கசிகிறது ஆதார்!

இந்திய ஆதார் அடையாள ஆணையம்

இந்திய ஆதார் அடையாள ஆணையம் 2009-இல் அமைக்கப்பட்டது முதல் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையான தன்மறைவு நிலை குறித்தும், தகவல் பாதுகாப்பு குறித்தும் கவலை எழுப்பப்பட்டு வருகிறது. எந்த அளவுக்கு பயோமெட்ரிக் அடிப்படையிலான தனிமனித அடையாளங்களைப் பதிவு செய்யும் ஆதார் அடையாளம் அரசால் வற்புறுத்தப்படலாம் என்ற கேள்வி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. 
கடந்த ஜனவரி 3ஆம் தேதி சண்டீகரில் இருந்து வெளிவரும் "தி ட்ரிப்யூன்' நாளிதழில் அந்தப் பத்திரிகை நிருபர் ஆதார் தகவல்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றன என்பது குறித்து ஒரு செய்தியை வெளியிட்டார். "பேடிஎம்' செயலி மூலமாக ரூ.500 செலுத்தினால், அடுத்த பத்து நிமிடங்களில் ஆதார் தகவல்களைக் களவாடித் தரும் நிறுவனத்தின் முகவர், அத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் சர்வ சாதாரணமாக உடைத்து உள்ளே நுழைவதற்கான நுழைவுக் கணக்கை உருவாக்கித் தந்து விடுகிறார். 
அந்த நுழைவுக் கணக்கின் மூலம் அரசின் கைவசமுள்ள எந்த ஆதார் எண்ணிற்குள்ளும் நுழைந்து, அதில் தரப்பட்டிருக்கும் அத்தனை விவரங்களையும் பார்க்க முடியும். இதன் மூலம் பல எண்களுக்குள் அந்த நிருபரால் நுழைய முடிந்தது என்பது மட்டுமல்ல, தகவல்களையும் பெறமுடிந்தது. தனது அனுபவத்தை "தி ட்ரிப்யூன்' நாளிதழில் பதிவு செய்தார். ஆதார் எண்களுக்காகத் தரப்படும் தகவல்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பற்றவை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது அந்த நிருபரின் கட்டுரை.
யார் வேண்டுமானாலும் வெறும் 500 ரூபாய்க்கு இந்தியாவிலுள்ள எந்த ஒருவருடைய விவரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது அதிர்ச்சி தரும் செய்தி. அரசின் இணையதளங்களிலிருந்து பல்வேறு தகவல்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பெறமுடியும் என்பது கோடிக்கணக்கான இந்தியர்களை பாதித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இதுபோன்ற தகவல் கசிவுகள் குறித்து இந்திய ஆதார் அடையாள ஆணையத்திடம் வெளிப்படைத் தன்மை இல்லாமலிருப்பது அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
பத்திரிகையில் செய்தி வெளியானவுடன், ஆதார் ஆணையத்திடம் உள்ள பயோமெட்ரிக் தகவல்கள் எதுவும் கசியவில்லை என்றும், தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாகக் காப்பாற்றப்படுகின்றன என்றும் இந்திய ஆதார் அடையாள ஆணையம் தெரிவித்தது. ஆனால், அந்த ஆணையத்தின் துணை இயக்குநர் ஒருவர் நிருபர் மீதும், பத்திரிகையின் மீதும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் மீதும் காவல் துறையில் புகார் தாக்கல் செய்தார். ஏமாற்றுதல், மோசடி, போலி ஆவணம் உருவாக்குதல் உள்ளிட்ட ஆதார் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டங்களின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற தகவல்கள் பத்திரிகையில் வெளிவரும்போது பொறுப்பான அரசின் துறை அந்தத் தகவல்களின் அடிப்படையில் எங்கே தவறு நடந்திருக்கிறது என்பதை கண்டறிய முற்பட வேண்டுமே தவிர, தவறு நடப்பதைச் சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்களையோ, இடித்துரைப்பாளர்களையோ குற்றவாளியாக்க முற்படுவது விசித்திரமாக இருக்கிறது. தங்களது தவறை மறைப்பதற்காக, தவறை சுட்டிக்காட்டியவர்களையே குற்றவாளியாக்கும் அரசுத் துறையின் அணுகுமுறை தவறானது. 
இதேபோன்ற பிரச்னையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்த ஐயப்பாடு எழுப்பப்பட்டது. உடனடியாகத் தேர்தல் ஆணையம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும், சந்தேகத்தை எழுப்புபவர்களுக்கும் வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டில் தவறை நிரூபிக்க வாய்ப்பளிப்பதாக அறிவித்தது. 
தேர்தல் ஆணையத்துக்கு இருந்த தன்னம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் இந்திய ஆதார் அடையாள ஆணையத்துக்கும் இருக்குமேயானால், பத்திரிகையாளர் மீதும், பத்திரிகையின் மீதும் காவல்துறையில் புகார் தாக்கல் செய்வதற்குப் பதிலாக, அந்தப் பத்திரிகையாளரின் உதவியுடன் தவறு செய்பவர்களைக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த முற்பட்டிருக்க வேண்டும். ஆதார் அடையாள அட்டைகளுக்காகப் பெறப்படும் தகவல்கள் கசிந்துவிடாமல் இருக்க மேலும் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து யோசித்திருக்க வேண்டுமே தவிர, தவறைச் சுட்டிக்காட்டியவர்களின் வாயை மூடும் முயற்சியில் இறங்கியிருக்கக் கூடாது.
கடந்த அக்டோபர் 2016-இல், 6 முக்கியான வங்கிகளின் 32 லட்சம் வாடிக்கையாளர்களுடைய வங்கிக் கணக்கு அட்டைகளின் விவரங்கள் பொதுவெளியில் கசிந்தன. கடந்த மே 2017-இல் 10 கோடிக்கும் அதிகமானவர்களின் ஆதார் எண்களின் விவரங்கள் (வங்கி வரவு-செலவு உட்பட) அரசு இணையதளம் மூலம் பொதுவெளியில் கசிந்தன. இப்போது "தி ட்ரிப்யூன்' நாளிதழ் மூலம் எந்தவோர் ஆதார் எண்ணின் விவரத்தையும் சர்வ சாதாரணமாக யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்கிற அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது. 
தீவிரவாதிகளைக் கண்காணிக்கிறோம் என்கிற பெயரில் தேவையில்லாமல் அத்தனை பேரின் விவரங்களையும் அரசு சேகரித்து, அதை முறையாகப் பாதுகாக்க முடியாமல் சட்ட விரோதிகளின் கையில் கிடைப்பதற்கு வழிகோலுகிறது. மானியங்கள் மடைமாற்றம் செய்யப்படாமல் முறையாகப் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம், ஏமாற்றுக்காரர்களுக்கும், மோசடிக்காரர்களுக்கும் பயன்படுகிறது. 
ஆதார் அட்டையில் உள்ள தனிநபர் தகவல்கள் பொதுவெளியில் கசிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள ஐந்தடுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இந்திய ஆதார் அடையாள ஆணையம் தெரிவிக்கிறது. "தி ட்ரிப்யூன்' செய்தி, அரசின் உத்தரவாதம் உண்மையல்ல என்பதை வெளிச்சம் போடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com