ஜவுளித் துறையின் சவால்!

மத்திய அரசு 328 ஜவுளி பொருள்களுக்கான இறக்குமதி வரியை இரட்டிப்பாக்கியிருக்கிறது.

மத்திய அரசு 328 ஜவுளி பொருள்களுக்கான இறக்குமதி வரியை இரட்டிப்பாக்கியிருக்கிறது. இதன் மூலம் கார்ப்பெட்டுகள், துணி ரகங்கள், தொழில் துறைக்கான சிறப்புத் துணி ரகங்கள் ஆகியவற்றின் இறக்குமதி விலை கடுமையாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடக்கும் கடுமையான வர்த்தகப் போரின் விளைவாக, இந்திய ஜவுளித் துறை மிக அதிகமாக பாதிக்கப்பட இருக்கிறது. இதைத் தடுப்பதற்காகக் கடந்த மாதம் 50-க்கும் மேற்பட்ட ஜவுளி ரகங்களின் மீதான இறக்குமதி வரியை முன்னறிவிப்பு இல்லாமலும், பரபரப்பை ஏற்படுத்தாமலும் இந்திய அரசு அதிகரித்துவிட்டிருந்தது. அதன் தொடர் விளைவுதான் இப்போதைய கொள்கை முடிவும். 
இந்தியாவைப் பொருத்தவரை விவசாயத்துக்கு அடுத்தபடியாக மிக அதிகமான வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் நெசவுத் தொழில்தான். சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஜவுளிப் பொருள்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருக்கும் நிலையில், சீனா இந்தியச் சந்தையை தனது விலை குறைந்த ஜவுளி பொருள்களால் நிரப்பிவிடக் கூடும் என்கிற நியாயமான அச்சம் எழுந்திருக்கிறது. அப்படி சீன ஜவுளி பொருள்கள் பெருமளவில் இந்தியாவுக்கு வரத் தொடங்கினால் இந்திய உள்நாட்டு நெசவுத் தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு அழிவை நோக்கி நகரக்கூடும். 
நூற்றாண்டு காலமாக இந்தியாவின் ஜவுளித் துறை உலகிலேயே புகழ்பெற்றதாக இருந்து வருகிறது. இந்தியாவின் மிகப் பழைமையான தொழிலும், இந்தியப் பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும் தொழிலும் நெசவுத் தொழிலாகத்தான் இருந்து வருகிறது. இந்திய மொத்த ஏற்றுமதியில் 15 விழுக்காடு ஜவுளி பொருள்கள் என்பது மட்டுமல்லாமல் மிக அதிகமான பேருக்கு தொழில் வழங்கும் துறையாகவும் ஜவுளித் துறை இருந்து வருகிறது.
இந்திய ஜவுளித் துறை இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது. முதலாவது, அமைப்பு சாராத துறை. கைத்தறி, கைவினைப் பொருள்கள், பட்டுப் பூச்சி வளர்ப்பு, பட்டு நூல் தயாரிப்பு உள்ளிட்டவை சிறுசிறு அளவில் பாரம்பரியமான முறையில் செயல்படுகின்றன. இந்த அமைப்புசாரா நெசவுத் தொழிலை விவசாயிகள் பலரும் வேளாண்மை இல்லாத நேரத்தில் பகுதி நேரத் தொழிலாகவும் இந்தியாவின் பல பாகங்களில் செய்து வருகிறார்கள். கைத்தறி என்பது இன்றும்கூட பல லட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது.
இரண்டாவதாக, மின் விசைத் தறிகள், பெரிய நூற்பாலைகள், ஆயத்த ஆடைத் தயாரிப்புகள், பின்னலாடைத் தயாரிப்புகள் என்று நவீன இயந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி நடத்தப்படும் தொழிற்சாலைகள். இவை பெரிய முதலீட்டுடன் செயல்படுகின்றன. இவற்றிலும்கூட பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள்.
