பணம் தீர்வல்ல!

பேறுகால மகளிருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும்,

பேறுகால மகளிருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், மூன்று வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளுக்கும் அங்கன்வாடிகள் மூலமாக ஊட்டச்சத்துக்கான உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் உணவுப் பொருள்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாகத் தாய்மார்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் போடுவது என்கிற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. உணவுப் பொருள்கள் வழங்குவதன் அடிப்படை நோக்கத்தையே இந்த முடிவு சிதைத்துவிடுகிறது.
ஊரகப்புறங்களில் லட்சக்கணக்கான சிசுக்களும், குழந்தைகளும் ஊட்டச்சத்து இன்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதால்தான் இப்படியொரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தங்களது அன்றாட உணவில் கிடைக்கப்பெறாத போதுமான அளவு ஊட்டச்சத்தை பேறுகால மகளிரும், குழந்தைகளும் பெறவேண்டும் என்பதை உறுதிப்படுத்தப்படுவதற்காகத்தான் இந்தத் திட்டமே கொண்டு வரப்பட்டது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவை எதிர்கொள்வதுதான் அதன் நோக்கம்.
இதுமட்டுமல்லாமல், அங்கன்வாடிகள் மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவுக்குப் பயன்படும் உப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை அடிப்படை ஊட்டச்சத்துகள் சேர்க்கப்பட்டதாக இருப்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது. தற்போது 12 மாநிலங்களில் மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களில் இரண்டிலாவது அடிப்படை ஊட்டச்சத்து சேர்க்கப்படுகிறது. அயோடின் மற்றும் இரும்புச் சத்து உப்பிலும், இரும்புச் சத்து, ஒலிக் அமிலம், பி12 ஆகியவை கோதுமை மாவிலும், வைட்டமின் ஏ மற்றும் பி சமையல் எண்ணெயிலும் இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இது கட்டாயமல்ல என்றாலும்கூட, மாநில அரசுகள் இந்த முயற்சிக்கு ஆதரவளித்து வருகின்றன.
தேசிய அளவிலான ஆய்வு நடத்தப்பட்டபோது கிடைத்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில்தான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களிலும் ஊட்டச்சத்து சேர்க்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
தற்போது 84 நாடுகளில் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கு இதுபோன்ற ஊட்டச்சத்து, உணவுப் பொருள்களில் கலந்து தரப்படுகிறது. இந்தியாவில் ஐந்து வயதுக்கு கீழேயுள்ள குழந்தைகளில் 70% இரும்புச் சத்து குறைவுடன் காணப்படுகின்றன. 57% பேர் வைட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவிலும் 85% குழந்தைகள் அயோடின் குறைபாடு உள்ளவர்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஒரு குழுவை அமைத்து தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் எந்த அளவுக்கு உப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவற்றில் ஊட்டச்சத்து சேர்க்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இதற்காக அமைச்சக செயலர்கள் அடங்கிய குழுவொன்றை அமைத்து குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைவை எதிர்கொள்ள ஆலோசனை வழங்கும்படி பணித்திருக்கிறார். அதேபோல, சமையல் எண்ணெய், கோதுமை, உப்பு ஆகியவை இரும்புச் சத்து, வைட்டமின்கள் போன்றவை சேர்க்கப்பட்டதாக மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதன்மூலம் குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்து குறைவு முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டுமென்றும் பணித்திருக்கிறார். 
ஒருபுறம் ஊட்டச்சத்து குறைவுக்கு எதிராக முனைப்புடன் முயற்சிகளை மேற்கொள்ளும் நரேந்திர மோடி அரசு, இன்னொருபுறம் பேறுகால மகளிருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், மூன்று வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கும் நேரடியாக வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டிருப்பது, அரசின் அணுகுமுறையில் காணப்படும் தெளிவின்மை என்றுதான் கூறவேண்டும். அன்றாட உணவில் பேறுகால மகளிருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் போதிய ஊட்டச்சத்து இல்லை எனும்போது அவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்காமல் பணமாக கொடுப்பது எதிர்பார்த்த பலனை வழங்காது.
பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் குடும்ப வரவு செலவில் ஈடுபடுவதில்லை. அதனால் அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும் பணம் ஊட்டச்சத்து வாங்குவதற்குத்தான் பயன்படுத்தப்படும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அரசிடம் ஊட்டச்சத்துள்ள பொருள்களை அங்கன்வாடிகளின் மூலம் பெறும் பேறுகால மகளிரும், பாலூட்டும் தாய்மார்களும் நிச்சயமாக வசதி படைத்தவர்களாக இருக்க வழியில்லை, அவர்களது அன்றாட உணவுக்கே வழியில்லாதவர்கள். வங்கிக் கணக்கில் அரசு வழங்கும் பணத்தை வீட்டுச் செலவுக்கு பயன்படுத்துவார்களே தவிர, ஊட்டச்சத்து உணவு வாங்க பயன்படுத்த மாட்டார்கள் என்கிற அடிப்படை புரிதல்கூட அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
வசதி படைத்த குடும்பங்களிலேயேகூட பேறுகால மகளிரின் ஊட்டச்சத்து குறித்து கவலைப்படாதபோது, ஊரகப்புறங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு இருக்க வாய்ப்பே இல்லை. இந்தச் சூழலில் அங்கன்வாடிகளின் மூலம் பேறுகால மகளிருக்கும் குழந்தைகளுக்கும் நேரடியாக ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களை வழங்குவது மட்டும்தான் இதற்கான தீர்வாக இருக்கும். 
நேரடியாக ஊட்டச்சத்துள்ள உணவை வழங்குவதில் குறைபாடு இருக்கலாம். அந்த குறைபாடுகளைக் களைந்து திட்டத்தை முறைப்படுத்துவதுதான் புத்திசாலித்தனமே தவிர, பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் போட்டு தனது பொறுப்பை அரசு தட்டிக் கழிப்பது எந்தவிதத்திலும் சரியல்ல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com