ஒளி விளக்கு!

இதுவரை மின்சார இணைப்புத் தராத 18,000 கிராமங்களுக்கு, 2019 மக்களவைத் தேர்தலுக்குள் மின்சாரம் தரப்படும் என்று கடந்த 2015-இல் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார்.

இதுவரை மின்சார இணைப்புத் தராத 18,000 கிராமங்களுக்கு, 2019 மக்களவைத் தேர்தலுக்குள் மின்சாரம் தரப்படும் என்று கடந்த 2015-இல் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார். இப்போது மின்சார இணைப்பு இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை 3,000-ஆகக் குறைந்திருக்கிறது என்றும் அந்த கிராமங்களும் வரும் டிசம்பர் 2018-க்குள் மின் இணைப்பு பெற்றுவிடும் என்றும் அறிவித்திருக்கிறார். இதற்காக ரூ.16,320 கோடி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அரசு கூறியிருப்பதுபோல 18,000 கிராமங்களில் 15,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு தரப்பட்டிருக்கிறது என்றாலும்கூட அந்த கிராமங்களிலுள்ள அத்தனை வீடுகளும் மின் இணைப்புப் பெற்றவையாக மாறியிருக்கிறதா என்றால் கிடையாது. அதுமட்டுமல்ல, மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்கப்பட்டால், அரசு ஆவணப்படி அதைச்சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்துக்கும் மின் இணைப்பு தரப்பட்டதாக கருதப்படும். பிரதமர் கடந்த திங்கட்கிழமை அறிவித்திருக்கும் 'செளபாக்கியா' என்கிற இல்லந்தோறும் மின் இணைப்புத் திட்டம் மேலே குறிப்பிட்ட வகைப்பட்டதாக அமைந்துவிடலாகாது. 
பிரதமரின் 'செளபாக்கியா' என்கிற இல்லந்தோறும் மின் இணைப்புத் திட்டம் என்பது 1978-இல் 'ஒரு விளக்குத் திட்டம்' என்று அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தமிழகத்தில் நடைமுறைபடுத்தப்பட்ட திட்டத்தை நினைவுபடுத்துகிறது. தமிழகத்திலுள்ள 20 அடிக்கு 10 அடி அளவிலான அனைத்துக் குடிசைகளுக்கும் மின் இணைப்பு தரப்படுவதுடன் அரசின் செலவிலேயே ஒரு மின் விளக்கும் பொருத்தித் தருவது என்பதுதான் ஒரு விளக்குத் திட்டம். இந்தத் திட்டத்துக்காகக் குடிசை ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின்கீழ் தமிழகத்திலுள்ள அனைத்து குடிசைகளிலும் மின் விளக்கு எரிந்தது என்பது மட்டுமல்ல, மின்சாரம் இலவசமாகவும் வழங்கப்பட்டது.
பெரும்பாலான கிராமங்களிலும் மின் இணைப்பு தரப்பட்டிருந்தாலும்கூட, பல கிராமங்களில் மின் இணைப்பு பெற்றிருக்கும் வீடுகள் 10% மட்டும்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மின் இணைப்பு குறித்து அரசு தரும் புள்ளிவிவரங்கள் முழுமையான நிலவரத்தை பிரதிபலிப்பதாக இல்லை. அதிகாரபூர்வமாக மின் கட்டணம் செலுத்தும் வசதிவாய்ப்பில்லாத பலர் முறைகேடாக மின் இணைப்பு பெறுகிறார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் இதுவரை மின் இணைப்பு இல்லாத எல்லா ஏழை குடும்பங்களுக்கும் இப்போது நரேந்திர மோடி அரசால் இலவசமாக 'செளபாக்கியா' திட்டத்தின் கீழ் ரூ.16,320 கோடி செலவில் மின் இணைப்பு வழங்கப்பட இருக்கிறது. மின் இணைப்பு தரப்படுவதாலேயே பிரச்னை முடிந்துவிடுவதில்லை. 
மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்துவது என்பது வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இயலாது என்பதை உணர்ந்து கொண்டதால்தான் 1978-இல் அன்றைய எம்.ஜி.ஆர். அரசு தமிழ்நாட்டில் ஒரு விளக்குத் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கியது. இன்று அகில இந்திய அளவில் இலவச மின்சாரம் வழங்க முடியாவிட்டாலும் மின்சார உற்பத்தியை அதிகரிப்
பதன் மூலமும் உற்பத்திச் செலவைக் குறைப்பதன் மூலமும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்பட்டால் மட்டும்தான் அனைவருக்கும் மின்சாரம் என்கிற 'செளபாக்கியா' திட்டம் வெற்றி பெறும். 
அனைவருக்கும் மின்சாரம் என்பது புதிய கருத்தாக்கம் அல்ல. இதற்கு தமிழ்நாடு 40 ஆண்டுகளுக்கு முன்பே முன்மாதிரியாக இருந்திருக்கிறது. 2005-இல் அன்றைய மன்மோகன் சிங் அரசு 'ராஜீவ் காந்தி கிராமின் வித்யூதிகரன் யோஜனா' என்கிற திட்டத்தையும், 2015-இல் நரேந்திர மோடி அரசு 'தீன்தயாள் உபாத்யாய கிராம் ஜோதி யோஜனா' என்கிற திட்டத்தையும் அறிவித்து நிறைவேற்றி வந்ததன் நீட்சிதான் 'பிரதான் மந்திரி சகஜ் பிஜ்லி ஹர்கர் யோஜனா' என்கிற இந்த 'செளபாக்கியா' திட்டம். முந்தைய திட்டங்கள் போட்டிருக்கும் அடித்தளத்தில் 2018-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் மின் இணைப்பு இல்லாத வீடுகளே இல்லை என்கிற நிலைமையை ஏற்படுத்த முடியாவிட்டாலும், மின் இணைப்பே இல்லாத பகுதியே இல்லை என்கிற நிலைமை ஏற்படுமேயானால், அதுவே மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாக இருக்கும்.
இந்தியா மிகை மின் தேசமாக விளங்குகிறது என்று அரசு பெருமிதப்பட்டுக் கொண்டாலும், இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் முழுமையாக பயன்படுத்தப்படாமல் தொடர்கிறது. மத்திய மின்சார ஆணையம் தரும் தகவலின்படி இந்தியாவிலுள்ள அனல்மின் நிலையங்களின் மின் உற்பத்தி தொடர்ந்து குறைந்தவண்ணம் இருக்கிறது. இதற்குக் காரணம் மின் உற்பத்தி நிலையங்களின் முழுமையான திறன் பயன்படுத்தப்படுவதில்லை என்பதுதான். 2009-10இல் 77.5%-ஆக இருந்த அனல்மின் நிலைய உற்பத்தி 2016-17இல் 59.88%-ஆக குறைந்துவிட்டிருக்கிறது. மாநில மின் பகிர்மானக் கழகங்களின் நிதிநிலைமை சரிந்து வருவதால் அவர்களது வாங்கும் திறன் குறைந்துவிட்டிருப்பது இதற்கு முக்கியமான காரணம்.
இரண்டாண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட 'உதய்' திட்டம், மாநில மின் பகிர்மான நிறுவனங்களின் நிலைமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. மின் உற்பத்திக்குப் போதுமான விலை கிடைக்காததால் மின் உற்பத்தியில் தனியார் முதலீடு எதிர்பார்த்த அளவில் இல்லை. அதிகரித்த மின் உற்பத்தியும், குறைவான விலையும், கசிவில்லாத மின் பகிர்மானமும் உறுதிப்படுத்தப்படுவது மட்டும்தான் இந்தியாவின் எரிசக்தி பிரச்னைக்கு முழுமையான தீர்வாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com