இந்திய ஜவுளித் துறை ஏறத்தாழ 10 கோடிக்கும் மேலானவர்களுக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்குகிறது. 2017-18-இல் இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதி 37.74 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2.64 லட்சம் கோடி). இந்தியாவின் ஜவுளித் துறைவின் மொத்த விற்பனை மதிப்பு 150 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10.5 லட்சம் கோடி). 2020-இல் இதுவே 230 பில்லியன் டாலரை (சுமார் ரூ.16.1 லட்சம் கோடி) எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியாவின் ஜிடிபியில் சுமார் 2% ஆகவும், இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 10% ஆகவும் ஜவுளித் துறை காணப்படுகிறது.
ஜவுளித் துறையின் அடிப்படை கச்சாப் பொருள் பருத்தி. இந்திய விவசாயிகளில் கணிசமானவர்கள் பருத்திச் சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஜவுளித் துறை ஆரோக்கியமாக இருப்பது மறைமுகமாக இந்திய விவசாயத்தையும் பாதுகாக்கிறது. இந்தியாவின் பருத்தி உற்பத்தி 2017-18-இல் 37.7 மில்லியன் (சுமார் 263.9 கோடி) பேல்கள். இந்தியாவின் மொத்தப் பருத்தி சாகுபடிப் பரப்பு 2017-18-இல் சுமார் 11 மில்லியன் (சுமார் 1 கோடி 10 லட்சம்) ஹெக்டேர். கடந்த 5 ஆண்டுகளில் ஜவுளித் துறை கணிசமான முதலீட்டைப் பெற்றிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு மட்டுமே கடந்த பத்து ஆண்டுகளில் 2.82 பில்லியன் டாலர் (சுமார் ரூ.19,740 கோடி) ஜவுளித் துறைக்கு கிடைத்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. 
இந்தப் பின்னனியில்தான் மத்திய அரசு ஜவுளிப் பொருள்களின் இறக்குமதிக்கு விதித்திருக்கும் அதிகரித்த வரிகளை நாம் பார்க்க வேண்டும். ஜவுளித் துறையை பொருத்தவரை, வங்க தேசம், இலங்கை, வியத்நாம் ஆகிய நாடுகள் சர்வதேசச் சந்தையில் இந்தியாவுக்குக் கடும் போட்டியாக உயர்ந்திருக்கின்றன. அதே நேரத்தில், இந்த நாடுகள் இந்தியாவுடன் மிகவும் சாதகமான வணிக ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கின்றன. அதைப் பயன்படுத்தி சீனா மறைமுகமாக இந்த நாடுகளின் மூலம் மதிப்புக் கூடுதல் செய்து தனது பொருள்களை வரிகள் இல்லாமல் இந்தியாவுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் அதிகரித்த இறக்குமதி வரியை எதிர்கொள்ள, இந்த முறையை சீனா பெரிய அளவில் பயன்படுத்தி விடாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு நமது இறக்குமதிகளில் அடிப்படை உற்பத்தி செய்யப்படும் நாடு குறித்தும் வரி விதிக்கும்போது சில நிபந்தனைகளை இணைத்தாக வேண்டும். 
இறக்குமதி வரி விதிப்பு ஒருபுறம் இருந்தாலும், இந்திய ஜவுளித் துறையை சர்வதேச அளவில் போட்டிபோடும் நிலைக்கு உயர்த்துவதும், மரபுசாரா நெசவுத் தொழிலுக்கு முறையான விற்பனை வியூகத்தை வகுத்து அதற்கென்று சர்வதேசச் சந்தையில், வரவேற்பை மேம்படுத்துவதும் அரசின் கடமை. ஒரு காலத்தில் இந்திய மஸ்லின் துணிகள் உலகத்திலேயே விலை மதிப்பில்லாததாக இருந்ததை நாம் மறந்து விடக்கூடாது. இன்னமும்கூட நமது கைத்தறித் துணிகளும், கைவினைப் பொருள்களும், பட்டுத் துணிகளும் சர்வதேசச் சந்தையில் போதுமான வரவேற்பைப் பெறவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com