வரமா... சாபமா? 

சமூக வலைதளங்களின் செயல்பாடு உலகளாவிய அளவில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. நாடு, மொழி, இனம் என்கிற

சமூக வலைதளங்களின் செயல்பாடு உலகளாவிய அளவில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. நாடு, மொழி, இனம் என்கிற வேறுபாடுகளை எல்லாம் அகற்றி உலக சகோதரத்துவத்தை இணையம் மூலம் ஏற்படுத்தும் அறிவியல் அற்புதம் என்று கருதப்படும் சமூக வலைதளங்களுக்கு கோரமான முகமும் உண்டு என்பதைக் கடந்த சில ஆண்டுகளாக உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அரசியல் தலைவர்களுக்கு மக்களிடம் நேரடியாகத் தனது செய்தியைக் கொண்டு செல்வதற்கு சமூக ஊடகங்கள் பயன்படுகின்றன. பல லட்சம் பேரிடம் நேரிடையாகத் தொடர்பு கொள்ளும் அதேநேரத்தில், அவர்களது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது அரசியல் தலைவர்களைப் பொருத்தவரை வசதியாக இருக்கிறது. சமீபத்திய ஆய்வின்படி ஐ.நா. உறுப்பு நாடுகளில் 92% நாடுகள் சமூக ஊடகங்களில் பங்கு பெறுகின்றன. 178 நாடுகளுடைய அதிபர்களின் 856 சுட்டுரை கணக்குகள் அவர்களுக்கு 35.6 கோடி தொடர்புகளை ஏற்படுத்தித் தந்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஏறத்தாழ 200 கோடி பேர் முகநூல் மூலம் மாதந்தோறும் இணைகிறார்கள் என்றால், அதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதே நேரத்தில், முகநூல் என்கிற தொழில்நுட்ப பூதத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அதன் மூலம் பொய்ப் பிரசாரங்களையும், தனிநபர் பற்றிய அவதூறுகளையும் பரப்பும் அவலமும் அரங்கேறி வருகின்றது.
2015-16-இல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் முகநூலை பயன்படுத்தி ரஷியா மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. முகநூல், கூகுள், சுட்டுரை ஆகிய தொழில்நுட்பத் தளங்களின் மூலம் அந்நிய சக்திகள் பொய்யான செய்திகளைப் பரப்பி, தேர்தல் முடிவுகளை பாதித்தன என்கிற குற்றச்சாட்டை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பினர். அதுமுதல் சமூக வலைதளங்களில் செய்யப்படும் பதிவுகளை எப்படிக் கண்காணிப்பது, ஒழுங்குபடுத்துவது என்பது குறித்த விவாதம் உலகளாவிய அளவில் எழுப்பப்படுகிறது.
இணையதளத்தின் அசுர வளர்ச்சி சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைப் பின்தள்ளிக்கொண்டு விரைகிறது. அச்சு ஊடகம், காட்சி ஊடகம் போல அல்லாமல் எந்தவிதக் கட்டுப்பாடோ, வரைமுறையோ, தணிக்கையோ இல்லாமல், யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பதிவு செய்யும் உரிமையை சமூக வலைதளங்கள் வழங்குகின்றன. அதனால், தவறான செய்திகள் திட்டமிட்டு சமூக வலைதளங்களின் மூலம் பரப்புரை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ, கண்காணிக்கவோ இயலாது என்கிற நிலை காணப்படுகிறது.
சமூக வலைதளங்களில் செய்யப்படும் பதிவுகளுக்குப் பொறுப்பேற்பது யார் என்கிற கேள்வி எழுகிறது. பொய்யான பெயரில் மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்தி முகநூலில் உறுப்பினராகிவிட முடியும் என்பதால், இதில் செய்யப்படும் பதிவுகளுக்கு எந்தவித ஆதாரமோ, பொறுப்பேற்போ இருப்பதில்லை. அப்படி செய்யப்படும் முகநூல் பதிவுகளை சுட்டுரை மூலமும், கட்செவி அஞ்சல் மூலமும் பரப்புவதும் சாத்தியம். இதனால் எந்தவொரு தனிநபரின் பெயருக்கும் ஏற்படுத்தப்படும் களங்கத்தை சட்ட ரீதியாகக் கேள்வி கேட்க வழியில்லை.
