ராணுவ சீர்திருத்தம்!

எல்லைப்புறத்தில் பதற்றம் அவ்வப்போது அதிகரித்துவரும்

எல்லைப்புறத்தில் பதற்றம் அவ்வப்போது அதிகரித்துவரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை முடுக்கிவிட்டு பாதுகாப்புப் படைகளில் சீர்திருத்தத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். மத்திய அமைச்சரவை முதல் கட்டமாக காலாட் படைகளின் சீர்திருத்தத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளித்திருக்கிறது. 
ராணுவம், கப்பல் படை, விமானப் படை மூன்றிலுமே நேரிடையாக களத்தில் போராடும் வீரர்கள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு பின்துணையாக இருக்கும் பணியாளர்களும் இருக்கிறார்கள். தொழில்நுட்பம் அதிகரித்துவிட்டிருக்கும் நிலையில் போர் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஏனைய பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்கிற திட்டம் நீண்ட நாட்களாகவே இருந்துவருகிறது. ஆனால், செயல்படுத்தப்படவில்லை.
இப்போது இந்திய ராணுவத்தில் சுமார் 40,525 உயர் அதிகாரிகளும், ஏனைய பதவியினர் 11.5 லட்சம் பேரும் இருக்கிறார்கள். இன்றைய சூழலில் தேவையில்லாத பக்கபல ஊழியர்களைக் குறைத்து நேரிடையாகக் களத்தில் போராடும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
முதல் கட்டமாக ராணுவத்தில் சீர்திருத்தத்தை மேற்கொள்வது என்றும், கப்பல் படை, விமானப் படையில் அடுத்தடுத்த கட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவது என்றும் மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருக்கிறது. 2019-க்குள் சீர்திருத்தங்களை செய்துமுடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நிர்மலா சீதாராமன் அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பதால் இந்தச் சீர்திருத்தம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரும் முயற்சிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். 
உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவமான இந்திய ராணுவத்தின் தொடக்கம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் இருந்து தொடங்குகிறது. 1776-இல் கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கத் தொடங்கிய இந்திய ராணுவம், ஆரம்பத்தில் பஞ்சாப், பெங்கால், மெட்ராஸ், மும்பை என்று நான்கு பிரிவுகளாக இயங்கி வந்தது. இந்தியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நிறுவுவதில் இந்திய ராணுவம் பெரும்பங்கு வகித்தது. 
1912-இல் டேராடூனில் ராணுவக் கல்லூரி நிறுவப்பட்டு அதில் இந்தியர்களும் அனுமதிக்கப்படத் தொடங்கினர். 1932 வரையிலும் வெறும் 66 அதிகாரிகள் மட்டும்தான் இந்திய ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1932-இல் இந்திய ராணுவ அகாதெமி நிறுவப்பட்டதன் பிறகுதான் இந்திய ராணுவம் முழுமையான போர்ப்படையாக உருவெடுக்கத் தொடங்கியது. இந்திய விடுதலையைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரிவினைக்குப் பிறகு லெப்டினன்ட் ஜெனரல் கே.எம். கரியப்பாவின் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முப்படைகளும் இயங்கத் தொடங்கின.
அதிகமான வீரர்களைக் கொண்ட இரண்டாவது ராணுவமாகத் திகழும் இந்திய ராணுவம், 1962 சீன யுத்தத்தில் பின்னடைவை எதிர்கொள்ள நேர்ந்தது என்றாலும், அதற்குப் பின்னால் நடந்த பாகிஸ்தான் போரிலும், வங்க தேச பிரிவினையிலும், கார்கில் யுத்தத்திலும் தனது வலிமையை நிலைநாட்டத் தவறவில்லை. சமீபத்திய டோக்கா லாம் பதற்றத்தில் இந்திய ராணுவத்தின் தன்னம்பிக்கையும் உறுதியும் உலகையே நிமிர்ந்து உட்கார்ந்து வியந்து பார்க்க வைத்தது. 
எல்லைப்புறப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் பெரும்பாலும் உள்நாட்டு பேரிடர்களில் உதவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களைப் பேரிடர் நிவாரணத்துக்கு பயன்படுத்துவதைக் குறைத்து, அதற்கென்று தனியாக ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற திட்டம் நீண்ட நாட்களாக செயல்படுத்தப்படாமலேயே இருந்து வருகிறது. அதனால் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதில் இளைஞர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. இதுவும்கூட, அமைச்சரவையின் முன்னால் உள்ள ராணுவ சீரமைப்பு குறித்த சவால்களில் ஒன்று.
