வேதனையான உண்மை!

பெங்களூருவில் 'லங்கேஷ்' பத்திரிகை ஆசிரியர் கௌரி லங்கேஷ்

பெங்களூருவில் 'லங்கேஷ்' பத்திரிகை ஆசிரியர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது திரிபுரா மாநிலம் ஜிரானியா என்கிற ஊரில் சாந்தனு பௌமிக் என்கிற தொலைக்காட்சி நிருபர் ஒருவர், உறைவிடத்திலிருந்து இழுத்து வரப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். சாந்தனு பௌமிக்கோடு சேர்த்து, இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் கொல்லப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்திருக்கிறது.
28 வயது சாந்தனு பௌமிக், மேற்கு திரிபுராவிலுள்ள மாண்டாய் மாவட்டத்தில் இரண்டு அரசியல் இயக்கங்களுக்கு இடையேயான மோதல்களை தொலைக்காட்சியில் பதிவு செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. அவர் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணியை (இண்டிஜீனஸ் பியூப்பிள்ஸ் பிரண்ட் ஆஃப் திரிபுரா) சேர்ந்த நான்கு தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஊடகத் தகவல்களின்படி அவர் பணியாற்றும் 'தின்ராத்' தொலைக்காட்சி ஊடகம், திரிபுரா ராஜ்ய உபஜாதி கணமுக்தி பரிஷத் என்கிற அமைப்பின் பின்னணியுடன் செயல்படுகிறது. இந்த ஆதிவாசி அமைப்பு திரிபுராவில் ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இயங்குகிறது. இந்த அமைப்பு 'திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணி' என்கிற பா.ஜ.க. ஆதரவு ஆதிவாசிகள் அமைப்புடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறது. தான் பணியாற்றும் தொலைக்காட்சி நிறுவனம், திரிபுரா ராஜ்ய உபஜாதி கணமுக்தி பரிஷத்தின் ஆதரவுடன் இயங்குவதால், திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணிக்கு எதிரான செய்திகளைச் சாந்தனு பௌமிக் தொடர்ந்து வெளியிட்டு வந்ததில் வியப்பொன்றுமில்லை.
திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணி கடந்த சில மாதங்களாகவே ஆதிவாசிகளுக்குத் தனி மாநிலம் கேட்டுப் போராடி வருகிறது. இந்த அமைப்பு வலிமையுடன் விளங்கும் மாவட்டங்களில், தனி மாநிலக் கோரிக்கை பல இடங்களில் வன்முறையாக மாறியும் இருக்கிறது. திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணி, கடந்த வாரம் திரிபுரா மாநிலம் முழுவதும் போராட்டம் அறிவித்திருந்ததால் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டி வந்தது. சாந்தனு பெளமிக், திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணித் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பான காட்சிகள் பலவற்றைப் படம்பிடித்தார் என்பதுதான் அவர்மீது கொலையாளிகளுக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரிபுராவில் ஆட்சியில் இருப்பதால், பாஜகவின் ஆதரவுடன் நடத்தப்பட்டிருக்கும் மதவாத சக்திகளின் கொள்கை ரீதியிலான கொலைத் தாக்குதல் இது என்று குற்றம்சாட்டுகிறார்கள் இடதுசாரிகள். பாரதிய ஜனதா கட்சியோ, மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறுவதால், இது முழுக்க முழுக்க சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றும், மாநில அரசு சாந்தனு பௌமிக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது என்றும் குற்றம்சாட்டுகிறது.
திரிபுரா மாநிலத்திற்கு அடுத்த ஆறு மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. அதனால், பாரதிய ஜனதா கட்சி இந்தப் பிரச்னையை மாணிக் சர்க்கார் ஆட்சிக்கு எதிராக உயர்த்தியிருப்பதைத் தொடர்ந்து இடதுசாரிகளுக்கும் பாஜகவுக்கும் இடையிலான கலவரங்கள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சம் பரவியிருக்கிறது. 
சாந்தனு பௌமிக்கும் அவர் பணியாற்றும் தொலைக்காட்சி ஊடகமும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருந்ததற்கும், இந்தப் பிரச்னையில் சட்டம் தனது கடமையைச் செய்வதற்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. கொலையைக் கொலையாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, கொலையாளியின் அரசியல் தொடர்புடன் கொலையைத் தொடர்புபடுத்த வேண்டிய அவசியமில்லை.
சாந்தனு பௌமிக்கின் கொலை மார்க்சிஸ்ட் ஆட்சியிலிருக்கும் திரிபுராவிலும், கெளரி லங்கேஷின் படுகொலை காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் கர்நாடகத்திலும்தான் நடைபெற்றிருக்கின்றன. ஆட்சி அதிகாரம் கையிலிருப்பதால் கொலையாளிகளை அடையாளம் கண்டு சட்டத்தின் முன்னிறுத்த வேண்டுமே தவிர, பா.ஜ.க.வின் மீது பழி சுமத்தித் தப்பித்துக் கொள்ளக் கூடாது.
சாந்தனு பௌமிக்கின் படுகொலை, பத்திரிகையாளர்கள் எந்த அளவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு இடையில் இந்தியாவின் பல மாநிலங்களில் பணியாற்றுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. பத்திரிகையாளர்கள் மீதான தொடர் தாக்குதலும், அவர்கள் கொலை செய்யப்படுவதும் சமூக அரசியல் சூழலில் எந்த அளவுக்குப் பாதுகாப்பின்மை காணப்படுகிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
சர்வதேசப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின்படி பாதுகாப்பின்மையில் 2016-இல் 133-ஆக இருந்த இந்தியா இப்போது சாந்தனு பௌமிக்கின் மரணத்துடன் 136-ஆக அதிகரித்து பாகிஸ்தானுக்கு நிகரான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. 1992 முதல் இதுவரை 36 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொலையாளிகளில் 96% பேர் தண்டிக்கப்படாமல் தப்பியிருக்கிறார்கள். இவையெல்லாம் சட்டம் எந்த அளவுக்குச் செயல்படாமல் இருந்து குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறது என்பதைத்தான் காட்டுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது எப்படி சாத்தியம்? காவல்துறை, அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம், நீதித்துறை என்று அனைத்துத் தரப்பினரும் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்வந்தால் மட்டுமே பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க முடியும். ஆனால், அதற்கான முனைப்பு எந்த ஒரு தரப்பிலும் காணப்படவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com