வரம்பு மீறல் சரியல்ல!

கடந்த புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபாலுக்கும்,

கடந்த புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபாலுக்கும், நீதிபதி மதன் லோக்குருக்கும் இடையே நடந்த கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியமானது. அரசுக்கு எதிரான பொதுநல வழக்குகளை விசாரிக்கும்போது உச்சநீதிமன்றம் தேவையில்லாமல் வெளியிடும் கருத்துகள் குறித்து கவலையும் வருத்தமும் தெரிவித்தார் தலைமை வழக்குரைஞர். பிரச்னையின் எல்லா பரிமாணங்களையும் ஆராயாமல் நீதிபதிகள் கருத்து தெரிவிப்பதும் உத்தரவிடுவதும் அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறது என்கிற அவரது ஆதங்கத்தில் நியாயமிருக்கிறது. 
நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள்தான். எங்களுக்கும் இந்த நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்துத் தெரியும். நீதித்துறை எல்லா பிரச்னைகளிலும் அரசை விமர்சிப்பதில்லை. அரசியல் சாசன சட்டப் பிரிவு 21-இன் அடிப்படையில் சாமானிய மக்களின் உரிமைகளை நாங்கள் நிலைநாட்ட முற்படுகிறோம்' என்று பதிலளித்தார் நீதிபதி லோக்குர். 
நீதித்துறையின் தன்முனைப்பு நடவடிக்கை (ஜூடிஷியல் ஆக்டிவிசம்) தலைதூக்கியதற்கு சில காரணங்கள் இருந்தன. நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளின் குறைபாடுகளையும் நிர்வாகத்தின் தவறுகளையும் சரிசெய்ய நீதித்துறை தன்முனைப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் அமைச்சர்களும் மக்கள் பிரச்னைகளை முறையாகக் கையாண்டு தீர்வு காண்பதில் முனைப்புக் காட்டியிருந்தால் நீதித்துறை தலையிட வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
இரண்டாண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம், அப்போது நாடு தழுவிய அளவில் காணப்பட்ட வறட்சியை எதிர்கொள்ள அரசு ஒரு தேசிய நிதியை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது நாடாளுமன்றத்தின் நிதி நிர்வாக அதிகாரத்தில் நீதிமன்றத்தின் நேரடியான தலையீடு. ஐபிஎல் கிரிக்கெட் பந்தயத்தை மகாராஷ்டிரத்தில் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டது, தில்லியில் சுற்றுச்சூழல் வரியை அதிகரிக்கச் சொன்னது, தில்லிக்கும் சிம்லாவுக்கும் இடையே மீண்டும் விமானப் போக்குவரத்தைத் தொடங்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஆலோசனை கூறியது இவையெல்லாம் நீதித்துறையின் தேவையில்லாத தலையீடுகள்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் உச்சநீதிமன்றம் லோக் ஆயுக்தாவை அமைத்தது. லோக் ஆயுக்தாவை அமைப்பது என்பது மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையுடன் ஆளுநரால் தீர்மானிக்கப்பட வேண்டும். அதேபோல, மே 2016-இல் உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையின்மை ஏற்பட்டபோது உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தியதும், கர்நாடகத்தில் இத்தனை நாள்களுக்குள் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதும் உச்சநீதிமன்றத்தின் அப்பட்டமான அதிகார வரம்பு மீறல். அரசமைப்புச் சட்டம் ஆளுநர் என்கிற ஒரு பதவியை பிறகு எதற்காக ஏற்படுத்தியிருக்கிறது?
தேவையில்லாத நிர்வாக முடிவுகளை உச்சநீதிமன்றம் எடுக்க முற்படுவதும், அரசின் நிர்வாக விதிகளை விமர்சிப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தில்லியில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றமும், அமைச்சர்கள் ஊட்டச்சத்து குறைவை எதிர்க்கும் பணியில் முனைப்பு காட்ட வேண்டும் என்பது, பள்ளிக்கூடங்கள் கட்டணத்தை உயர்த்துவது, கட்டணத்தை உயர்த்துவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட பிரச்னைகளில் எல்லாம் பல உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் பட்டங்களைப் பறக்க விடும் மாஞ்சா கயிறு குறித்தும், திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது குறித்தும் உத்தரவுகள் பிறப்பிக்கும்போது மாநில உயர்நீதிமன்றங்கள் இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்க முற்படுவதில் வியப்பொன்றும் இல்லை.
நீதித்துறையின் அதிகார வரம்பு மீறலின் உச்சக்கட்டம் தேவையில்லாமல் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர முற்பட்டது. நீதித்துறை எப்போது தனக்குத்தானே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளவும், இடமாற்றம் செய்யவும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டதோ, அது முதல் நீதித்துறையின் தன்முனைப்பும் அதிகார வரம்பு மீறலும் தொடங்கின. அடுத்த கட்டமாக, தானே சட்டத்தையும் இயற்றி, தானே நிர்வாகத்தை நடத்த நீதித்துறை முற்படுவது என்பது அரசியல் சாசன முரண் மட்டுமல்ல, விபரீதமான போக்கும்கூட.
மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் சரியான நேரத்தில் மிகச் சரியான பிரச்னையை, துணிவுடன் உச்சநீதிமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். இந்தியாவில் ஏறத்தாழ 3.3 கோடி வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில், உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் 47,987 வழக்குகளும் தீர்ப்புக்குக் காத்திருக்கும் நிலையில் நிர்வாக முடிவுகளில் தன்முனைப்புடன் நீதித்துறை தலையிடுவதையும் அதிகார வரம்பு மீறலில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும்.
நியாயமான, முக்கியமான பிரச்னைகளில் மட்டுமே தலையிட்டு வந்த நீதித்துறை இப்போது எல்லா விஷயங்களிலும் தன்முனைப்புடன் தலையிடுகிறது என்பது மட்டுமல்ல, நீதித்துறையின் அதிகார வரம்பு மீறல்கள் மிக அதிகமாகவே அதிகரித்து விட்டிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கூறான நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் இவற்றுக்கிடையேயான அதிகாரப் பகிர்வு நீதித்துறையின் தன்முனைப்பாலும் அதிகார வரம்பு மீறலாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டுக்கு நல்லதல்ல.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com