இந்தியாவுக்கே தலைகுனிவு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவிலும், உத்தரப் பிரதேசத்தின் உன்னாவிலும் நடைபெற்றிருக்கின்ற சம்பவங்கள் நமது தேசத்தின் மனசாட்சியை உலுக்கிவிட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவிலும், உத்தரப் பிரதேசத்தின் உன்னாவிலும் நடைபெற்றிருக்கின்ற சம்பவங்கள் நமது தேசத்தின் மனசாட்சியை உலுக்கிவிட்டிருக்கிறது. மனித இனத்தின் முன்னால் இந்தியா தலைகுனிந்து நிற்கிறது. இந்திய சமூகம் இந்த அளவுக்கு வக்கிரத்தனம் பிடித்ததாக மாறிவிட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, பொருளாதார வல்லரசாகப் போகிறோம் என்கிற கோஷமெல்லாம் அர்த்தமற்றதாகிவிட்டது. 
கதுவாவுக்கும் உன்னாவுக்கும் இடையில் 1000 கி.மீ. தூர இடைவெளி இருந்தாலும்கூட, இரண்டு சம்பவங்களும் உணர்த்தும் உண்மை ஒன்றுதான். இரண்டு சம்பவங்களிலும் அப்பாவிச் சிறுமிகள், அதிலும் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத ஒடுக்கப்பட்ட பெண் குழந்தைகள், ஆணாதிக்கவாதிகளின் ஈவிரக்கமற்ற கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் அது. அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கும், அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதற்கும் பதிலாக சட்டமும் சமூகமும் அநீதிக்குத் துணை நின்றிருக்கிறது என்பது எந்த அளவுக்குப் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடாக நாம் மாறியிருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அது கதுவா ஆனாலும் சரி, உன்னாவானாலும் சரி, அந்த இரண்டு சம்பவங்களிலும் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான உண்மை இருக்கிறது. அந்த இரண்டு பெண்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டவுடன் சட்டம் உடனடியாகத் தனது கடமையைச் செய்யவில்லை. இரண்டு பிரச்னைகளுமே தேசியத் தளத்தில் கவனம் பெற்ற பிறகுதான் மெதுவாக சட்டம் இந்தப் பிரச்னைகள் குறித்து நகரத் தொடங்கியது. நிர்பயா சட்டம் இயற்றப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழிந்தும், இன்றும்கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் நீதிக்காகப் போராட வேண்டியிருக்கிறது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள கதுவா மாவட்டத்தின் ரசானா என்கிற கிராமத்தில் ஜனவரி 10-ஆம் தேதி முதல் எட்டு வயதுப் பெண் காணாமல் போனாள். ஜனவரி 17-ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்தச் சிறுமியின் உடல் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சிறுமி ஒரு கோயிலுக்குள் ஆறு நாள்கள் அடைத்து வைக்கப்பட்டு, அடித்துத் துன்புறுத்தப்பட்டு, போதை மருந்து கொடுக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சித்திரவதையை அனுபவித்திருக்கிறாள். 
தேசிய அளவில் பரபரப்பு ஏற்பட்டதால், மூன்று மாதத்துக்குப் பிறகு சட்டம் தனது கடமையைச் செய்யத் தொடங்கியது. 
இதையெல்லாம் விட வேடிக்கை என்னவென்றால், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் சங்கம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியிருக்கிறது. பாஜகவைச் சேர்ந்த இரண்டு மாநில அமைச்சர்கள் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்கள். காவல் துறையினரே எட்டு வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமைக்கும் கொலைக்கும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதும், குற்றவாளிகளைக் காப்பாற்ற வழக்குரைஞர்களும் அமைச்சர்களும் கச்சை கட்டிக்கொண்டு இறங்கி இருக்கிறார்கள் என்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.
கதுவாவில் இப்படி என்றால், உன்னாவில் நடந்த சம்பவம் இதைவிடக் கொடுமையானது. 2017, ஜூன் 4-ஆம் தேதி ஓர் அப்பாவிப் பெண் உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கர் என்பவரிடம் வேலைக்குப் பரிந்துரை செய்ய கோருவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்கே அவர் குல்தீப்சிங் செங்கரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பப்பட்டார். 
தன்னுடைய புகாரில், எம்.எல்.ஏ. குல்தீப் செங்கரின் பெயரைக் குறிப்பிட காவல் துறையினர் அனுமதிக்கவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் தெளிவாகவே கூறியிருக்கிறார். தில்லிக்குப் போய் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக அந்தப் பெண் போராடத் தொடங்குகிறார். 
அந்தப் பெண்ணின் தந்தை, எம்.எல்.ஏ.வின் சகோதரர் அதுல்சிங் செங்கர், அவருடைய உதவியாளர் மக்கி இருவராலும் நையப் புடைக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறார். இது நடந்தது ஏப்ரல் 5-ஆம் தேதி. ஏப்ரல் 8-ஆம் தேதி அந்தப் பெண் லக்னெளவில் உள்ள முதல்வர் வீட்டுக்கு முன்னால் எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி தீக்குளிக்க முற்படுகிறார். 9-ஆம் தேதி காவல்துறையினரால் தாக்கப்பட்டு அந்தப் பெண்ணின் தந்தை சிறையில் இறந்து போகிறார். 
ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வையும் அவரது சகோதரரையும் இப்போது உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்திருக்கிறது. குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்று காலதாமதமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் இப்போது அறிக்கை வெளியிடுகிறார். ஏறத்தாழ ஒன்பது மாதங்களாக அந்தப் பெண்ணின் போராட்டம் நடத்திருக்கிறது. அப்போதெல்லாம் பேசாமல் இருந்த முதல்வர், இப்போதுதான் பேசத்தொடங்கி இருக்கிறார் என்று சொன்னால், பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணை நிற்பதற்குப் பதிலாக, தனது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வையும், காவல்துறையினரையும் காப்பாற்றுவதில்தான் உத்தரப் பிரதேச அரசு முனைப்பாக இருந்தது என்பதுதானே உண்மை?
தேசிய குற்ற ஆவண மையத்தின் 2016-க்கான அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளிப்படுத்துகிறது. 2016-இல் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 88% அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. கதுவாவும் உன்னாவும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. ஆனால், இதுபோல ஆயிரக்கணக்கான சம்பவங்கள் வெளியில் தெரியாமல் ஆங்காங்கே மறைக்கப்படுகின்றன என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com