வேதனையளிக்கும் மெத்தனம்!

பன்றிக் காய்ச்சல் நாடு தழுவிய அளவில் மீண்டும்

பன்றிக் காய்ச்சல் நாடு தழுவிய அளவில் மீண்டும் அசுர வேகத்தில் பரவிக் கொண்டிருப்பதைப் பற்றிய போதிய கவனமோ விழிப்புணர்வோ மக்கள் மத்தியில் காணப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இன்ஃபுளூயன்சா-ஏ என்கிற நச்சுக்கிருமியால் ஏற்படும் நோய்தான் பன்றிக் காய்ச்சல் என்று பரவலாக அறியப்படுகின்ற விஷ நோய்த் தொற்று. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு பன்றிகளிலிருந்து இந்தத் தொற்று பரவியது என்பதால் அது பன்றிக் காய்ச்சல் என்று அறியப்படுகிறதே தவிர இப்போதைய இந்த விஷக் காய்ச்சலுக்கும் பன்றிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
இந்தக் காய்ச்சலுக்கு காரணமான "ஹெச்1 என்1' என்கின்ற நச்சுயிரி காற்றின் மூலமும், இதனால் பாதிக்கப்பட்டவர்களின் தொடுகை (ஸ்பரிசம்) மூலமும் பரவுகிறது. இரண்டு ஆண்டு
களுக்கு முன்பு பரவலாக காணப்பட்ட இந்த நோய்த் தொற்று அநேகமாக செயலிழந்துவிட்டது என்று கருதி வந்த நிலையில் இப்போது மீண்டும் பெரிய அளவில் பரவத் தொடங்கியிருப்பது பேராபத்து விளைவிக்கக் கூடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நச்சுயிரியைக் குறித்து ஆய்வு செய்த தேசிய நச்சுயிரியியல் நிறுவனம் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி) இந்த தொற்றில் சில அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கண்டறிந்திருக்கிறது. இதற்கு முன்பு காணப்பட்ட கலிபோர்னியா ஸ்ட்ரேய்ன் என்கிற "ஹெச்1 என்1' நச்சுயிரி செயலிழந்துவிட்டது என்றும் இப்போது பரவி வரும் நச்சுயிரி "மிச்சிகன் ஸ்ட்ரேய்ன்' என்கிற பிரிவைச் சேர்ந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இந்தப் புதிய "ஹெச்1 என்1' நச்சுயிரி பிரிவு குறித்து அதிகமாக ஆய்வுகள் நடத்தப்படவில்லை. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்தப் புதிய நச்சுயிரியை எதிர்கொள்ளப் போதுமான எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக்கிறது என்கிற கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது தேசிய நச்சுயிரியல் நிறுவனம்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் பன்றிக் காய்ச்சல் பரவியபோது 2000க்கும் அதிகமான பேர் உயிரிழந்தனர். புதிய "மிச்சிகன் ஸ்ட்ரேய்ன்' என்கிற "ஹெச்1 என்1' நச்சுயிரிக்கான எதிர்ப்புச் சக்தி குறைவாக காணப்படுகிறது எனும்போது இந்த ஆண்டு இதனால் ஏற்படும் பாதிப்பு அதைவிட கடுமையாக இருக்கும் என்கிற அச்சம் மேலிடுகிறது.
கடந்த எட்டு மாதங்களில் 22 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 1,100க்கும் அதிகமான மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏனைய நோய்த் தொற்றுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளைப் போலவே இந்தப் புள்ளிவிவரமும் உண்மையான எண்ணிக்கையை பிரதிபலிக்கிறதா என்பது சந்தேகம்தான்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய மாதங்களைவிட அதிகமான பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது பல்வேறு மாநிலங்களிலிருந்து மத்திய சுகாதார அமைச்சகம் பெற்றிருக்கும் புள்ளிவிவரங்களிலிருந்து தெரிகிறது. இந்த நச்சுயிரித் தொற்று புதிய பல பகுதிகளுக்குப் பரவி வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உடனடியாக இந்த நச்சுத் தொற்றுப் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் போனால் நாடு தழுவிய அளவில் பன்றிக் காய்ச்சல் பரவி பேரழிவை ஏற்படுத்தும் என்கிற அச்சம் எழுகிறது.
பன்றிக் காய்ச்சலால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள்தான். பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்தும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் மருத்துவமனைகளிலிருந்தும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்தும் வந்தவண்ணம் இருக்கின்றன. 2015-லும் அதற்கு முன்பும் பெரிய அளவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்
படாத தமிழ்நாடும் கர்நாடகமும்கூட இந்த முறை பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஆண்டில் கர்நாடகத்திலிருந்து மட்டும் 3,000க்கும் அதிகமான பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. தமிழகம் குறித்த முழுமையான புள்ளிவிவரங்கள் திரட்டப்படவும் இல்லை; கிடைக்கவும் இல்லை. ஆனால், தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருவது தெரிய வந்திருக்கிறது.
பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதால் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக் கூடும் என்கிற அச்சத்தை தேசிய நச்சுயிரியியல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இன்றைய நிலையில் பன்றிக் காய்ச்சல் மரண விகிதம் 5% முதல் 10% வரை காணப்படுகிறது. இந்த அளவு மிகவும் அதிகம். வழக்கமாக அக்டோபர் மாதம்தான் இந்த நச்சுயிரித் தொற்று மிகவும் வீரியமாக பரவுவது வழக்கம் என்பதால் உடனடி நடவடிக்கைகள் ஓரிரு வாரங்களில் எடுக்கப்பட்டாக வேண்டும்.
பன்றிக் காய்ச்சல் பரவிக் கொண்டிருப்பது நன்றாகவே தெரி
கிறது. ஆனாலும்கூட அதை எதிர்கொள்ளவோ அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவோ முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை. கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோருக்கு சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதும், தடுப்பூசி போடுவதன் மூலம் நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதும் அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டாக வேண்டும். சாதாரண காய்ச்சலுக்கான அடை
யாளங்கள்தான் பன்றிக் காய்ச்சலுக்கும் காணப்படும் என்பதால் மக்கள் மத்தியில் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தி உடனடி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
மக்கள் நல்வாழ்வுத் துறை இயந்திரம் தனது மெத்தனத்தைக் கைவிட்டு பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் உடனடியாகக் களம் இறங்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com