தவறான புரிதல்!

கடந்த திங்கள்கிழமை மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும்

கடந்த திங்கள்கிழமை மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே இட்டுச் சென்றது. பொய்ச் செய்தியை அச்சு ஊடகத்திலோ, காட்சி ஊடகத்திலோ பரப்பும் பத்திரிகையாளர்களின் பத்திரிகையாளர் அங்கீகாரம் பறிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடிநேரிடையாகத் தலையிட்டு அந்த அறிவிப்பைத் திரும்பப்பெற உத்தரவிட்டிருக்கிறார். பிரதமருக்கு நன்றி.
இத்துடன் பிரச்னை முடிந்துவிட்டது என்று முற்றுப்புள்ளி வைத்துவிடக் கூடாது. அமைச்சர் எடுத்த முடிவு தவறானது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், எழுப்பப்பட்டிருக்கும் பிரச்னை அச்சு, காட்சி ஊடகங்களையும், பத்திரிகையாளர்களையும் தாண்டி, உலகளாவிய அளவில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நாம் உணர வேண்டும்.
மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் அறிவிப்புப்படி, பத்திரிகையாளர் ஒருவரால் பொய்யான செய்தி பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தால், அந்தக் குற்றச்சாட்டு அச்சு ஊடகமாக இருந்தால் இந்திய பத்திரிகையாளர் குழுவுக்கோ, காட்சி ஊடகமாக இருந்தால் செய்தி ஒலிபரப்பாளர்கள் சங்கத்துக்கோ அனுப்பப்படும். அந்த அமைப்பு அடுத்த 15 நாள்களில் அது குறித்த தங்கள் முடிவைத் தெரிவிக்க வேண்டும்.
விசாரணையில் இருக்கும் 15நாள்கள் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரின் அரசு அங்கீகாரம் தற்காலிகமாகத் தடை செய்யப்படும். பொய்யான தகவல்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தீர்மானிக்கப்பட்டால், முதல் தடவை குற்றத்திற்கு ஆறு மாத காலமும், இரண்டாவது தடவையும் பொய்ச் செய்தி பதிவு செய்யப்பட்டால் ஓர் ஆண்டும் அந்தப் பத்திரிகையாளரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மூன்றாவது முறையும் அந்தப் பத்திரிகையாளர் பொய்யான செய்தியைப் பதிவு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால், அவரது அங்கீகாரம் நிரந்தரமாகத் தடை செய்யப்படும்.
பத்திரிகையாளர்களின் அரசு அங்கீகாரம் என்பது, மூத்த பத்திரிகையாளர்களும், செய்தி ஒலிபரப்புத் துறை அதிகாரிகளும் அடங்கிய குழுவால் வழங்கப்படுகிறது. அப்படி அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் மட்டும்தான் அரசு விழாக்களிலும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களின் நிருபர் கூட்டங்களிலும் பங்குபெற முடியும். அரசு அலுவலகங்களிலிருந்து தகவல் பெறும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அவர்கள் சார்ந்த ஊடகங்களால் பணி அமர்த்தப்பட்டு, அரசின் பத்திரிகைத் தகவல் பிரிவால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளராக அறிவிக்கப்பட்ட ஒருவர், தவறான செய்திகளைப் பரப்புவார் என்று கருதுவதேகூடத் தவறு. செய்தி ஒலிபரப்புத் துறை பொய்ச் செய்தி என்று கருதுவது அச்சு, காட்சி ஊடகங்களில் வெளியிடப்படுபவை அல்ல. அவை இணையதளத்தின் மூலமாகவும், சுட்டுரை, முகநூல், கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பரப்பப்படுவது என்பதை அமைச்சர் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது.
இன்றைய நிலையில் அச்சு ஊடகங்கள் அரசு விளம்பரங்களை நம்பி மட்டுமே நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கோப்பை தேநீர் பத்து ரூபாய்க்கு விற்கும்போது நாளிதழ்கள் வெறும் ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் விற்பனையை அதிகரித்து பத்திரிகைகள் லாபம் ஈட்டியதுபோய், விற்பனை அதிகரிக்க அதிகரிக்க இழப்பு அதிகரிக்கும் 
அவலம் ஏற்பட்டிருக்கிறது. கடுமையாக அதிகரித்துவிட்ட காகித விலையால், அரசு விளம்பரங்களை நம்பி மட்டுமே பெரும்பாலான பத்திரிகைகள் நடத்தப்படுகின்றன.
காட்சி ஊடகங்களைப் பொருத்தவரையில், பொழுதுபோக்குச் சேனல்களுக்கு விளம்பரம் கிடைப்பதால் லாபகரமாக நடக்கின்றன. ஆனால், செய்திச் சேனல்கள் அனைத்துமே நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. அரசியல் கட்சியின் பின்புலமோ அல்லது மறைமுக ஆதரவோ இல்லாமல் இந்தியாவில் செய்திச் சேனல்களை நடத்த முடியாது என்பதுதான் உண்மை நிலை.
உலகமயமாக்கல் சூழலில், கார்ப்பரேட் நிறுவனங்களின் செய்திகளை ஊடகங்களில் பதிவு செய்து தருவதற்காகவே பல பத்திரிகைத் தொடர்பாளர்கள் உருவாகிவிட்டிருக்கிறார்கள். அவர்களால்தான் பணத்துக்காக செய்தி வெளியிடுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. ஆனாலும்கூட, அச்சு, காட்சி ஊடகங்களில் காணப்படும் பல அடுக்குத் தணிக்கை முறையால், முடிந்தவரை தவறான செயல்பாடுகள் தடுக்கப்படுகின்றன.
தவறான செய்திகளையும், பொய்யான செய்திகளையும் உண்மையாக்கும் விதத்தில் செயல்படுவது அச்சு, காட்சி ஊடகங்களல்ல, சமூக ஊடகங்கள்தான். தனி நபர்களைத் தரக்குறைவாகக் கேலி செல்வதும், மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதத்தில் பொய்யான செய்திகளைப் பரப்புவதும் சமூக ஊடகங்கள்தான். அமெரிக்க அதிபர் தேர்தலில் சமூக ஊடகங்களின் உதவியால் ரஷியா தலையிட முடிந்திருக்கிறது என்றால், இந்தியாவுக்கு சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து சொல்லவா வேண்டும்?
சமூக ஊடகங்களில் யார் எந்தச் செய்தியைப் பதிவு செய்கிறார் என்று கண்டறிவதற்குள், மின்னல் வேகத்தில் அந்தச் செய்தி கண்டங்களைக் கடந்து பரவி விடுகிறது. அச்சு, காட்சி ஊடகங்களில் தவறான செய்தியோ, பொய்யான செய்தியோ வெளியிடப்பட்டால், அதற்கான ஆதாரம் இருக்கிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், சமூக ஊடகங்களில் பொய்யான செய்தியைப் பரப்புவதை எப்படி, யார் தடுப்பது?
அரசும் எதிர்க்கட்சிகளும், ஊடகவியலாளர்களும், நிர்வாகத்தினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சமூக ஊடகங்களில் பொய்ச் செய்தி பரப்புவோரைத் தடுப்பதற்கு வழி காண்பதை விட்டுவிட்டு, செய்தி ஒலிபரப்பு அமைச்சர், பத்திரிகையாளர்களின் செயல்பாடுகளில் தலையிடுவது, பிரச்னை குறித்த அவரது அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com