தாய்மைக்கு வஞ்சனை!

பொது இடங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கான வசதிகளை செய்து தராமல் இருப்பதற்காக மத்திய அரசையும், தில்லி மாநில அரசையும்,


பொது இடங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கான வசதிகளை செய்து தராமல் இருப்பதற்காக மத்திய அரசையும், தில்லி மாநில அரசையும், மாநகராட்சியையும் தில்லி உயர் நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை, பொது இடங்களில் குழந்தைகளுடனான தாய்மார்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் இல்லையென்றே கூறலாம். அது உணவு விடுதிகளாகட்டும், விமான நிலையங்களாகட்டும், போக்குவரத்து நிலையங்களாகட்டும், பொது இடங்களாகட்டும், அங்கெல்லாம் புகைப்பிடிப்போர்களுக்குக்கூட தனியிடம் வழங்க முற்பட்டிருக்கும் நாம், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களிடம் கரிசனம் காட்டாமல் இருப்பது தாய்மையை நாம் எந்த அளவுக்கு அவமதிக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது. 
உலகிலேயே வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. மகப்பேறுக்குப் பிறகு, வேலைக்குப் போவதை நிறுத்திவிடும் பெண்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இதற்கு காரணம், பணியிடங்களில் தங்களது குழந்தைகளுக்கு மழலையர் காப்பகம் இல்லாமல் இருப்பதும், தாய்ப்பால் கொடுக்க, தனியான இடம் இல்லாமல் இருப்பதும்தான். 
இந்தியாவில், பூங்கா, சந்தை, வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள், பணியிடங்கள் என்று எல்லா பொது இடங்களிலும் தாய்மார்களுக்குப் பாதுகாப்பான வசதிகள் அமைக்கப்படவில்லை. பாதுகாப்பாக எந்த நேரமும் வீடு திரும்பவும், கழிவறை உள்ளிட்ட அடிப்படை சேவைகளும், மழலையர் காப்பக வசதிகளும் வேலை பார்க்கும் பெண்களுக்கு இல்லாமல் இருப்பது மிகப்பெரிய அவலம். ஆண்களுக்கு இணையான ஊதியம்கூட பெண்களுக்கு தரப்படுவதில்லை. 
குழந்தைகளுக்கு பிறந்தவுடன் தாய்ப்பால் வழங்குவது என்பது மிக மிக முக்கியம். உலகில் உள்ள 76 நாடுகளில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் வழங்குவதில் இந்தியா 56-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 50%-க்கும் குறைவான சிசுக்கள்தான் பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் பெறுகின்றன. முதல் ஆறு மாதத்தில் தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படும் சிசுக்களின் எண்ணிக்கை 55%. 
பிறந்தது முதல் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் மூலம் வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்ற உபாதைகளில் இருந்து ஆண்டுதோறும் 99,499 சிசு மரணத்தை தடுக்க முடியும் என்கிறது ஓர் அறிக்கை. இந்தியாவில் 10-இல் 6 குழந்தைகள் பிறந்த சில மணி நேரங்களில் தாய்ப்பால் பெறும் பாக்கியத்தை பெறுவதில்லை. உலகளாவிய அளவிலும் சரி, 5-இல் 3 சிசுக்கள் (7.8 கோடி) பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் பெறுவதில்லை. பிறந்த முதல் இரண்டு மணி நேரம் முதல் 23 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் பெறாத சிசுக்கள் பல்வேறு பிரச்னைகளால் மரணிக்க நேர்வது 33% என்று கூறப்படுகிறது. 
இந்தியா (41.5%), நேபாளம் (54.9%), வங்கதேசம் (50.8%), சீனா (26.4%), இலங்கை (90.3%), பாகிஸ்தான் (18%) உள்ளிட்ட நாடுகளில் இலங்கை மட்டும்தான் குழந்தைகளுக்குப் பிறந்தவுடன் தாய்ப்பால் வழங்கப்படுவதை முறையாக உறுதிப்படுத்தியிருக்கிறது. நேபாளம், வங்கதேசமும்கூட பாகிஸ்தான், சீனா, இந்தியாவை விட சிறப்பாக செயல்படுகின்றன என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
பிறந்தவுடன் தாய்ப்பால் வழங்கப்படாததால் ஏற்படும் சிசு மரணங்களின் மூலம் ஆண்டொன்றுக்கு 14 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 98,721 கோடி) பொருளாதார இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சீனா, இந்தியா, இந்தோனேஷியா, மெக்ஸிகோ, நைஜீரியா ஆகிய 5 நாடுகளில் மட்டுமே ஆண்டுதோறும் முறையாகத் தாய்ப்பால் வழங்கப்படாததால் 2 லட்சத்து 36 ஆயிரம் சிசுக்கள் மரணம் அடைகின்றன. இதன்மூலம் பொருளாதார இழப்பு ஆண்டொன்றுக்கு 119 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8,38,771 கோடி) என்று யுனிசெஃப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து செய்த ஆய்வொன்று குறிப்பிடுகிறது.
முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதால் பல்வேறு நோய்த் தொற்றிலிருந்து சிசுக்கள் காப்பாற்றப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதால் தாய்மார்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் சுகாதாரம் தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாய்ப்பால் வழங்கப்படுவதால் குழந்தைகளுக்குப் பெரிய அளவில் பயன் ஏற்படுவதில்லை என்கிற ஒரு விசித்திரமான கருத்தைத் தெரிவித்திருக்கிறார். குழந்தைபெற்ற தாய்மார்கள், ஊட்டச்சத்து பெறுவதற்கு, குழந்தைகளுக்குப் புட்டிப்பால் வழங்குவதுதான் சரியாக இருக்குமென்றும், அதன்மூலம் பிரசவத்துக்குப் பிறகான பச்சை உடம்பை அவர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் புதியதொரு விளக்கமும் அளித்திருக்கிறார். 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி, சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான பால் பவுடர் வணிகம் 47 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3,31,279 கோடி) என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் சார்பில் அவர் அவ்வாறு பேசியிருக்கக்கூடும்.
தொன்றுதொட்டு, தாய்ப்பாலின் முக்கியத்துவம் நம் முன்னோர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தாய்மார்கள் சிசுக்களுக்குத் தாய்ப்பால் வழங்குவதை உறுதிப்படுத்துவதும், எல்லா பொது இடங்களிலும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் வசதியை உறுதிப்படுத்துவதும் காலத்தின் கட்டாயம். வருங்கால சந்ததியரின் உடல் நலம் பேணாமல், உலகின் 6-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருப்பதில் அர்த்தமில்லை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com