காராகிரக நெரிசல்!

நாகரிக சமுதாயத்தில் சிறைச்சாலை என்பது தண்டிக்கப்பட்டவர்களை

நாகரிக சமுதாயத்தில் சிறைச்சாலை என்பது தண்டிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்கப்படும் இடம் என்பதாக அல்லாமல், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மனம் திருந்தவும் தண்டனைக்குப் பிறகு அவர்கள் மற்றவர்களைப்போல வாழவும் வழிகோலுகிற சீர்திருத்தக்கூடமாக இருக்க வேண்டும். கடந்த அரைநூற்றாண்டு காலமாக உலகளாவிய அளவில் சிறைச்சாலைகளின் வசதிகள் மேம்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளைக் கையாளும் முறையிலும் மாற்றங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. 
இந்தியாவைப் பொருத்தவரை ஒருசில சிறைச்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு அல்லது புதிதாகக் கட்டப்பட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன என்றாலும்கூட, சிறைக்காவலர்களின் அணுகுமுறையிலும், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் நடத்தப்படும் விதத்திலும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. தவறிழைத்து தண்டிக்கப்பட்டவர்கள், தண்டனைக்காலம் முடிந்து வெளியேவரும்போது புதிய மனிதர்களாக வெளிவருவது இல்லை என்பது ஒரு புறம், தவறிழைக்காத விசாரணைக் கைதிகள்கூட சிறைக்குச் சென்று வெளியே வரும்போது தவறான வழிக்குத் திரும்புபவர்களாக மாறிவிடுகின்றனர் என்பது இன்னொருபுறம். இதுதான் இன்றைய இந்தியச் சிறைச்சாலைகளின் நிலைமை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் ஒவ்வொருவரும் முதலில் வெளியிடும் அறிக்கை, நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பேன் என்பதுதான். ஆனால், அந்த வழக்குகளின் எண்ணிக்கை குறைவது இல்லை. அதனால் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. 
விசாரணைக் கைதி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தால் சாட்சியங்கள் கலைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர். இவர்களில் பலரும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவும் வாய்ப்புண்டு. அப்படியிருந்தும் தேவையில்லாமல் பலர் நீண்ட நாட்கள் சிறைக்கொட்டடியில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.
2015-இல் இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 2.82 லட்சம். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் குறைவான அதிகம் படிப்பறிவில்லாத இளைஞர்கள். ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பே, தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேல் சிறையில் கழித்திருக்கும் விசாரணைக் கைதிகள் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்திய குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2014-இல் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றங்களுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தும்கூட, இதுவரை இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரியது. 
விசாரணைக் கைதிகள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. கைதிகளின் உடல் நலமும், சிறைச்சாலையின் சுகாதார ஏற்பாடுகளும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலைகளின் பாதுகாப்பும்கூட இதனால் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆட்டுக்கொட்டடியில் அடைத்து வைத்திருப்பதுபோலக் கைதிகள் அடைத்து வைக்கப்படுவது அவர்களது மனநிலையைக் கடுமையாக பாதித்து, நிரபராதிகள் குற்றவாளிகளாகவும், குற்றவாளிகள் கடும் குற்றவாளிகளாகவும் மாறிவிடும் போக்குக்கு வழிகோலுகிறது. சிறைச்சாலைத் தற்கொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் இது ஒரு முக்கிய காரணம்.
கடந்த மாதம் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, இந்தியாவின் சிறைச்சாலைகள் சிலவற்றில் 200%-க்கும் அதிகமான கைதிகள் இருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் குறிப்பிட்டிருந்தார். 'மாதிரி சிறைச்சாலை 2014 கையேட்டின்படி, ஒவ்வொரு சிறைக்கைதிக்கும் குறைந்தது 8.92 சதுர மீட்டர் அளவிலான இடம் தரப்பட வேண்டும். ஆனால், எவ்வளவு இடம் வழங்கப்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரம் இல்லை' என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் 1,401 சிறைச்சாலைகள் இருக்கின்றன. சிறைச்சாலை மாநில பட்டியலில் இருந்தாலும் அதனை மேம்படுத்த 2002-இல் மத்திய அரசு ரூ.1,800 கோடி ஒதுக்கியது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தின் புழல் சிறைச்சாலை உள்பட 125 புதிய சிறைச்சாலைகள் கட்டப்பட்டன. ஏனைய சிறைச்சாலைகளில் 1,579 அறைகள் அதிகரிக்கப்பட்டன. இத்தனைக்குப் பிறகும்கூட சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன என்றால், அதற்குக் காரணம் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கைதான். 
இந்திய சிறைச்சாலை புள்ளிவிவரம் 2015-இன்படி, இந்தியாவிலுள்ள 1,401 சிறைச்சாலைகளில் இருக்கும் 4,19,623 கைதிகளில் 67 சதவீதம் பேர் அதாவது, 2,82,076 பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் பலரும் இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள்.
முன்பே கூறியதுபோல, சிறைச்சாலை என்பது குற்றவாளிகள் மனம் திருந்தி புதிய மனிதர்களாக வெளியில் வருவதற்காக ஏற்படுத்தப்பட்டவையாக இல்லை. விசாரணைக் கைதிகளும் சிறு குற்றம் புரிந்தவர்களும் சிறைச்சாலையிலிருந்து கடும் குற்றவாளிகளாக வெளியேறும் அவலம் தடுக்கப்பட வேண்டுமானால், சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடி குறைக்கப்பட வேண்டும். தேவையில்லாமல் குற்றவாளிகள் விசாரணைக் கைதிகளாக தொடர்வது தவிர்க்கப்பட வேண்டும். அனைவருக்கும் சட்ட உதவியும், விரைந்த தீர்ப்பும் மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com