யாதும் ஊரே யாவரும் கேளிர்!

கேரளத்தில் ஏற்பட்டிருக்கும் பேரிடருக்கு இந்தியாவிலுள்ள பல மாநில அரசுகள் மட்டுமல்ல, சில வெளிநாடுகளும் உதவி செய்ய முன்வந்திருக்கின்றன

கேரளத்தில் ஏற்பட்டிருக்கும் பேரிடருக்கு இந்தியாவிலுள்ள பல மாநில அரசுகள் மட்டுமல்ல, சில வெளிநாடுகளும் உதவி செய்ய முன்வந்திருக்கின்றன. ஆனால், அந்நிய நாடுகள் கேரளப் பேரிடருக்கு நிதி உதவி அளிப்பதையோ, கேரள மக்களின் மறு வாழ்வுக்கு உதவுவதையோ ஏற்றுக்கொள்வதில்லை என்கிற விசித்திரமான முடிவில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
 கேரளப் பேரிடரை, உள்நாட்டு உதவியுடனும், முயற்சியுடனும் எதிர்கொண்டால் போதும் என்று மத்திய அரசு தீர்மானித்திருப்பதாக வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்திய வம்சாவளியினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள், சர்வதேச அறக்கட்டளைகள் உள்ளிட்டோர், பிரதமர் அல்லது முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்குவதை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், அந்நிய நாடுகள் நேரிடையாக கேரளப் பேரிடருக்கு உதவுவது ஏன் மறுக்கப்பட வேண்டும் என்கிற கேரள முதல்வர் பினராயி விஜயனின் கேள்வியில் நியாயம் இருக்கிறது.
 ஐக்கிய அரபு அமீரகமும், மாலத்தீவும் கேரளப் பேரிடருக்கு உதவ முன்வந்துள்ளன. ஏன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூட, பாகிஸ்தான் மக்கள் சார்பில் கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் எந்தவித உதவியும் வழங்கத் தயார் என்று அறிவித்திருக்கிறார்.
 சமீபத்தில் ஏற்பட்ட அடைமழையால் கேரளத்தின் 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. கேரளத்தில் உள்ள 1,564 கிராமங்களில் 774 கிராமங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்பட்டன. கேரளத்தின் மொத்த மக்கள்தொகையான 3.48 கோடியில் 54 லட்சத்துக்கும் அதிகமானோர், அதாவது மொத்த மக்கள்தொகையில் 6-இல் ஒரு பகுதியினர் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 கேரளம் அடைந்திருக்கும் இழப்புகளை முழுமையாக எதிர்கொள்ள முடியாது என்றாலும் கூட, உடனடி நிவாரணத்துக்கே குறைந்தது ரூ.2,500 கோடிக்கு மேல் தேவைப்படுகிறது என்பதுதான் எதார்த்த நிலை. மத்திய அரசு வழங்கியிருப்பது வெறும் ரூ.600 கோடி மட்டுமே என்கிற நிலையில், கேரளத்தின் தேவையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது இன்னும் கூடக் கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில், உதவிக்கரம் நீட்ட முன்வருபவர்களை நிராகரிப்பது ஏன் என்கிற கேள்விக்கு. மத்திய அரசிடமிருந்து சரியான பதில் இல்லை.
 2004-இல் இந்தியாவை சுனாமி தாக்கியபோது, அன்றைய மன்மோகன் சிங் அரசு, வெளிநாடுகளில் இருந்து உதவிபெற வேண்டிய அவசியம் இல்லையென்று தீர்மானித்தது. அந்த முடிவே கூட தேவையில்லாத போலி கெüரவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்றுதான் கூறவேண்டும். அதனால், அதே முடிவை நாம் தொடர வேண்டியதில்லை. முன்னாள் வெளிவிவகாரத்துறை செயலர்களான சிவசங்கர மேனன், நிருபமா ராவ் ஆகியோர் இப்போது வெளிநாடுகள் கேரளப் பேரிடருக்கு உதவ முன்வருவதை புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருத்துத் தெரிவித்திருப்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
 அதேபோல, இந்தியாவில் இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது வெளிநாடுகளில் இருந்து உதவிக் குழுக்களோ, தன்னார்வத் தொண்டர்களோ, தனி நபரோ உதவ வருவதை நிராகரிப்பது என்பது நாகரிகமான செயல்பாடாகத் தோன்றவில்லை. மத்திய உள்துறை அமைச்சகம் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து, வெளிநாட்டிலிருந்து வழங்கப்படும் உதவிகளை ஏற்பது குறித்து முடிவுகளை எடுப்பதுதான் சரியாக இருக்கும்.
 சமீபத்தில், தாய்லாந்தில் கால்பந்தாட்ட குழுவைச் சேர்ந்த சிறுவர்கள் "சியாங் ராய்' என்ற இடத்தில், "தாம்லூவாங்' என்ற குகைக்குள் சிக்கிக்கொண்டபோது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா என்று உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலிருந்தும் மீட்புக் குழுவினர் ஓடோடி வந்ததை நாம் இங்கே நினைவுகூர வேண்டும். உலகம் தனித்தனி தீவாக இயங்கி வந்த காலம் மாறி, நமது மூதாதையர்கள் கனவு கண்ட "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற மனநிலைக்குப் பேரிடர் காலங்களில் உலகம் மாறிவிடும் ஆரோக்கியமான சூழல் உருவாகியிருக்கிறது.
 இந்தப் பின்னணியில் நல்ல எண்ணத்துடன் அந்நிய நாட்டு அரசுகள் நிதி உதவியோ, பொருள் உதவியோ, மீட்புப் பணியில் உதவியோ செய்ய முன்வரும்போது அதை நாம் ஏன் நிராகரிக்க வேண்டும்? அந்நிய முதலீடுகளுக்காக பிரதமரும் முதலமைச்சர்களும் உலகம் எல்லாம் சுற்றிவரும்போது வலிய வரும் அந்நிய நிவாரண உதவிகளை ஏற்பதில் நாம் ஏன் கெüரவம் பார்க்க வேண்டும்?
 இந்தியா உலகமயக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துடன் இணைந்திருக்கும் நிலைமை. நம்மை விட வளர்ச்சி அடைந்த சீனா உள்ளிட்ட எல்லா அந்நிய நாடுகளிடமிருந்தும் நாம் முதலீட்டுக்கும், தொழில்நுட்ப உதவிக்கும், பங்களிப்புக்கும் தயாராக இருக்கும்போது, அந்நிய நாடுகள் இந்தியாவில் பேரிடரோ, பேரிழப்போ ஏற்படும்போது உதவிக்கரம் நீட்ட முன்வருவதில் வியப்பென்ன இருக்கிறது? அதை ஏற்றுக்கொள்வதை சுயகெüரவம் தடுக்கிறது என்று இந்திய அரசு கூறுமேயானால், அதைவிட போலித்தனம் வேறு எதுவுமே இருக்க முடியாது.
 மத்திய அரசு, கேரளம் எதிர்கொள்ளும் பேரிழப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தால், அந்நிய நாடுகளின் உதவியை நிராகரிக்கும் தார்மிக உரிமை மத்திய அரசுக்கு உண்டு. அதற்குத் தயாராக இல்லாதபோது, இப்படி ஒரு முடிவை எடுப்பதன் அரசியல் பின்னணி என்ன என்பது புரியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com