2018 - நிலைமை மாறுமா?

புதியதோர் ஆண்டு பிறந்திருக்கிறது. கடந்த மாதம் 12-ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமர் கௌர் என்கிற நூறு வயது மூதாட்டி மரணமடைந்தது நம்மில் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

புதியதோர் ஆண்டு பிறந்திருக்கிறது. கடந்த மாதம் 12-ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமர் கௌர் என்கிற நூறு வயது மூதாட்டி மரணமடைந்தது நம்மில் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனது 77-ஆவது வயதிலிருந்து தனிமனித உரிமைக்காகவும், சுதந்திரத்துக்காகவும் தன்னந்தனியாக 23 ஆண்டுகள் இந்திய அரசாங்கத்தையே எதிர்த்துப் போராடி, தனக்கு நீதி கிடைக்காமலேயே அந்த மூதாட்டி இறுதி மூச்சை விட்டிருக்கிறார். ஒரு சாதாரணப் பெண்மணி என்பதால் இவருக்கு அரசின் ஆதரவும் கிட்டவில்லை. ஊடக வெளிச்சமும் கிடைக்கவில்லை. நீதித்துறையின் கருணைப்பார்வையும் படவில்லை.
 1994 மார்ச் மாதத்தில்தான் அந்த அதிர்ச்சியளிக்கும் பயங்கர நிகழ்வு நடந்தது. 27 வயது அமர் கௌரின் மகனையும், மருமகனையும் அவர்கள் வீட்டு காரோட்டியையும் காவல்துறையினர் விசாரணை என்கின்ற பெயரில் அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டு என்பதோ, அவர்கள் என்ன தவறு இழைத்தார்கள் என்பதோ தெரிவிக்கப்படவில்லை. பலவந்தமாக அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டபோது அதை எதிர்த்துக் கேள்வி கேட்ட 77 வயது மூதாட்டி அமர்கௌர் காவல்துறையினரால் கொச்சையான வார்த்தைகளால் திட்டப்பட்டு தள்ளிவிடப்பட்டார்.
 அமர் கௌரின் மகன் விநோத்குமார், மருமகன் அசோக்குமார் இருவரும் லூதியானாவில் வியாபாரம் செய்து வந்தார்கள். முக்தியார் சிங் என்பவர் அவர்களது வீட்டிலுள்ள கார் ஓட்டுநர். இவர்கள் மூன்று பேரையும் பலவந்தமாக அழைத்து வரச் சொன்னவர் அப்போது லூதியானாவில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுமேத்சிங் சைனி என்கிற அதிகாரி. அவர்கள் ஏன் அழைத்துச் செல்லப்பட்டார்கள், எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள், எந்தத் தகவலும் அதற்குப் பிறகு தெரியாது.
 பலமுறை அமர் கௌரும் குடும்பத்தினரும் அருகிலுள்ள காவல் நிலையத்திலிருந்து பஞ்சாப் காவல்துறையின் உச்சகட்ட அதிகாரி வரை தொடர்புகொண்டும் யாரும் முறையான பதிலைத் தெரிவிக்கவில்லை. வேறு வழியேயில்லாமல் நீதிமன்றத்தை நாடினார் அமர்கௌர்.
 காவல்துறை கண்காணிப்பாளர் சுமேத்சிங் சைனியின் உத்தரவின்பேரில்தான் விநோத்குமார் உள்ளிட்ட மூன்று பேரும் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது மட்டும் தெரிந்தது. அதன் அடிப்படையில்தான் உடனடியாக அந்த மூவரையும் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி அமர் கௌர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவர்கள் ஆஜர்படுத்தப்படவில்லை.
