மனசாட்சியின் குரல்!

தனது வெளிப்படையான பேச்சாலும், ஊழலுக்கு எதிரான

தனது வெளிப்படையான பேச்சாலும், ஊழலுக்கு எதிரான கருத்துகளாலும் தனது மாமனாரான அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியவர் என்கின்ற குற்றச்சாட்டு(?) இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்திக்கு உண்டு. ஆளும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தாலும்கூட, ஆட்சியில் நடக்கும் தவறுகளையும் முறைகேடுகளையும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பெரோஸ் காந்தி தட்டிக்கேட்கத் தவறியதில்லை.
இந்தியக் காப்பீட்டுக் கழகத்துடன் தொடர்புடைய முந்த்ரா முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னையை எழுப்பியவர் அவர்தான். அதன் விளைவாக பண்டித நேருவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான டி.டி. கிருஷ்ணமாச்சாரி தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 
ஆளும்கட்சி உறுப்பினராக இருந்தாலும்கூட அரசு தவறிழைக்குமேயானால் அதை தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கு உண்டு என்று ஆணித்தரமாக உரைத்தவர் பெரோஸ் காந்தி. இப்போது, பெரோஸ் காந்தியின் மரபணுவில் உதித்த அவரது பேரனும், சஞ்சய் காந்தியின் மகனுமான உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் வருண் காந்தி தனது தாத்தாவின் அடிச்சுவட்டை பின்பற்றுகிறார்.
மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தியின் மகனான அவர், மத்திய அரசின் கொள்கை முடிவுகளையும் நாடாளுமன்ற நடைமுறைகளையும் விமர்சிக்க முற்பட்டிருப்பது ஆளும்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், அவரது நியாயமான விமர்சனங்களை யாராலும் புறந்தள்ளிவிட முடியவில்லை. வருண் காந்தி பேசியிருக்கும் சில கருத்துகள் நாடு தழுவிய அளவில் விவாதிக்கப்பட வேண்டிய, அரசால் நடைமுறைப்படுத்த வேண்டியவை. இந்திய குடிமகனின் மனசாட்சியின் குரலாக வருண் காந்தியின் குரல் ஒலிக்கிறது. 
ஆளும்கட்சி, நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவையிலும் எல்லா விவாதங்களுக்கும் கொறடா மூலம் உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் செயலுக்குக் கண்டனம் எழுப்பியிருக்கிறார் வருண் காந்தி. குறிப்பிட்ட கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற ஒரே காரணத்துக்காக, அந்தக் கட்சியின் எல்லா முடிவுகளுக்கும் அந்த உறுப்பினர் கட்டுப்பட வேண்டுமென்பது மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் கருத்துக்கு வாய்ப்பூட்டு போடுவதாக அமைகிறது என்கிற வருண் காந்தியின் கருத்தை ஆமோதிக்கத் தோன்றுகிறது. 
'அரசியல் கட்சிகளால் 90% பிரச்னைகளிலும் கொறடா உத்தரவு தரப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் கருத்தை வெளிப்படுத்த முடியாமல் வாய்ப்பூட்டு போடப்படுகிறது. ஆட்சிக்கு எதிரான தீர்மானங்கள் வரும்போதும், முக்கியமான பிரச்னைகளிலும் கொறடா கட்டளை இடுவதன் மூலம் ஆட்சி கவிழாமல் பார்த்துக் கொள்வதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும்கட்சிக்கு சாதகமாக கருத்துத் தெரிவிக்காமல் தடுப்பதிலும் தவறில்லை. ஆனால், எல்லா பிரச்னைகளிலும் கொறடாவின் மூலம் உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டுப் போடுவது என்பது ஜனநாயக விரோதம். 
குறைந்தது 50% பிரச்னைகளில் அரசியல் கட்சிகள் தங்களது உறுப்பினர்களின் ஆக்கபூர்வமான கருத்துகளை - அவர்கள் சார்ந்த கட்சிக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும்கூட- வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். ஒவ்வோர் உறுப்பினரும் கருத்துகளை வெளிப்படுத்த விரும்புவதை கொறடா உத்தரவு கட்டுப்படுத்துகிறது. அதன்மூலம் உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. விவாதக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது' என்று வருண் காந்தி வெளியிட்டிருக்கும் கருத்தை கரவொலி எழுப்பிப் பாராட்டத் தோன்றுகிறது.
வருண் காந்தி இன்னொரு முக்கியமான கருத்தையும் முன்மொழிந்திருக்கிறார். இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள அரசியல் சட்டத்திருத்தம் தேவைப்படும் என்றாலும்கூட, ஆளும் கூட்டணியும் எதிர்க்கட்சிகளும் இதுகுறித்துத் தீவிரமாக சிந்திக்க வேண்டியது அவசியம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இணையக் கோரிக்கை என்கிற வழிமுறை பின்பற்றப்படுகிறது. இந்த வழிமுறை இந்தியாவிலும் பின்பற்றப்படுமானால் நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளின் கதவுகள் உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல், சாமானியர்களுக்கும் திறக்கப்படும். சரியான நேரத்தில் அதை எடுத்துரைக்க முற்பட்டிருக்கிறார் வருண் காந்தி. 
இந்த வழிமுறையின்படி 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பிரதமருக்கோ, முதலமைச்சருக்கோ, துறை தொடர்பான அமைச்சர்களுக்கோ, இணையத்தின் மூலம் மனு அனுப்பினால், அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கக் கடமைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட மனு, லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களால் அனுப்பப்படுமேயானால், அந்தக் கோரிக்கை நாடாளுமன்றத்தாலோ, சட்டப்பேரவைகளாலோ விவாதிக்கப்பட்டே தீர வேண்டும். 
அனைவருக்கும் வாக்காளர் அடையாள எண்ணும், ஆதார் எண்ணும் அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தியாவிலுள்ள குடிமக்கள், தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு வாய்ப்பூட்டு இடப்படுகின்ற கொறடா முறையால் கட்டுப்படுத்தப்படும்போது, தங்களது கருத்தை வெளிப்படுத்தும் ஜனநாயக உரிமையை இந்த வழிமுறை வழங்குகிறது என்கிற வருண் காந்தியின் கருத்தை ஆமோதிக்காமல் இருக்க முடியவில்லை.
ஒவ்வோர் இந்திய குடிமகனின் மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது வருண் காந்தியின் குரல். பாட்டன் பெரோஸ் காந்தியின் அறச்சீற்றமும், தந்தை சஞ்சய் காந்தியின் செயல் துடிப்பும், பாட்டி இந்திரா காந்தியின் துணிவும் வருண் காந்தியிடம் காணப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com