வெள்ளத்தில் வாழ்வாதாரம்!

அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு

அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு சர்தார் சரோவர் அணைக்கு 1961-இல் அடிக்கல் நாட்டியபோது, இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 11 வயதுச் சிறுவன். 56 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 67-ஆவது பிறந்த நாளில், சர்தார் சரோவர் அணையைத் தேசத்துக்கு அர்ப்பணித்திருக்கிறார் பிரதமர் மோடி. இத்தனை ஆண்டுகளாக இந்த அணை விவாதப் பொருளாகத் தொடர்ந்ததற்குக் காரணம், வளர்ச்சிக்கும், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் இடையிலான போராட்டம்தான்.
1979-இல் நர்மதை நதிநீர் பங்கீட்டு ஆணையம் 3,000 சிறிய, 135 நடுத்தர, 30 பெரிய அணைகளை நர்மதை நதியில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது. அவற்றில் நர்மதா சாகர், சர்தார் சரோவர் இரண்டு அணைகளும் அடங்கும். மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிர மாநிலங்கள் வழியே 1,312 கி.மீ. பாய்ந்து கடைசியில் அரபிக்கடலில் கலக்கிறது நர்மதை நதி. இதன் நடுவே எழுப்பப்பட்டிருக்கும் சர்தார் சரோவர் அணையின் மூலம் குஜராத் மாநிலத்திலுள்ள 21 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதியும், அந்த மாநிலத்திலுள்ள 18,144 கிராமங்களில் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குக் குடிநீர் வசதியும் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு.
எந்தவொரு வளர்ச்சித் திட்டமும், அதனுடன் சில அழிவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. அந்தத் திட்டம் ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தொலைநோக்குப் பார்வையில் கருத்தில் கொண்டுதான், வளர்ச்சித் திட்டத்தைத் திட்டமிட வேண்டும் என்பதுதான் பகுத்தறிவின்பாற்பட்ட செயல்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, பெரிய அணைகள் வளர்ச்சியின் அடையாளமாகக் கருதப்பட்டன. அந்தக் கருத்து இப்போது தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது. 1950-இல் பண்டித ஜவாஹர்லால் நேரு, அணைகளை 'இந்தியாவின் ஆலயங்கள்' என்று வர்ணித்தார். காற்றை மாசுபடுத்தாத நீர்மின் நிலையங்களின் மூலம் மின்சாரம் கிடைப்பதுடன், விவசாயத்துக்குத் தொடர்ந்து பாசன வசதியும் இதன் மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பண்டித நேருவே, தனது கருத்தைப் பிறகு மாற்றிக் கொண்டார் என்பதுதான் உண்மை. 1958-இல் பெரிய அணைகள் மீதான இந்தியர்களின் பிரமிப்பு அர்த்தமற்றது என்று கூறிய அவர், சிறிய தடுப்பணைகள் அமைப்பதை ஆதரிக்கத் தொடங்கினார். 1957-இல் மாநில முதல்வர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், சுற்றுச் சூழலையும், பல்லுயிர் பெருக்கத்தையும் பாதிக்காத வகையில் மட்டுமே வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சர்வதேச அளவிலும்கூட, பெரிய அணைகள் கட்டுவது முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது என்பதுதான் அதற்குக் காரணம். அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான அணைகள் அகற்றப்பட்டுவிட்டன என்பது பலருக்கும் தெரியாது. சிறிய அணைகளாகவே இருந்தாலும்கூட அதனால் தண்ணீரின் தரம் குறைகிறது என்றும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்றும், 'அமெரிக்கன் ரிவர்ஸ்' என்கிற அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.
அணைகள் அட்லாண்டிக் சாலமன், ஸ்டர்ஜியல்ஸ் உள்ளிட்ட மீன்களின் வழித்தடத்தில் குறுக்கிட்டதால், அந்த மீன் இனங்கள் அழிந்து விட்டிருக்கின்றன. எகிப்தில் கட்டப்பட்ட அஸ்வான் அணையால் நைல் நதி பாயும் பூமியில் விளைச்சல் குறைந்திருப்பதுடன், தொற்றுநோய்கள் உருவாகி இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, இதுபோன்ற பெரிய அணைகள் கட்டப்படுவதால், பல்லாயிரம் பேர் தங்களது இருப்பிடத்திலிருந்து இடம்பெயர்வதுடன் அவர்களது வாழ்வாதாரமும் சிதைகிறது. வனப்பகுதிகள் அழிகின்றன. பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் ஆதிவாசிகளின் குடியிருப்புகளைப் போலவே அவர்களது வாழ்க்கையும் அணைநீரில் மூழ்கடிக்கப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை இதுபோல் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஐந்து கோடிக்கும் அதிகம். அவர்களில் பலருக்கு இன்னும் மறுவாழ்வோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை.
அவர்கள் இழந்த இடங்களின் மதிப்பை சதுர அடிகளின் விலையால் மட்டுமே நிர்ணயித்துவிட முடியாது. அந்த மண்ணுக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றையும், உணர்வுபூர்வமான பிணைப்பையும் இழப்பீடு கொடுத்து ஈடுகட்டிவிடவா முடியும்? 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி கட்டிமுடிக்கப்பட்ட பக்ராநங்கல் திட்டத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு இன்னும்கூட இழப்பீடு முழுமையாக வழங்கப்படாத நிலையில், சர்தார் சரோவரால் இடம்பெயர்ந்தவர்கள் எப்போது இழப்பீடும், மறுவாழ்வாதாரமும் பெறப் போகிறார்கள்?
குஜராத் சட்டப்பேரவைக்குத் தேர்தல் வர இருப்பதால்தான், இப்போது அவசர அவசரமாக சர்தார் சரோவர் அணைக்குத் திறப்பு விழா நடத்தப்பட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. குஜராத்திலுள்ள சுமார் 18,144 கிராமங்களுக்குப் பாசன வசதி அளிக்கப்போகும் சர்தார் சரோவர் அணைத் தண்ணீரைக் கொண்டு செல்ல இன்னும் 20% வாய்க்கால் வெட்டும் பணிகள்கூட முடிந்தபாடில்லை. ஆனால், நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் தேர்தலில் வாக்குகள் அறுவடை செய்யப்படலாம்.
13,385 ஹெக்டேர் வனப்பகுதியும், வளமான விவசாய நிலங்களும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டு சர்தார் சரோவர் அணை தேசத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com