 தனது மகனையும் மருமகனையும் ஓட்டுநரையும் காவல்துறை கண்காணிப்பாளர் சுமேத்சிங் சைனி கடத்திச் சென்று கொன்றுவிட்டார் என்கிற சந்தேகத்தின் அடிப்படையிலான அமர் கௌரின் வழக்கு 1994-லிருந்து நடந்து வருகிறது. இந்த வழக்கில் அடிப்படை ஆதாரம் இருக்கிறது என்று கருதி மத்திய புலன் விசாரணைத் துறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
 ஆரம்பத்திலிருந்து அமர் கௌர் தொடுத்த வழக்கு ஒவ்வொரு கட்டத்திலும் தாமதப்படுத்தப்பட்டு தடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்வதில் தொடங்கி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, விசாரணை நடத்துவது, சாட்சியங்களைப் பதிவு செய்வது என்கிற எல்லா கட்டத்திலும் அரசுத் தரப்பும் காவல்துறையும் இந்த வழக்கைத் தாமதப்படுத்தின. மிகவும் திறமையாகவும் முனைப்புடனும் தாமதப்படுத்தப்பட்ட வழக்கு என்ற வகையில் அமர் கௌர் தொடுத்த வழக்கு சாதனை படைத்திருக்கிறது என்றுகூடக் கூறலாம்.
 இந்திய நீதி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு தீர்ப்பு வழங்குவதில்லை என்பது புதிய குற்றச்சாட்டு ஒன்றுமல்ல. இந்த வழக்கு வெறும் ஊழலுக்கும், நிர்வாக மெத்தனத்துக்கும் நீதித்துறையின் ஆமை வேக நடைமுறைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் பல வழக்குகளில் ஒன்று என்றும் தள்ளிவிட முடியாது. அதற்குக் காரணம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்து, இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பல பதவி ஏற்றங்கள் பெற்று பஞ்சாப் காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் சுமேத்சிங் சைனி. அவர் இப்போதும் காவல்துறையின் உயர் பதவியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார் எனும்போது இந்த வழக்கின் விசித்திரமும் முக்கியத்துவமும் தெரியும். இடைப்பட்ட கடந்த 23 ஆண்டு காலகட்டத்தில் ஆட்சிகள் பல மாறிவிட்டன. ஆனாலும்கூட அமர் கௌருக்கு நீதி கிடைக்கவில்லை.
 சுமேத்சிங் சைனியைப் பொருத்தவரை அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் இதுபோன்ற வழக்குகள் ஏராளம். அப்படியிருந்தும்கூட, காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஒருவர் பஞ்சாப் காவல்துறையின் தலைமைப் பதவியை எட்ட முடிந்திருக்கிறது என்றால், அவரது தொடர்புகளும் அவருக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கும் எப்படிப்பட்டவை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
 அமர் கெüர் தொடுத்திருக்கும் வழக்கில், அவர் குறிப்பிட்டிருப்பதுபோல விநோத்குமார், அசோக்குமார், முக்தியார் சிங் ஆகிய மூவரையும் கடத்திக் கொண்டு போனதும் கொலை செய்ததும் சுமேத்சிங் சைனி என்று கூறிவிட முடியாது. ஆனால், அவர்கள் ஏன், யாரால் கடத்திச் செல்லப்பட்டனர்? அவர்களுக்கு என்ன ஆனது? என்பது குறித்து 77 வயது மூதாட்டி அமர் கௌருக்கு விடையளிக்க வேண்டிய கடமை லூதியானா காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுமேத்சிங் சைனிக்கு நிச்சயமாக உண்டு.
 23 ஆண்டுகள் கடந்துவிட்டன. தில்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குக்கு அமர் கௌரின் மறைவு அநேகமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டிருக்கிறது. 100-ஆவது வயதில் தனக்கு நீதி வழங்கப்படாமல் மறைந்துவிட்டிருக்கும் அமர் கௌரிடம் மன்னிப்புக் கேட்கும் தார்மிக உரிமைகூட நமக்குக் கிடையாது!
 2018-ஆம் ஆண்டிலாவது நிலைமை மாறுமா?
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com