இம்ரானின் புதிய இன்னிங்ஸ்!

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றிருக்கிறது. 21 பேர் கொண்ட இம்ரான் தலைமையிலான


பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றிருக்கிறது. 21 பேர் கொண்ட இம்ரான் தலைமையிலான அமைச்சரவையில் 16 பேர் அமைச்சர்களாகவும், 5 பேர் பிரதமரின் ஆலோசகர்களாகவும் பதவி வகிப்பார்கள். பாகிஸ்தான் அதிபர் இல்லத்தில் எளிமையான முறையில் நடைபெற்ற இம்ரான் கான் அமைச்சரவையின் பதவியேற்பு விழா பெரிய அளவிலான வியப்பை ஏற்படுத்தவில்லை. பாகிஸ்தானின் அணுகுமுறையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையையும் அளிக்கவில்லை. 12 உறுப்பினர்கள் முஷாரஃப் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் என்பதும், 5 பேர் முந்தைய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அமைச்சரவையில் பங்கு பெற்றவர்கள் என்பதும்தான் அதற்குக் காரணம்.
புதிய பாகிஸ்தான்' என்கிற கோஷத்துடன் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், அவரது கோஷத்துக்கு ஏற்றாற்போல பல புதுமுகங்களை அறிமுகப்படுத்துவார் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்திருப்பதிலிருந்து இந்த அமைச்சரவையே ராணுவத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டிருக்கிறதோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது. முன்னாள் அதிபர் முஷாரஃபின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வகித்த பலர் இந்த அமைச்சரவையிலும் இடம் பெற்றிருப்பது, நிர்வாக அனுபவமில்லாத இம்ரான் கானுக்கு வலு சேர்க்கும் 
என்றாலும்கூடக் கொள்கை ரீதியாகவும் அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தத் தடையாக இருக்கக்கூடும். முந்தைய அமைச்சரவைகளில் பதவி வகித்தவர்களுக்கு அதே துறைகளை வழங்கி அமைச்சர்களாக்கியிருப்பது இம்ரான் கானின் தன்னம்பிக்கையின்மையையும், தனக்கென்று தனது ஆதரவாளர்கள் அடங்கிய அமைச்சரவையை உருவாக்க இயலாத தர்மசங்கடத்தையும் வெளிச்சம்போடுகிறது.
பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக கடந்த சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்ட இம்ரான் கான் மிகப்பெரிய பொருளாதார சவாலை எதிர்கொள்கிறார். தனது தேர்தல் பிரசாரத்தில் மக்களைக் கவர்வதற்காக அவர் வாரிவழங்கியிருக்கும் வாக்குறுதிகளை, பாகிஸ்தான் பொருளாதாரம் இப்போது இருக்கும் நிலையில் அவரால் நிறைவேற்றுவது என்பது இயலாத ஒன்று. போதாக்குறைக்கு அவரது பாகிஸ்தான் தெஹ்ரீஃப்-ஏ-இன்சாஃப் கட்சி தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், அவரது அரசு ஏனைய சிறிய கட்சிகளை சார்ந்துதான் இருக்க வேண்டும் என்கிற நிலையில், இம்ரான் கான் அரசின் செயல்பாடும் சுமுகமாக இருக்க வழியில்லை.
அவருக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும் நிலையில், அரசு நிர்வாகத்தில் முன்னனுபவம் இல்லாத பிரதமர் இம்ரான் கான் தனக்கு முன்னால் இருக்கும் சவால்களை எப்படி எதிர் கொள்ளப் போகிறார் என்பதை அவரது கட்சிக்காரர்களேகூட ஐயப்பாடுடன் எதிர்கொள்கிறார்கள். அரசியலில் களமிறங்கி கடந்த 22 ஆண்டுகள் தளராமல் போராடி அவர் விரும்பிய இலக்கான பிரதமர் பதவியை அடைந்துவிட்டிருக்கிறார் என்றாலும், இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதில் தான் அவரது நிஜமான வெற்றி அடங்கியிருக்கிறது.
இன்றைய பாகிஸ்தானில் ஜிகாதும், அண்டை நாடுகளுக்கு எதிரான தீவிரவாதமும்தான் அங்கிருக்கும் இளைஞர்களுக்கு காணப்படும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு. இதிலிருந்து இளைஞர்களை மீட்டு அவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தாக வேண்டும். ராணுவத்தின் இரும்புப் பிடியில் இருக்கும் வெளியுறவுக் கொள்கையையும், தேசிய பாதுகாப்புக் கொள்கையையும் இம்ரான் கான் எப்படி அவர்களிடமிருந்து மீட்டெடுக்கப் போகிறார் என்பது இன்னொரு சவால். அதை அவர் விரும்புகிறாரா என்பது அடுத்த கேள்வி. அவரது கூற்றுகளின்படி, சீனாவுடனான உறவுக்கு முதல் முக்கியத்துவத்தையும், இந்தியாவுடனான உறவுக்கு கடைசி இடத்தையும் அவர் வழங்குவது தெரிகிறது. இது எந்த அளவுக்கு அவரது வெற்றிக்கு உதவும் என்று தெரியவில்லை.
வெளிவிவகாரத்துறை அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் ஷா முகமுத் குரோஷி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டிருக்கிறார். இந்தியப் பிரதமர் மோடியும் இம்ரான் கான் பதவி ஏற்றபோது அவருக்கு அனுப்பிய கடிதத்தில், தெற்காசியா தீவிரவாதத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றும், பாகிஸ்தானில் பதவியேற்றிருக்கும் இம்ரான் கான் அரசு அந்த இலக்கை நோக்கி இந்தியாவுடன் இணைந்து நகர வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். தனது வெற்றியைத் தொடர்ந்து இம்ரான் கான் அளித்த பேட்டியில், இந்திய - பாகிஸ்தான் உறவை மேம்படுத்த இந்தியா ஓரடி முன் வைத்தால் பாகிஸ்தான் இரண்டு அடி முன் வைக்கும் என்று தெரிவித்திருந்தார். பிரதமராகி இருக்கும் நிலையில் அவர் அதை செயல்படுத்துவார் என்று எதிர்பார்ப்போமாக.
பாகிஸ்தானில் பதவியேற்றிருக்கும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது அரசு இது. 1947-இல் உருவான பாகிஸ்தானின் வரலாற்றில் ராணுவப் புரட்சிகளின் மூலம் பெரும்பாலான ஆண்டுகளில் ராணுவம்தான் ஆட்சியில் இருந்திருக்கிறது. அதேபோல, 2007-க்குப் பிறகு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு பிரதமரும் பாகிஸ்தானில் தனது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ததில்லை. கிரிக்கெட் வீரராக இருந்தபோது பல டெஸ்ட் பந்தயங்களில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடிய சாதனையாளர் இம்ரான் கான். அரசியல் களத்திலும் அவரால் அதே போன்ற சாதனையை நிகழ்த்த முடியுமா என்பதுதான் அனைவராலும் எழுப்பப்படும் கேள்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com