2018-19 நிதிநிலை அறிக்கை - III

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல்

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கை ஐந்து முக்கியமான இலக்குகளை நோக்கி பயணிக்கிறது என்பது வெளிப்படையாக காணப்படும் தோற்றம். அதேநேரத்தில் இந்த இலக்குகள், ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி ஒதுக்கீட்டில் சாத்தியம்தானா என்கிற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. அதற்கு சில நியாயமான காரணங்கள் இருக்கின்றன. 
விவசாயத்திற்கும் கிராமப்புற இந்தியாவுக்கும் அவரது உரையில் 35 பத்திகளும், 2,200 வார்த்தைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. சுகாதாரம், கல்வி, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு 25 பத்திகளும் 1,500 வார்த்தைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. நடுத்தர, சிறு, குறு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து 12 பத்தி
களும், 702 வார்த்தைகளும் காணப்பட்டன. 
அவரது உரையில் ஏழைகள் குறித்து 21 முறையும், விவசாயிகள் குறித்து 25 முறையும், விவசாயம் குறித்து 16 முறையும், சுகாதாரம் குறித்து 29 முறையும், வேலைவாய்ப்பு குறித்து 17 முறையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நடுத்தர வர்க்கத்தினர் குறித்து நான்கே நான்கு இடங்களில் மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிதியமைச்சரின் நோக்கம் மக்கள் நலனாக இருந்தாலும், அதை நிறைவேற்றுவதற்கான ஒதுக்கீடு இல்லாமல் இருப்பது நிதிநிலை அறிக்கையைக் கூர்ந்து கவனிக்கும்போது தெரியவருகிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் மிக அதிகமான முன்னுரிமை தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. 10 கோடி குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்குவது என்பது உண்மையிலேயே பிரம்மாண்டமான இலக்கு. ஆனால், அதை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பது குறித்தத் தெளிவான விளக்கமோ, வழிமுறையோ நிதிநிலை அறிக்கையில் இல்லை. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வெறும் ரூ.2,000 கோடி மட்டுமே. மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன்தான் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். எந்த அளவுக்கு இது உடனடிச் செயல்பாட்டில் பயனளிக்கும் என்பது கேள்விக்குறியாக நம் முன் நிற்கிறது.
அதேபோல, விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு அதிகம் விலை தரப்படும் என்கிறது நிதிநிலை அறிக்கை. ஆனால், உணவு மானியத்துக்காக அடுத்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டிருப்பது ரூ.29,041 கோடி மட்டுமே. அதேபோல, விவசாயச் சந்தைகள் உருவாக்குவது என்பது மிகவும் அத்தியாவசியமான ஆக்கப்பூர்வமான முயற்சி. ஏறத்தாழ 22,000 வேளாண் சந்தைகளை தரம் உயர்த்தி விளைபொருள்களை வாங்குவது என்கிற முயற்சிக்கு அரசின் ஒதுக்கீடு வெறும் ரூ.2,000 கோடி மட்டுமே. 
இந்த நிதிநிலை அறிக்கையில் கிராமப்புறங்களில் உள்ள மூன்று கோடி வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு தருவதற்கும், நான்கு கோடி வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு தருவதற்கும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு கோடி புதிய கழிப்பறைகள் கட்டுவதற்கும், நீர்ப்பாசன வசதிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்காகத் தேவைப்
படும் ரூ.14.34 லட்சம் கோடி நிதியில் ரூ.11.98 லட்சம் கோடி வெளியே இருந்து பெற வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. யாரிடமிருந்து அரசு கடன் வாங்கப்போகிறது என்பது குறித்தெல்லாம் விவரம் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், அரசு ஒதுக்கீடு செய்திருப்பது என்னவோ ரூ.2.36 லட்சம் கோடி மட்டுமே.
இந்த நிதிநிலை அறிக்கையில் கல்வி, ஊட்டச்சத்து அதிகரிப்பு, ஆரம்ப சுகாதாரம் ஆகியவை பெயருக்குக் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே தவிர, பெரிய அளவில் ஒதுக்கீடு எதுவும் இல்லை. 
கிராமப்புறங்களில் 10 கோடி கழிப்பறைகளும், நகர்ப்புறங்களில் 1.5 கோடி கழிப்பறைகளும் கட்டுவது என்கிற பிரம்மாண்டமானத் திட்டம் மோடி அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற போதுமான ஒதுக்கீடு தரப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை. ஊட்டச்சத்து திட்டத்திற்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. ஆனால், அதற்கு ஏற்றாற்போன்ற ஒதுக்கீடு நிதிநிலை அறிக்கையில் இல்லை.
இந்த நிதிநிலை அறிக்கையில் என்ன அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை விட, என்னவெல்லாம் இல்லை என்பதுதான் கூர்ந்து நோக்கும்போது வெளிப்படுகிறது. கடந்த நான்கு நிதிநிலை அறிக்கைகளில் நரேந்திர மோடி அரசு அறிவித்த திட்டங்களும், இலக்குகளும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த கட்டமைப்பு வசதியும் மேம்படுத்தப்பட்டு, வேலைவாய்ப்பு பெரிய அளவில் உருவாக்கப்பட்டு இந்தியாவே மாற்றப்பட்டிருக்கும். தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கையைப் போலவே, முந்தைய நிதிநிலை அறிக்கைகளும் பல்வேறு உயரிய இலக்குகளை நிர்ணயித்து அறிவித்தனவே தவிர, அதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் வேதனை.
பொலிவுறு நகரங்கள் திட்டம், 2022-க்குள் அனைவரும் வீடு திட்டம், நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் என்று ஒன்றன் பின் ஒன்றாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பொலிவுறு நகரங்கள் திட்டம் குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் 99 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதுவரை ரூ.2,350 கோடி செலவில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது. ஆனால், இந்தியாவின் எந்தவொரு நகரமும் பொலிவுற்றதாகத் தெரியவில்லை. 
உன்னதமான திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கையிலும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருக்கிறார். அதற்கு முறையான நடைமுறைத் திட்டமோ, போதுமான ஒதுக்கீடோ இல்லாமல் இருப்பதுதான் இந்த நிதிநிலை அறிக்கையின் மிகப்பெரிய பலவீனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com