தூக்கு தீர்வாகாது!

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து பன்னிரண்டு வயது வரையிலான சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்கான அவசரச் சட்டம்

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து பன்னிரண்டு வயது வரையிலான சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்கான அவசரச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த அவசரச் சட்டத்தின்படி சிறுமிகள் பாலியல் வன்முறை தொடர்பான சம்பவங்களை விசாரிக்க மாநில அரசுகள், உயர்நீதிமன்றங்கள் ஆகியவற்றின் ஆலோசனைப்படி புதிதாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புத் தடயவியல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, சிறார்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் குறைந்த பட்சமாக ஏழாண்டுவரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. புதிய அவசரச் சட்டத்தின்படி குறைந்தபட்ச சிறைத் தண்டனை பத்தாண்டுகளாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் 16 வயதுக்கும் குறைவானவராக இருந்தால், குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் முதல் வாழ்நாள் வரையிலும் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதேபோல, சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் 2 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டுமென்றும், மேல்முறையீட்டு வழக்கு ஆறு மாதங்களில் முடிக்கப்பட வேண்டுமென்றும் அவசரச் சட்டம் கூறுகிறது. 
நிர்பயா சம்பவத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னால் நிறைவேற்றப்பட்ட பாலியல் வன்முறையாளர்களிடமிருந்து சிறாரைப் பாதுகாக்கும் சட்டம் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கவில்லை. அதனால் 'போக்சோ' என்று அழைக்கப்படும் அந்தச் சட்டத்தில் இப்போது திருத்தம் கொண்டுவர இந்த அவசரச் சட்டத்தின் மூலம் மத்திய அரசு முற்பட்டிருக்கிறது. 
2016-இல் 'போக்சோ' சட்டத்தின்கீழ் சிறுமியர் மீதான பாலியல் வன்முறை வழக்குகள் 64,138 பதிவு செய்யப்பட்டன. இவற்றில் வெறும் 1,869 வழக்குகளில், அதாவது 3 % வழக்குகளில் மட்டும்தான் தண்டனை வழங்கப்பட்டது. ஏனைய வழக்குகள் போதிய சாட்சியோ ஆதாரமோ இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டன அல்லது திரும்பப் பெறப்பட்டன. இன்னும் சிலவற்றில் விசாரணை முடியாமல் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன.
அதே ஆண்டில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக பாலியல் வன்முறைக் குற்றத்திற்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 36,657. அதில் 34,650 வழக்குகளில் (94%) குற்றவாளிகள், பாதிக்கப்பட்ட பெண் அல்லது சிறுமியின் நெருங்கிய குடும்ப உறுப்பினர், அண்டை வீட்டுக்காரர் அல்லது தெரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். 
இதுதான் பெரும்பாலான பாலியல் வன்முறை வழக்குகளிலும் காணப்படுகிறது. அதனால் குற்றவாளிக்கு மரண தண்டனை என்பது எந்த அளவுக்கு தவறு நடக்காமல் தடுப்பதற்கோ, அப்படியே வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் அது தொடர்வதற்கோ உதவும் என்கிற ஐயப்பாடு எழுகிறது. தனக்கு பாலியல் தீங்கிழைத்தவர் குடும்பத்தினர் அல்லது தெரிந்தவர் எனும்போது, அந்தக் குற்றம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அல்லது சிறுமி வழக்குப் பதிவதை மரண தண்டனை தடுக்கக் கூடும். 
'போக்சோ' சட்டம், ஓராண்டுக்குள் பாலியல் வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டுமென்று கடுமையாகவே கூறுகிறது. அப்படியிருந்தும் 2016-இல் பதிவான வழக்குகளில் 89% அளவு ஓராண்டிற்குப் பிறகு விசாரணை நிலையில்தான் தொடர்ந்தன. விசாரணை நடைமுறைகளை பலப்படுத்தாமலும், பாதிக்கப்பட்டவருக்கு நீதிமன்றத்திலும் வெளியிலும் சாதகமான சூழலை உருவாக்காமலும் தண்டனையைக் கடுமையாக்குவதால் மட்டும் பலன் ஏற்பட்டுவிடப்போவதில்லை. 2012 டிசம்பர் தில்லி கூட்டு பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியும்கூட, பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்பதிலிருந்து மரண தண்டனை இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.
தேசிய அளவிலான பாலியல் வன்முறை வழக்குகளில் தண்டனை விகிதம் 28% மட்டுமே. இந்த வழக்குகளில் மிகப் பெரிய பிரச்னைகள், தொடர்ந்து விசாரணை ஒத்திவைத்தல், அரசுத் தரப்பு வழக்குரைஞர்களின் பாராமுகம், தடயவியல் நிபுணர்களின் அறிக்கையில் தாமதம் ஆகியவை. விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதால் மட்டும் விரைந்து தீர்ப்பு வழங்கப்படுவதில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.
தில்லி கூட்டு பாலியல் வன்முறை வழக்கில், முன்பிருந்த சட்டத்தின் அடிப்படையில்தான் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. முறையாகவும் முழுமையாகவும் விசாரணை நடத்தப்பட்டு, சாட்சிகள் கலைக்கப்படாமலும் வழக்கு விசாரணை தடைபடாமலும் நடத்தப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்படுமானால், விசாரணை நீதிமன்றத்திற்கே மரண தண்டனை வழங்கும் அதிகாரமுண்டு. சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து மரண தண்டனையை உறுதிப்படுத்தினாலும் கூட வழக்கு முறையாக நடத்தப்படாவிட்டால், சட்டம் இயற்றி என்ன பயன்?
2017-இல் ஆய்வின்படி, 4,852 வேட்பாளர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 48 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகள். நமது அரசியல் கட்சிகள் இதுபோன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் 334 குற்றவாளிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்திருக்கின்றன. இந்தப் பின்னணியில், சிறுமிகள் பாதுகாப்புச் சட்டத்தில், பாலியல் வன்முறையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் திருத்தத்தை அரசு கொண்டுவந்திருப்பது மிகப்பெரிய நகைமுரண்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com