1980-இல் கிருஷ்ணா ராவ் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அர்ஜுன் சிங் குழு, கார்கில் மீள்பார்வை குழு, நரேஷ் சந்திரா குழு ஆகியவை பல பரிந்துரைகளை அரசுக்கு அளித்தன. முதலில் அவை ஒத்திப்போடப்பட்டன. பிறகு கிடப்பில் போடப்பட்டன. முப்படைகளுக்கும் தலைமைத் தளபதியை நியமிப்பது, இந்தியாவின் மொத்த உற்பத்தி விகிதத்தில் 3% பாதுகாப்புக்காக ஒதுக்குவது உள்ளிட்ட பரிந்துரைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் வரம்புக்குட்பட்டவை அல்ல. அரசியல் தலைமையும், அதிகார வர்க்கமும் இவை குறித்து முடிவெடுக்காமல் தட்டிக் கழிக்கின்றன.
ராணுவ சீர்திருத்தத்தை நீண்ட நாட்களாகவே மத்திய ஆட்சியில் இருந்த அரசுகள் புறக்கணித்து வந்திருக்கின்றன. அதில் ஒரு முக்கியமான கோரிக்கை முப்படைகளையும் ஒருங்கிணைப்பது. ராணுவம், விமானப் படை, கப்பல் படை மூன்றுக்கும் போக்குவரத்தில் தொடங்கி எல்லாவற்றுக்கும் தனித்தனியான அமைப்புகள் இயங்கி வருகின்றன. முப்படைகளையும் ஒருங்கிணைக்கும்போது பொதுவான பல அம்சங்களை ஒருங்கிணைத்துவிட முடியும். பல்வேறு நாடுகளிலும் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது.
போருக்கான தயார் நிலை குறித்தும், தேவையில்லாத செலவினங்கள் குறித்தும் தீர ஆராய்ந்து பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் டி.பி. ஷெகட்கர் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஷெகட்கர் குழு 188 பரிந்துரைகளை வழங்கியது. அவற்றில் 99 பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டது. அதில் ராணுவத்துடன் தொடர்பான 65 பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவது என்றும் கப்பல் படை, விமானப் படைதொடர்பான ஏனைய 34 பரிந்துரைகளை அடுத்தகட்டமாக செயல்படுத்துவது என்றும் மத்திய அமைச்சரவை இப்போது முடிவெடுத்திருக்கிறது.
முதல் கட்டமாக 57,000 ராணுவ வீரர்கள் களப்பணிக்கு மாற்றப்பட இருக்கிறார்கள். இவர்கள் ராணுவத்தின் அலுவலகப் பணிகளிலும், ஏனைய உதவிப் பிரிவுகளிலும் பணியாற்றி வருபவர்கள். எல்லைப்புறப் பாதுகாப்பு வீரர்களாக இவர்களை பயன்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, இந்திய ராணுவம் 39 மாட்டுப் பண்ணைகளை நடத்தி வருகிறது. இந்தப் பண்ணைகளில் 25,000 பசுக்களிலிருந்து சுமார் 21 கோடி லிட்டர் பால் ராணுவத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. 1889 முதல் செயல்பட்டுவரும் இந்த மாட்டுப் பண்ணைகள் அம்பாலா, கொல்கத்தா, ஸ்ரீநகர், ஆக்ரா, பதான்கோட், லக்னெள, மீரட், அலாகாபாத், குவாஹாட்டி உள்ளிட்ட நகரங்களில் 20,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கின்றன. அதில் 2,000 ராணுவ வீரர்கள் பணிபுரிகிறார்கள்.
தேவையில்லாத பிரிவுகளை அகற்றுவது, கூடுதல் ராணுவ வீரர்களைக் களத்தில் நேரடியாகப் போரிடுவதற்குத் தயார் நிலையில் வைத்திருப்பது, அநாவசியச் செலவுகளை அகற்றுவது உள்ளிட்ட ஷெகட்கர் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றும் பொறுப்பு புதிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வந்திருக்கிறது. என்ன செய்யப்போகிறார் பார்ப்போம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com