அதிருப்தியில் கிராமங்கள்!

உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் மத்திய அரசை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கின்றன.

உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் மத்திய அரசை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கின்றன. நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய இருக்கின்ற நிதிநிலை அறிக்கைதான் மோடி அரசின் முழுமையான கடைசி நிதிநிலை அறிக்கையாக இருக்கும். 2019 மக்களவைத் தேர்தலுக்குள் மக்களின் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் பெறும் விதத்தில், செய்து முடிக்க வேண்டிய திட்டங்கள் எல்லாம் பிப்ரவரி மாத நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, விரைந்து செயல்படுத்தப்பட்டாக வேண்டும்.
உத்தரப்பிரதேச உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஆளும் பாஜக நகராட்சி மன்றங்களில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. மொத்தமுள்ள 8 மாநகராட்சிகளில் 6 மாநகராட்சிகளைக் கைப்பற்றியது. ஆனால், பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் தோல்வி அடைந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலிலும் நகர்ப்புறங்களில் பாஜகவுக்குக் காணப்பட்ட பேராதரவால்தான் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. கிராமப்புறங்களில், குறைந்த வாக்கு வித்தியாசம் என்றாலும், பல இடங்களில் காங்கிரஸ் வெற்றியடைந்தது.
இதையெல்லாம் புரிந்து கொண்டதால்தான் கிராமப்புற இந்தியாவின் பிரச்னைகளை ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வு காண அரசு முயற்சியை மேற்கொள்ளும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார். ஊரகப்புற இந்தியாவுக்காகவும், வேளாண்மைக்காகவும்,அரசால் செலவிடப்படும் பணம் வாக்கு வங்கி அரசியலாகாது என்றும் தெரிவித்திருக்கிறார். அவர் தாக்கல் செய்ய இருக்கும் பிப்ரவரி மாத நிதி நிலை அறிக்கை, ஊரகப்புற இந்தியாவின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முற்படுவதன் மூலம் அந்த வாக்காளர்களின் நம்பிக்கையை ஆளும் கட்சி பெறும் விதத்தில் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
ஊரகப்புற இடர்ப்பாடு என்பது உண்மை. அவை மத்திய-மாநில அரசுகளால் விரைந்து தீர்க்கப்பட வேண்டும் என்பது மிகமிக அவசியம். அதே நேரத்தில் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் வாக்குகள் பெறுவதற்கும், வெற்றி பெறுவதற்குமான உத்திகளை மேற்கொள்வதால் ஊரகப்புற இடர்ப்பாடு முடிவுக்கு வந்துவிடாது. அதற்கு இந்திய வேளாண்மையில் காணப்படும் நீண்டகால அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டாக வேண்டும். விவசாய நிலங்கள் மேலும் மேலும் கூறுபோடப்படுவது, நகர்ப்புற விரிவாக்கத்தால் விவசாய நிலப்பரப்பு குறைந்து வருவது, மண்ணின் வளம் குறைந்து மகசூல் குறைவது, சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுவது, அதிகரித்த ரசாயன உரங்களின் பயன்பாடு என்று பல்வேறு காரணங்கள் குறித்த மறுசிந்தனையும் அவற்றுக்கான தீர்வும் மேற்கொள்ளப்பட்டாக வேண்டும்.
கடந்த 2016 ஜூலை முதல் ஊரகப்புற அன்றாட வருமானம் கணிசமாகவே அதிகரித்திருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஊரகப்புறங்களில் குறைந்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம், கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறம் நோக்கிய இடம்பெயர்தலாகக் கூட இருக்கலாம்.
சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிலைமையில் பெரிய மாறுதல் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. அவர்களது கடன் சுமை அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை. கடந்த ஆண்டைவிட இந்த நிதியாண்டில் பருவமழை சற்று அதிகமாகவே கிடைத்திருக்கிறது என்றாலும், இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களும், எல்லா மாவட்டங்களும் ஒரே போல பருவமழையால் பயனடைந்திருக்கின்றனவா என்றால் இல்லை. ஊரகப்புற இடர்ப்பாட்டை எதிர்கொள்ள வழக்கமான கடன் தள்ளுபடி பயன்பட்டுவிடாது. அரசுக் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் முறை சிறு விவசாயிகளுக்கு சாதகமானதாக இல்லை. கடன் தள்ளுபடி என்பது பல ஏக்கர்கள் வைத்துக்கொண்டிருக்கும் பெருவிவசாயிகளுக்குத்தான் சாதகமாக இருக்கிறதே தவிர, விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் விவசாயிக்குப் பயனளிப்பதாக இல்லை.
விவசாயிகளின் பிரச்னைகளை எதிர்கொள்வது எனும்போது அரசு எடுக்கும் உடனடி நடவடிக்கை, வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிப்பது என்பது. இது வெளிப்படையாகத் தெரியும் என்பதால் எல்லா விவசாயிகளையும் திருப்திப்படுத்திவிட முடியும் என்று அரசுகள் நினைக்கின்றன. அதனால் உண்மையில் பயனடைவது என்னவோ குறிப்பிட்ட சில விவசாயிகள் மட்டுமே. இதன் விளைவாக, அதிகமான குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் பயிர்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட முற்படுகின்றனர். சில விளைபொருள்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டுத் தேங்குவதும், இன்னும் சில விளைபொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு இறக்குமதி செய்யப்பட வேண்டி வருவதும் தொடர்கின்றன.
வேளாண் சீர்திருத்தத்திற்கு அரசு முன்னுரிமை அளிப்பதும், அனைத்து விவசாயிகளுக்கும் வேறுபாடில்லாமல் பாசன வசதியை உறுதிப்படுத்துவதும் மட்டுமே பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். உர மானியம் உடனடியாகவும், நேரிடையாகவும் விவசாயிகளுக்குத் தரப்படுவது, உரங்களின் விலைகளை நிர்ணயம் செய்வது, சரியான அளவிலான உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது போன்றவை அனைத்து விவசாயிகளும் பயன்படும் விதத்திலான தீர்வுகளாக இருக்கும். பாசனத் திட்டங்களுக்கும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கும் செலவு செய்வது உடனடி பயனைத் தராவிட்டாலும், குறுகிய கால அளவில் பயனளிக்கும்.
நிலையான ஏற்றுமதி - இறக்குமதிக் கொள்கை, ஊரகப்புற குடியிருப்பு மற்றும் பாசனத் திட்டங்களுக்கு முன்னுரிமை, ஊரகப்புற சாலைகள் அமைப்பதில் கூடுதல் முதலீடு போன்றவை வேலைவாய்ப்புகளை அதிகரித்து, ஊரகப்புற தொழிலாளர்களின் வருமானத்தையும் அதிகரிக்கச் செய்யும். இவை எல்லாம்தான் வேளாண்துறை மீதான அழுத்தத்தை அகற்றி, ஊரகப்புற இடர்ப்பாடுகளின் தீர்வுக்கு உதவும். தேர்தல் கண்ணோட்டத்துடன் கையாள வேண்டிய பிரச்னை அல்ல வேளாண் இடர்ப்பாடும், ஊரகப்புற அதிருப்தியும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com