ஜனநாயக முரண்!

செல்லிடப்பேசி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டை எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த மூன்று

செல்லிடப்பேசி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டை எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டித்திருக்கிறது உச்சநீதிமன்றம். இந்த இடைக்கால உத்தரவு ஆதார் இணைப்பு குறித்த பிரச்னையில் தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. வரும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்குப் பிறகுதான் ஆதார் இந்திய குடிமக்களின் தன்மறைவு நிலையின் (ப்ரைவசி) மீறலா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படும்.
தன்மறைவு நிலை என்பது இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்கெனவே தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதே நேரத்தில், அதற்கு சில விதிவிலக்குகளையும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதனால், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஆதாரைக் கட்டாயமாக்குவதற்குத் தடை விதித்தால் மட்டுமே, 139 தேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைப்பது என்கிற அரசின் திட்டம், சட்ட ரீதியாக கட்டாயமாவது தடுக்கப்படும்.
ஆதார் அட்டையில் உள்ள தனிநபர் தகவல்கள் பொதுவெளியில் கசிந்துவிடாமல் பார்த்துக் கொள்ள ஐந்தடுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்துவதாகவும், கட்டாயமான தேவைகளுக்கு மட்டுமே ஆதார் எண் தொடர்பான விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் அரசு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், உண்மை நிலைமை அப்படி இல்லை. நமது அதிகார வர்க்கத்தின் வழக்கமான பொறுப்பின்மையும், கவனக் குறைவும் ஆதார் அட்டை விவரங்களைப் பாதுகாப்பாக வைப்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரியவில்லை.
முந்தைய மன்மோகன் சிங் அரசால் ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கியமான நோக்கம், அரசு வழங்கும் மானியங்கள் பயனாளிகளை மட்டும் சென்றடைவதை உறுதிப்படுத்துவதுதானே ஒழிய, ஒவ்வொரு இந்திய குடிமகன் குறித்த தனிப்பட்ட விவரங்களை அரசு சேகரித்து வைத்துக் கொள்வதல்ல. அரசிடமிருந்து மானியங்கள் பெறுபவர்கள் அடையாளம் காணப்படுவதால், போலி நபர்கள் மூலம் இடைத் தரகர்கள் மானியங்களை அடைவது தடுக்கப்படும் என்பது உண்மை. மானியம் நேரிடையாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவதன் மூலம் அரசுக்கு ஏற்பட்டு வந்த மிகப்பெரிய இழப்புகள் தடுக்கப்பட்டன. அந்த அளவில் ஆதார் பயன்பாட்டில் யாருக்குமே கருத்து வேறுபாடு கிடையாது.
மானியங்கள் எதுவும் தேவைப்படாத, அரசுக்குத் தொடர்பே இல்லாத செயல்பாடுகளிலும், ஆதார் எண் ஏன் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதில்தான் விவாதம் எழுகிறது. மானியத்துடன் தொடர்பில்லாத எல்லா முக்கியமான தனிப்பட்ட அல்லது தொழில் தொடர்பான சேவைகளில் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? வங்கிக் கணக்குக்கு வருமானவரி எண் இணைக்க வேண்டும், அல்லது வீட்டு முகவரிக்கான ஆதாரம் தரப்பட வேண்டும் என்றால் நியாயம் இருக்கிறது. ஆதார் எண்ணுக்கும் வங்கிக் கணக்குக்கும் என்ன தொடர்பு என்பதுதான் சமூக ஆர்வலர்கள் எழுப்பும் கேள்வி.
ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுவிடும், செல்லிடப்பேசி செயலிழக்கச் செய்யப்படும் என்றெல்லாம் அச்சுறுத்தல் குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தீவிரவாதிகளை அடையாளம் காணவும், சமூக விரோதிகளைக் கண்டுபிடிக்கவும் ஆதார் எண் கட்டாயப்படுத்தப்படுகிறது என்கிறது அரசு. அதற்காக, இந்தியாவிலுள்ள அத்தனை குடிமகன்களின் தனிப்பட்ட விவரங்களை அரசு அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கு, இங்கே என்ன சர்வாதிகார ஆட்சியா நடைபெறுகிறது?
'ஏர்டெல்' செல்லிடப்பேசி சேவையை வழங்கும் பாரதி ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி என்கிற சிறு வங்கியை நடத்துகிறது. தங்களின் தொலைத் தொடர்பு சேவையைப் பெறும் வாடிக்கையாளரின் விவரங்களைப் பெறுவதாகக் கூறி, அவர்களது ஆதார் எண்ணை ஏனைய நிறுவனங்களைப் போலவே 'ஏர்டெல்'லும் பெற்றது. அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை. 'ஆதார்' எண்ணிலிருந்த விவரத்தின் அடிப்படையில் 31 லட்சம் 'ஏர்டெல்' வாடிக்கையாளர்களை தனது ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியிலும் வாடிக்கையாளராக்கி விட்டிருக்கிறது அந்நிறுவனம்.
செல்லிடப்பேசி சேவைக்காகப் பெறப்படும் ஆதார் விவரங்களை வேறு எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது என்கிற கட்டுப்பாட்டை தனியார் நிறுவனங்களின் செயல்பாட்டில் அரசு எப்படி உறுதிப்படுத்தப் போகிறது என்கிற கேள்வியை எழுப்புகிறது இந்த நிகழ்வு.
பல அரசுத் துறைகளே, தங்களிடம் இருக்கும் ஆதார் எண் தொடர்பான விவரங்களை இணையத்தில் அனைவரும் பார்த்துக் கொள்ளும் விதத்தில் பதிவேற்றம் செய்துவிட்டிருக்கின்றன. அரசாலேயே தன்மறைவு நிலையை உறுதிப்படுத்த முடியாதபோது, தனியார் நிறுவனங்கள் அந்த விவரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை எப்படி தடுத்துவிட முடியும்?
ஹரியாணா மாநிலம், சோனாப்பேட்டில் கார்கில் போரில் வீர மரணமடைந்த ஹவில்தார் லட்சுமண்தாஸின் மனைவி சகுந்தலாதேவிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த 55 வயதுப் பெண்மணி சிகிச்சை தரப்படாததால் மரணமடைந்திருக்கிறார். காரணம், அவரிடம் ஆதார் அட்டை இல்லை என்பது. இதுபோல பல நிகழ்வுகளைப் பட்டியலிட முடியும்!
அரசு மானியம் பெறுபவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்பது ஏற்புடையது. ஆனால், எதற்கெடுத்தாலும் ஆதார் என்று அடையாளப்படுத்துதலும், தனியார் நிறுவனங்கள் அந்த 
விவரங்களைச் சேகரிக்க அனுமதிப்பதும் தன்மறைவு நிலைக்கு எதிரானது மட்டுமல்ல, ஜனநாயக விரோதமும்கூட!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com