அதே நேரத்தில் இதை சட்டம் போட்டுத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ அரசுகள் முயற்சிக்குமேயானால் அது தனிநபர் சுதந்திரத்தையும், கருத்துரிமையையும் பாதிப்பதாக அமையும். இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-அ பிரிவு, மாநில அரசுகளால் விமர்சனங்களுக்கு வாய்ப்பூட்டுப் போட பயன்படுத்தப்படுவதால், அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இதன் விளைவாக முகம் தெரியாத நபர்களால் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்புரை செய்யப்பட்டு, தேர்தல் முடிவுகளேகூட தீர்மானிக்கப்படும் அவலமும் ஏற்படுகிறது. இதற்கு விடை காண்பது எப்படி என்பதுதான் உலகளாவிய அளவில் நடைபெற்றுவரும் விவாதம்.
முகநூல், கூகுள், சுட்டுரை, கட்செவி அஞ்சல் இவை அனைத்துமே லாப நோக்கத்துடன் நடத்தப்படும் தொழில்நுட்பத் தளங்கள். இவை விளம்பரதாரர்களுக்கு தங்களது வாசகர்களை, பயனாளிகளை, பார்வையாளர்களை விற்பனை செய்கின்றன. இந்த சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் குறித்த தகவல்கள்தான் அவர்களது விற்பனைப் பொருள். இவை போன்ற சமூக ஊடகங்களுக்கு அதில் பங்குபெறும் நபர்கள் குறித்தோ, அவர்களது தன்மறைப்பு நிலை (பிரைவசி) குறித்தோ அக்கறை இல்லை. சமூக ஊடகங்களான முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் உள்ளிட்டவை தங்களது உறுப்பினர்கள் குறித்த சரியான விவரத்தைப் பெறுவதும் அவர்களது பதிவுகளைத் தாங்களே கண்காணிப்பதும்தான் இதற்குத் தீர்வாக இருக்க முடியும்.
தனது வாடிக்கையாளர்களுக்குக் கண்காணிப்பின் மூலம் பாதுகாப்பு வழங்க முகநூல் நிறுவனம் தீர்மானித்திருக்கிறது. வாடிக்கையாளருடைய படங்கள் மூன்றாவது நபரால் பயன்படுத்தப்படும்போது, வாடிக்கையாளரை எச்சரித்து, அந்தப் படங்களை அகற்றும் உரிமையை அவர்களுக்கு வழங்க முன்வந்திருக்கிறது. இதன் மூலம் போலியான தன்விவரக் குறிப்புகளையும், புகைப்படங்களையும் பயன்படுத்தி, முகநூல் உறுப்பினராவது தடுக்கப்படும். திரைப்பட நடிக-நடிகைகள் படங்களையும், பெயர்களையும் தங்கள் முகநூல் அடையாளமாக்குவது, பிரபல அரசியல் தலைவர்களின் பெயரில் முகநூல் உறுப்பினராக இருப்பது உள்ளிட்டவைக்கு முற்றுப்புள்ளி வைக்க இது உதவும்.
கருத்துப் பரிமாற்றத்திற்கு சமூக வலைதளங்களின் பங்களிப்பு அளப்பரியது. அதேநேரத்தில் தன்மறைப்பு நிலையையும், தனி மனித சுதந்திரத்தையும் பாதிக்கும், ஆதாரமில்லாத அவதூறுகளையும், திட்டமிட்ட பொய்யான பரப்புரைகளையும், எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிப்பது சரியா தவறா என்பதை சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் சமூக வெளியில் விவாதித்து, முடிவெடுப்பதுதான் தீர்வாக இருக்கும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com