வந்தே மாதரம்!

இந்தியா சுதந்திரம் அடைந்து 71ஆண்டுகள் நிறைவு பெற்று 72-ஆவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.


இந்தியா சுதந்திரம் அடைந்து 71ஆண்டுகள் நிறைவு பெற்று 72-ஆவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இங்கே பல்வேறு அரசர்கள், நிஜாம்களின் கட்டுப்பாட்டில் இருந்த சமஸ்தானங்கள் 564. பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள், பல்வேறு மதங்கள், நூற்றுக்கணக்கான ஜாதிப் பிரிவுகள் இங்கே காணப்பட்டன. இந்த நிலையில், இந்தியாவில் எல்லாப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து புதியதொரு தேசம் உருவானபோது, அது எத்தனை நாள் ஒற்றுமையாகத் தொடரும் என்கிற ஐயப்பாடு உலகெங்கிலும் இருந்தது. விரைவிலேயே நெல்லிக்காய் மூட்டை சிதறுவது போல இந்தியா சிதறப் போகிறது என்று ஆரூடம் கூறியவர்கள்தான் அதிகம். அதையெல்லாம் பொய்யாக்கி, தனது 72-ஆவது சுதந்திர தினத்தை இந்தியா இன்று கொண்டாடுகிறது.
இந்தியா என்பது பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய ஒரு தேசமாக இருந்தாலும் கூட, இந்தியன்' என்கிற உணர்வை ஒவ்வொரு குடிமகன் மனதிலும் ஏற்படுத்திவிட்டிருக்கும் பெருமை அண்ணல் மகாத்மா காந்தியடிகளையே சேரும். அவர் ஊட்டிய தேசப்பற்றும், அவருக்கிருந்த தொலைநோக்குப் பார்வையும், ஒருங்கிணைந்த இந்தியாவின் மேல் அவருக்கு இருந்த நம்பிக்கையும் இந்த தேசத்தை இன்றுவரை வழிநடத்துகிறது என்பதுதான் உண்மை.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மக்கள் தொகையில் 20 % மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். 10 பேரில் 8 பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தனர். அப்படி இருந்தும் கூட, அனைவருக்கும் வாக்குரிமை என்கிற அடிப்படையில், ஜனநாயகக் குடியரசாக இந்தியா அறிவிக்கப்பட்டது. அன்றைய தலைவர்களின் நம்பிக்கையை நாம் பொய்யாக்கவில்லை.
அது தவிர, இந்தியா சமூக, பொருளாதார வளர்ச்சியில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்த்தால், பெருமைப்படும் நிலையில் இல்லை. இப்போது உலகில் மிக அதிவேகமாக வளர்ச்சி அடையும் ஜனநாயகமாகவும், உலகில் ஆறாவது பெரிய பொருளாதாரமாகவும் இந்தியா விளங்குகிறது. ஆனால், இதைவிடச் சிறப்பாக நாம் செயல்பட்டிருக்கலாமோ என்கிற கேள்வியை இந்தச் சுதந்திரதின விழா எழுப்புகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திரம் அடைந்த நாடுகள்தான் இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகியவை. ஆனால், இந்தோனேஷியா, இலங்கை, தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை விட, இந்தியா உலக மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் பின்தங்கி இருக்கிறது. உலகில் 168 நாடுகளில் நாம் 131-ஆவது இடத்தில் இருக்கிறோம்.
2.6 டிரில்லியன் டாலருடன் (சுமார் ரூ.182 லட்சம் கோடி) இந்தியாவின் ஜிடிபி இந்தோனேஷியாவை விட இரண்டு மடங்கு அதிகம். ஆனால், இந்தியாவின் தனி மனித வருவாய் 1,900 டாலர். இது இந்தோனேஷியாவில் பாதி. மலேசியாவுடைய தனி மனித வருவாயில் ஐந்தில் ஒரு பகுதி. தென் கொரியாவின் வருவாயில் 10% . சிங்கப்பூரில் தனி மனித வருவாய் நம்மை விட 25 மடங்கு அதிகம். ஆசியாவிலேயே மலேசியாவில்தான் குறைந்த அளவு வறுமை என்றால், இந்தியாவில்தான் மிக அதிகமான வறுமை. 
சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியபோது, நமக்கு இருந்த சுதந்திரம் இப்போது சுதந்திர இந்தியாவில் நம்மை நாமே ஆட்சி செய்யும்போது இருக்கிறதா என்கிற கேள்வியையும் எழுப்பாமல் இருக்க முடியவில்லை. நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் அண்ணல் காந்தியடிகளின் வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற முடிந்தது. இப்போது காங்கிரஸின் சோனியா, ராகுல் தலைமையை எதிர்த்தோ, பாஜகவின் மோடி, அமித்ஷா தலைமையை எதிர்த்தோ ஒருவர் செயல்பட முடியாத நிலைமை காணப்படுகிறது. இதே நிலைதான் எல்லா அரசியல் கட்சிகளிலும். அரசியல் கட்சிகளில் கூட உட்கட்சி ஜனநாயகம் இல்லையெனும்போது, இந்திய ஜனநாயகம் சுதந்திரமாக செயல்படுகிறது என்று எப்படிக் கருதுவது?
அன்றைய பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் தொழிலதிபர்களாக இருந்த ஜம்னாலால் பஜாஜும், ஜி.டி.பிர்லாவும், ஏனைய பலரும் துணிந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அண்ணல் காந்தியடிகளுடன் தங்களை இணைத்துக் கொள்ள முடிந்தது. சைமன் கமிஷன் பகிஷ்கரிப்பிலும், உப்பு சத்தியாக்கிரகத்திலும் கலந்து கொண்டனர். அப்படி இருந்தும் கூட, அவர்களது பெரும் வர்த்தக நிறுவனங்கள் காலனி அரசால் பாதிக்கப்படவில்லை. இப்போது அதுபோல ஏதாவது தொழில் நிறுவனம் எதிர்க்கட்சியையோ, அரசுக்கு எதிரான போராட்டத்தையோ ஆதரித்துவிட முடியுமா?
70 ஆண்டுகளாகியும் வறுமை ஒழிக்கப்படவில்லை. இன்னும் கூட பட்டினிச் சாவுகளும் , தெருவோர வாசிகளும், குடிசையில் வாழ்வோரும் குறைந்தபாடில்லை. பத்தாண்டுகளுக்கு மட்டுமே என்று அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்ட இட ஒதுக்கீடு தேவையில்லை என்று நிராகரிக்கும் நிலையை, 70 ஆண்டுகளாகியும் நம்மால் அடைய முடியவில்லை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், இந்தியாவின் வளர்ச்சி ஒருசிலரை மட்டுமே அடைந்திருப்பதும், மேலிருந்து அடிமட்டம் வரை ஊழல் புரையோடிப்போயிருப்பதும்தான் என்பது அனைவருக்குமே நன்றாகத் தெரியும். ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, யாருமே தயாராக இல்லை. 
நமக்குள்ளே பெருமை பேசுவதில் பயனில்லை. நமது பலவீனங்களை உணர்ந்து, அவற்றுக்கு விடை தேடுவதுதான் புத்திசாலித்தனம். இந்த சுதந்திரதின சிந்தனை ஒவ்வொருவருக்கும் ஏற்படுமானால் மட்டுமே, பாரதியார் கனவு கண்ட பாருக்குள்ளே நல்ல நாடாக' இந்தியா ஒளிரும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com