நடைமுறை சாத்தியமல்ல!

மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது

மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது, சட்ட ஆணையம் மக்கள் கருத்துக்காக வெளியிட்டிருக்கும் அறிவிப்பு. பொதுமக்கள், அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், அரசியல் நோக்கர்கள் ஆகியோரின் கருத்துகளை சட்ட ஆணையம் வரவேற்றிருக்கிறது. அனைவரது கருத்தையும் பெற்ற பிறகு மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது.
 ஆண்டுதோறும் குறைந்தது நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களாவது நடைபெறும் நிலையில், தேர்தல் வழிகாட்டு விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அப்போது எந்தவித மக்கள் நலத்திட்டங்களையும் அரசால் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படுகிறது. அரசு இயந்திரம் அநேகமாக ஸ்தம்பித்து விடுகிறது. தேர்தல் ஆணையத்திற்கு உதவுவதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பாதுகாப்புப் படையினர், காவல் துறையினர் ஆகியோர் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களது அன்றாடப் பணிகள் தடைபடுகின்றன. இவையெல்லாம்தான் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக கூறப்படும் காரணங்கள்.
 சட்ட ஆணையம் தெரிவித்திருக்கும் பரிந்துரையில் மிக முக்கியமான ஒன்று, நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பதிலாக ஆக்கப்பூர்வமான நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவருவது. இதன்படி, ஓர் அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்போது, மக்களவை அல்லது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்பான்மை ஆதரவு உள்ள மாற்று ஏற்பாட்டை முன்மொழிந்தாக வேண்டும். யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவை கலைக்கப்படும் சூழல் ஏற்பட்டால், அனைத்து உறுப்பினர்களும் இணைந்து மாற்றுத் தலைமையை ஏற்படுத்த சட்ட ஆணையம் பரிந்துரைக்கிறது. அப்படியானால், கட்சித்தாவல் தடை சட்டத்தை அகற்றியேயாக வேண்டுமே. அதுகுறித்து சட்ட ஆணையம் எதுவும் பேசவில்லை. குதிரைபேரம் நடப்பதை தடுப்பதற்காகத்தான் கட்சித்தாவல் சட்டமே கொண்டுவரப்பட்டது என்பதை சட்ட ஆணையம் மறந்துவிட்டது போலிருக்கிறது.
 மக்களவைக்கான பொதுத்தேர்தலையொட்டி அதற்கு முந்தைய ஆண்டோ அடுத்த ஆண்டோ நடைபெற வேண்டிய சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒருங்கிணைத்து பொதுத்தேர்தல் நடத்துவது என்றும், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீதியுள்ள சட்டப்பேரவைகள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்றும் சட்ட ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. இதன்மூலம் ஐந்தாண்டு இடைவெளியில் இரண்டு தேர்தல்கள் மட்டுமே நடக்கும் என்பதால், அரசு இயந்திரம் ஸ்தம்பிக்காது என்பதுடன் தேர்தலுக்கான செலவும் கணிசமாகக் குறையும் என்பது சட்ட ஆணையத்தின் கருத்து.
 அடிக்கடி தேர்தல் நடத்துவதன் மூலம் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்கிற வாதத்தில் அர்த்தம் இல்லை. பல்வேறு குறைகள் இருந்தாலும்கூட, ஜனநாயகம் என்பது ஏனைய ஆட்சிமுறைகளைவிட மக்களின் உணர்வுகளை அதிகமாக பிரதிபலிக்கக்கூடியது என்பதால், அதற்காக நாம் மிக அதிகமான விலை கொடுப்பதில் தவறில்லை.
 2014 பொதுத் தேர்தலுக்காக அரசு செலவிட்ட தொகை ரூ.3,426 கோடி. அதாவது ஒரு வாக்காளருக்கு சராசரியாக ரூ.49 செலவாகியிருக்கிறது. ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக இது ஒன்றும் பெரிய செலவாகத் தோன்றவில்லை. இதை மிச்சம்பிடிக்க நினைத்து தேவையில்லாத பிரச்னைகளையும், மக்கள் விரோத ஆட்சிகளையும் வலியப்போய் இந்திய ஜனநாயகம் வரித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
 சட்ட ஆணையத்தின் இன்னொரு பரிந்துரை என்னவென்றால், சட்டப்பேரவையில் அரசு பெரும்பான்மை பலம் இழந்து மாற்று அரசும் ஏற்படாத நிலை ஏற்பட்டால், அடுத்த தேர்தல் வரை அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என்பது. குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது மத்திய அரசில் பதவியில் இருக்கும் கட்சியின் மறைமுக ஆட்சியாக இருக்குமே தவிர, அந்த மாநில மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட, பிரதிபலிக்கிற அரசாக இருக்காது.
 மறுதேர்தல் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஆட்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அதிகாரிகளின் ஆட்சியை அடுத்த பொதுத்தேர்தல் வரை தொடர்வது என்பது ஜனநாயக விரோதம் என்பதை சட்ட ஆணையம் ஏன் உணரவில்லை? ஒருவேளை மத்திய அரசு பெரும்பான்மை இழந்து, மாற்று அரசு ஏற்படுத்த முடியாமல் போனால்? மக்களவைக்கு ஒரு நியாயம், மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரு நியாயம் என்பது எப்படி சரியாக இருக்கும்?
 மொரார்ஜி தேசாய் (1979), சரண் சிங் (1980), வி.பி. சிங் (1990), சந்திரசேகர் (1991), வாஜ்பாய் (1996), தேவெ கெளட (1997), ஐ.கே. குஜ்ரால் (1998), வாஜ்பாய் (1999) ஆகிய அரசுகள் மக்களவையில் பெரும்பான்மை பலம் இழந்த வரலாறு உண்டு. அப்படி மக்களவையில் பெரும்பான்மை இழக்கும் போதெல்லாம், பெரும்பான்மை பலத்துடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகளையும் கலைக்க முற்படுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
 ஐந்தாண்டு அதிகபட்ச காலவரம்பு மக்களவைக்கோ, சட்டப்பேரவைக்கோ இருக்கலாமே தவிர, ஐந்தாண்டு கட்டாயக் காலவரம்பு என்பது கொண்டுவரப்பட்டால் எந்த ஒரு வெகுஜன அரசும் ஆட்சியில் இருந்து அகற்றப்படாது. இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு ரீதியான அரசியல் பார்வையும் பின்புலமும் கொண்டிருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் என்பது விவாதத்துக்கு வேண்டுமானால் நன்றாக இருக்குமே தவிர, நடைமுறை சாத்தியம் அல்ல!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com