துப்பாக்கியா பேசுவது?

பெங்களூருவில் 'லங்கேஷ்' பத்திரிகையின் ஆசிரியர் கெளரி லங்கேஷ்

பெங்களூருவில் 'லங்கேஷ்' பத்திரிகையின் ஆசிரியர் கெளரி லங்கேஷ் அடையாளம் காணப்படாத சிலரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கிப் போட்டிருக்கிறது. தேர்ந்த கொலையாளிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைதான் இது என்பது தெளிவு.
இடதுசாரி சிந்தனையும், விளிம்பு நிலை மனிதர்கள் குறித்த அக்கறையும், அதிகாரவர்க்கத்தின் தவறுகளை எதிர்க்கும் துணிச்சலும், மதவாதத்துக்கு எதிரான மனநிலையும் கொண்டிருந்தவர் கெளரி லங்கேஷ். இன்னாரால்தான் கெளரி லங்கேஷ் கொல்லப்பட்டிருக்கிறார் என்று விசாரணை தொடங்கும் முன்பே முடிவுகட்டி விட முடியாதுதான். அதேநேரத்தில் அவருக்கென்று தனிப்பட்ட முறையில் எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை என்பதால் இது அவரது கருத்துக்கு எதிரானவர்களால் நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை.
கெளரி லங்கேஷின் படுகொலையை, இதற்கு முன்பு நடந்த இதேபோன்ற நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. 2015-இல் கன்னட எழுத்தாளரும் இறைமறுப்பாளருமான பேராசிரியர் எம்.எம். கலபுர்கி, தார்வாடில் கொல்லப்பட்டார். 2013-இல் பகுத்தறிவாதிகளான நரேந்திர தபோல்கரும், கோவிந்த் பன்சாரேயும் புணே நகரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
எம்.எம். கலபுர்கி கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இத்தனைக்கும் கர்நாடகத்தில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி.
கொலையாளிகள் தாங்கள் சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொள்வோம் என்கிற அச்சமில்லாமல் படுகொலையில் ஈடுபடுகிறார்கள் எனும்போது அவர்களுக்கு வலிமையான பின்னணி இருக்கிறது என்பதுதான் பொருள். பல ஆண்டுகளாக இதுபோன்ற படுகொலை நிகழ்வுகளில் விசாரணை இழுத்தடிக்கப்படுகிறது என்று சொன்னால் அதற்கு காரணம் அவர்கள் காவல் துறையினரால் அல்லது ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதுதான் பொருள்.
தங்களது கருத்துக்கு எதிரானவர்களின் வாயை மூடுவதற்கு அவர்களைப் படுகொலை செய்வது என்பது ஏனைய சுதந்திர சிந்தனையாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்று இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் கருதுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. இந்த கொலைகளில் எல்லாம் கவலையளிக்கும் சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. கொலையாளிகள் தங்களது எண்ணத்தை ரகசியமாக நிறைவேற்றாமல் துணிந்து வெளிப்படையாகவே தாக்கியிருக்கிறார்கள்.
குறிப்பாக கெளரி லங்கேஷ் படுகொலையில் சி.சி.டி.வி. கேமராக்கள் இருப்பது அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் அவர்கள் கெளரி லங்கேஷை படுகொலை செய்ய துணிந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அது எம்.எம். கலபுர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோரது படுகொலையைப் போலவே திட்டமிட்ட வெறித்தனமான தாக்குதலாகத்தான் இருக்க முடியும்.
துப்பாக்கி ரவைகளிலிருந்தும், கைரேகைகளிலிருந்தும், சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்ட பல்வேறு தடயங்களிலிருந்தும் நிச்சயமாக விசாரணை முடுக்கிவிடப்பட்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஆனால் இல்லை. கெளரி லங்கேஷின் படுகொலையைத் தொடர்ந்து முந்தைய கொலைகள் இப்போது பேசப்படுகின்றன, அவ்வளவே. கெளரி லங்கேஷின் படுகொலையும் முந்தைய சம்பவங்களைப் போலத் துப்புத் துலக்கப்படாமல் கிடப்பில் போடப்படலாம் என்பதை நாம் உணர வேண்டும்.
கெளரி லங்கேஷின் படுகொலையைத் தொடர்ந்து நாடுதழுவிய அளவில் நீதி கேட்டு எதிர்ப்பலை உருவாகியிருக்கிறது. ஊடகங்கள் இந்தப் படுகொலையை முன்னிலைப்படுத்துகின்றன. சமூக வலைத்தளங்களில் பரவலாக இதுகுறித்த விவாதங்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், இந்த வழக்குகள் குறித்து காவல் துறையின் மெத்தனத்தையும், ஏன் விசாரணை அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள் என்பது குறித்தும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் பயன் அளிக்குமே தவிர, வெட்டி விவாதங்களும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளும் எந்தவித பலனையும் அளிக்கப் போவதில்லை.
சர்வதேச பத்திரிகை சுதந்திர குறியீட்டின்படி, கடந்த ஆண்டு இந்தியா, பாகிஸ்தானை விட மூன்று புள்ளிகள் மேலானதாக மட்டுமே இருக்கிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லை என்கிற உண்மையை சர்வதேச பத்திரிகை சுதந்திர குறியீடு வெளிச்சம் போடுகிறது.
2015-இல் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத 180 நாடுகளின் பட்டியலில் 136-ஆவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 133-ஆவது இடத்துக்கு வந்திருக்கிறது. 1992 முதல் இன்றுவரை 33 பத்திரிகையளர்கள் குறிப்பிட்ட காரணத்துக்காக கொல்லப்பட்டிருக்கிறார்கள். 24 பேர் ஏன் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான காரணம் கூட இதுவரை கண்டறியப்படவில்லை. கொல்லப்பட்டிருக்கும் 70% பத்திரிகையாளர்கள் அச்சு ஊடகத்தைச் சார்ந்தவர்கள். கொலையாளிகளில் 96% பேர் தண்டிக்கப்படாமல் தப்பியிருக்கிறார்கள். 
எங்கேயோ மெக்ஸிகோ, துருக்கி, உக்ரைன் போன்ற நாடுகளில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதும், கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்படுவதும் நம்மை கொதித்தெழ வைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், நமக்கு அருகிலேயே, சில நூறு கி.மீ. தூரத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராகத் துப்பாக்கி ரவைகள் பயன்படுத்தப்படுகின்றன என்கிற போதாவது நாம் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து சிந்திக்க வேண்டும். இதற்காகத்தானா நாம் விடுதலை பெற்றோம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com