கோல்ட்கோஸ்ட் சாதனைகள்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் மிகப்பெரிய வெற்றிவாகை சூடி திரும்பியிருக்கிறார்கள்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் மிகப்பெரிய வெற்றிவாகை சூடி திரும்பியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிலுள்ள கோல்ட்கோஸ்டில் நடந்த 2018 காமல்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் அடுத்தபடியாக மிக அதிகமான பதக்கங்களை இந்திய விளையாட்டு அணி வென்று நமக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. 
இந்தியாவிலிருந்து கலந்துகொள்ளச் சென்ற 219 வீரர்கள் அடங்கிய இந்தியக் குழு, மொத்தம் 66 பதக்கங்களை வென்று சாதனை புரிந்திருக்கிறது. 15 வெவ்வேறு விளையாட்டுகளில் 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களை இந்திய அணி வென்றிருக்கிறது. கடந்த முறை 2014-இல் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 64 பதக்கங்களை (15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம்) வென்றிருந்தது. 
ஒலிம்பிக் பந்தயங்களைப் போலவோ, ஆசிய விளையாட்டுப் போட்டிகளைப் போலவோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவிலான சவாலாக இல்லை என்பது மிகவும் உண்மை. சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளும் மிக முக்கியமான பங்கு வகிப்பதுபோல, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் அதிசக்தி வாய்ந்த விளையாட்டு அணிகள் கலந்துகொள்வதில்லை. ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்துகொள்வதற்கு அடித்தளமாக இந்தியாவுக்கு காமன்வெல்த் போட்டிகள் உதவுகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
எப்போதும் இல்லாத அளவுக்கு பதக்கப் பட்டியலில் வீராங்கனைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடப்பட வேண்டிய சாதனை. பளு தூக்கும் வீராங்கனை பூனம் யாதவ், மனு பேக்கர், பெண்கள் டேபிள் டென்னிஸ் அணியினர், ஹீனா சித்து, மேரி கோம் என்று இந்திய வீராங்கனைகளின் சாதனை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இந்திய மகளிர் ஹாக்கி அணி உலக சாம்பியனான இங்கிலாந்தை தோற்கடித்தது கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பெருமிதத்துக்குரிய சாதனை.
துப்பாக்கிச் சுடுதலில் மனு பேக்கர், மெஹுலி கோஷ், 15 வயது அனீஷ் பன்வாலா ஆகியோர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். மிகப்பெரிய ஆச்சரியமாக கோல்ட்கோஸ்டில் வெளிப்பட்டது இந்தியாவின் 10 பேர் கொண்ட டேபிள் டென்னிஸ் அணியினரின் சாதனை. மூன்று தங்கம் உள்பட எட்டு பதக்கங்களை அள்ளிக்குவித்தது நமது டேபிள் டென்னிஸ் அணி. அதிலும் குறிப்பாக, மனீகா பத்ராவின் சாதனை பாராட்டுக்குரியது. 
ஐந்து முறை உலகக் குத்துச் சண்டை சாம்பியன் மேரி கோம், இரண்டு முறை ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பதக்கம் வென்ற சுஷில் குமார், பளு தூக்குதலில் உலக சாம்பியனான மீராபாய் சானு, 2016 உலக ஜூனியர் ஜாவலின் சாம்பியன் நீரஜ் சோப்ரா ஆகியோர் இந்தியாவின் பதக்கப் பட்டியல் அதிகரித்ததற்கு மிகமுக்கியமான பங்களிப்பை நல்கியவர்கள். எதிர்பாராத தங்கப் பதக்கத்தை பாட்மிண்டனில் வென்றது இந்தியாவின் கலப்பு இரட்டையர் அணி. அதேபோல, பி.வி. சிந்து, சாய்னா நேவால் இருவரும் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிச் சுற்றை அடைந்து தங்கம், வெள்ளி வென்றனர்.
துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், பளு தூக்குதல் ஆகியவற்றில் மொத்தம் 37 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்திருக்கின்றன. குறிப்பாக, துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் 16 பதக்கங்களை வென்றிருக்கிறோம் (7 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம்). அபினவ் பிந்த்ரா, ஜஸ்பால் ராணா, ககன் நரங் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் வீரர்களாக மனு பேக்கர், மெஹுலி கோஷ், அனீஷ் பன்வாலா ஆகிய மூவரும் கோல்ட்கோஸ்டில் நடந்த 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் புதிய சாதனை வீரர்கள். 
குத்துச் சண்டையில் விகாஸ் கிருஷணும், கெளரவ் சோலங்கியும், மல்யுத்தத்தில் சுஷில் குமார், வினேஷ் போகட், சுமித் குமார், ராகுல் அவாரே, பஜ்ரங் புனியா ஆகியோர் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்ததுடன் மிகப்பெரிய வருங்கால எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதேபோல, பளு தூக்குதலில் மீராபாய் சானு, சஞ்சிதா சானு, பூனம் யாதவ், வெங்கட் ராகுல் ரகலா ஆகியோர் மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கமும் பதக்கப் பட்டியலுக்கு பங்களிப்பை நல்கி இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார்கள்.
கிரிக்கெட்டை மட்டுமே மையப்படுத்திக் கொண்டிருந்தது போய், இப்போது எல்லா விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் கிடைக்கத் தொடங்கியிருப்பதன் அறிகுறிதான் இந்தியா கோல்ட்கோஸ்டில் பெற்ற வெற்றிகள். வரும் ஆகஸ்ட், செப்டம்பரில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. கடந்த முறை 2014-இல் 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற இந்திய அணி, இந்த முறை கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் பெற்ற வெற்றியின் உற்சாகத்தில் புதிய பல சாதனைகளை படைக்கக்கூடும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. 
அதைத்தொடர்ந்து 2020-இல் டோக்கியோவில் நடக்க இருக்கிற ஒலிம்பிக் பந்தயங்களுக்கும் நாம் தயாராக வேண்டும். 
அதற்கும் அடித்தளம் அமைத்துத் தந்திருக்கிறது இந்திய விளையாட்டு அணியின் கோல்ட்கோஸ்ட் சாதனைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com