இடங்களில் போட்டியிடும் என்பது தெளிவுபடுத்தப்படாமல் பகுஜன் சமாஜ் கட்சி பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியில் இடம்பெறாது என்று மாயாவதி தெளிவுபடுத்தியிருக்கிறார். 2014 மக்களவைத் தேர்தலில் ஓர் இடத்தில்கூட பகுஜன் சமாஜ் கட்சி வெற்றிபெறவில்லை என்றாலும் தனது 20 சதவீத வாக்குவங்கியை அது தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு வருகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. 
1989-இல் காங்கிரஸுக்கு எதிராக தேசிய முன்னணி, 1996-இல் தேர்தலுக்குப் பிறகு உருவான ஐக்கிய முன்னணி, 1998-இல் பா.ஜ.க. தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2004-இல் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகியவைபோல பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை உருவாக்குவது என்பது இப்போது சாத்தியமானதாக தெரியவில்லை. 31 சதவீதம் தேசிய அளவிலான வாக்குகளின் அடிப்படையில் 2014 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற முடிந்த நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் செல்வாக்கை எதிர்கொள்ள ஒரு சக்தி வாய்ந்த கூட்டணியை உருவாக்கும் முயற்சியின் தொடக்கமாக பாட்னா பேரணியை காங்கிரஸ் கட்சி கருதியிருந்தால், மூத்த தலைவர் குலாம்நபி ஆஸாத்தை அனுப்பியதற்குப் பதிலாக சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ கலந்து கொண்டிருந்திருப்பார்கள்.
அநேகமாக எல்லா மாநில கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டு, வாரிசு அரசியல் போன்ற சுமைகளுடன் காணப்படுவதும், எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் வலிமை காங்கிரஸுக்கு இல்லாமல் இருப்பதும், பா.ஜ.க.வுக்கு சாதகமான சூழல் தொடர்வதை உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவிலுள்ள 18 அரசியல் கட்சிகள் பாட்னாவில் கூடினர், பிரிந்தனர். அவ்வளவே!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com