வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம்!

நீண்ட நாளாக எதிர்பார்த்து வந்த

நீண்ட நாளாக எதிர்பார்த்து வந்த காவிரி நதிநீர் பங்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. பத்மாவத் திரைப்படப் பிரச்னையாகட்டும் வேறு எந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னையாகட்டும் மாநில அரசுகள் தனது தீர்ப்பையும், சட்டத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்று உத்தரவிடும் உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பை தூக்கியெறியும் கர்நாடகத்திடம் கரிசனம் காட்டியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது! 
பிப்ரவரி 5, 2007-இல் வெளியான நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் தரப்பட வேண்டும். அப்போதே தமிழகம் இதுபோதாது, கூடுதலாக 70 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. நடுவர்மன்றம் ஒதுக்கீடு செய்த 192 டிஎம்சி தண்ணீரும் கிடைக்கவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே ஒதுக்கி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 
குடகுமலையிலுள்ள தலைக் காவிரியில் உற்பத்தியாகும் காவிரி நதி, மொத்த நீளத்தில் (736 கி.மீ.) கர்நாடகத்தில் 320 கி.மீ.களும், தமிழகத்தில் 416 கி.மீ.களும் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கர்நாடகத்தைவிட அதிக தூரம் பாய்வது தமிழகத்தில்தான். தமிழகத்தில்தான் அதிகமான காவிரி பாசனப் படுகையும் காணப்படுகிறது. உலகிலுள்ள எந்த நதியை எடுத்துக்கொண்டாலும், அது உற்பத்தியாகும் நாட்டையோ மாநிலத்தையோவிட அதனால் அதிக பயனடையும் நாட்டிற்கோ மாநிலத்திற்கோதான் நதிநீர் மீதான கூடுதல் உரிமை என்பது எழுதப்படாத சட்டம். இதெல்லாம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாததல்ல.
காவிரி நதிநீர் பிரச்னை என்பது நூற்றாண்டு காலப் பிரச்னை. சென்னை, மைசூர் மாகாணங்களுக்கு இடையே 1892-ஆம் ஆண்டு முதன்முதலில் காவிரி பங்கீடு குறித்து ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 1924-ஆம் ஆண்டு மீண்டும் பிரச்னை உயர்ந்தது. அன்றைய மைசூர் அரசு காவிரியின் குறுக்கே கண்ணம்பாடி என்னும் இடத்தில் 41.5 டிஎம்சி கொள்ளளவில் கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டத் திட்டமிட்டது. இதற்கு சென்னை மாகாண அரசு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. 
இந்திய விவகாரங்களுக்கான பிரிட்டிஷ் அமைச்சகம் நேரிடையாகத் தலையிட்டு 1924-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் மைசூர் அரசு கண்ணம்பாடியிலும், சென்னை ராஜதானி அன்றைய ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூரிலும் அணை கட்டிக்கொள்ள முடிவானது. ஐம்பது ஆண்டுகால ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
1974-இல் அந்த ஒப்பந்தம் காலாவதியானதைத் தொடர்ந்து கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே பிரச்னை தொடர்ந்து வந்தது. உச்ச நீதிமன்றத்துக்கும், நடுவர்மன்றத்துக்கும் இடையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊசலாடியது. 
இந்த நிலையில்தான் 1991-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நடுவர்மன்றம் ஓர் இடைக்காலத் தீர்ப்பை வழங்கி அதன்படி 205 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்க வேண்டும் என்றும், தன் சாகுபடி பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் உயர்த்தக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை கர்நாடகம் ஏற்கவில்லை என்பது மட்டுமல்ல, அந்த இடைக்காலத் தீர்ப்புக்கு தடைவிதித்து ஓர் அவசரச் சட்டத்தையே கர்நாடக சட்டப்பேரவையில் கொண்டு வந்தது. 
நடுவர்மன்றத் தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகம் நடந்துகொண்டபோது, அந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடத்தான் உச்ச நீதிமன்றத்தால் முடிந்ததே தவிர, அந்த இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவோ, மத்திய அரசுக்கு நடைமுறைப்படுத்த உத்தரவிடவோ இயலவில்லை என்பதுதான் வேதனை. 1991 டிசம்பர் 11 அன்று மத்திய அரசு இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டும்கூட கர்நாடக அரசு அந்த ஆணையை ஏற்க மறுத்தது. 
தமிழகத்திற்கான தண்ணீர் அளவை 14.75 டிஎம்சியாக குறைத்திருப்பதற்கு உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் காரணம் வேடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 10 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதாகவும், அதைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் தமிழகத்திற்கான தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. காவிரி நீர் பிரச்னை என்பதே நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கிடைக்கும் காவிரி நீரை தமிழகமும் கர்நாடகமும் பகிர்ந்து கொள்வது குறித்தானதுதானே தவிர, நிலத்தடி நீர் குறித்தானது அல்ல. நாளைக்கே தமிழகம் கடல் நீரை பாசன நீராக மாற்றும் திட்டத்தை நிறைவேற்றினால், காவிரியில் தமிழகத்தின் பங்கை குறைத்துவிடுவதா என்ன?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மிகப்பெரிய வேடிக்கை கர்நாடகத்துக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 14.75 டிஎம்சி நீரில் குடிநீருக்காக 4.75 டிஎம்சி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருப்பது. காவிரி நடுவர்மன்றம் குடிநீர் தேவைக்காக பெங்களூரு, மைசூரு, மாண்டியா ஆகிய மூன்று பகுதிகளுக்கும் சேர்த்து மொத்தமாக அனுமதித்த அளவு 1.75 டிஎம்சி மட்டுமே என்பதை உச்ச நீதிமன்றம் கவனிக்கவில்லையோ, என்னவோ?
உச்ச நீதிமன்ற, நடுவர்மன்றத் தீர்ப்புகளை தொடர்ந்து ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்த, மீறிய கர்நாடகத்துக்கு அதை சமாதானப்படுத்த கூடுதல் ஒதுக்கீடும், நியாயம் கேட்டு உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிய தமிழகத்துக்கு தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com