ஊட்டச்சத்துக் குறைவு!

சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை ஊட்டச்சத்துக் குறைவு. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் 

சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை ஊட்டச்சத்துக் குறைவு. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்தில் ஏறத்தாழ சரிபாதி மரணங்களுக்குக் காரணமாக இருப்பதும் ஊட்டச்சத்துக் குறைவுதான் என்று தெரிகிறது. அதேபோல ஏறத்தாழ, ஐந்து வயதுக்குட்பட்ட 15.5 கோடி குழந்தைகள் வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் பிறந்த 1000 நாள்களில் அந்தக் குழந்தைகளுக்குப் போதிய ஊட்டச் சத்துள்ள உணவு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கிறது யுனிசெஃப் நிறுவனம். 
ஊட்டச்சத்துக் குறைவால் உடல் ரீதியான வளர்ச்சிக் குறைவு மட்டுமல்லாமல், மூளை வளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்றும், அந்தக் குழந்தைகளின் நினைவாற்றல், கற்கும் திறன் ஆகியவையும் பாதிக்கப்படுவதாகவும் யுனிசெஃப் தெரிவிக்கிறது.
ஒரு குழந்தையின் முதல் இரண்டு ஆண்டு வளர்ச்சியில் ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படும் பாதிப்பு, தனது வாழ்நாளில் அந்தக் குழந்தை முழுமையான திறமைகளைப் பெறமுடியாத நிலைக்குத் தள்ளிவிடுகிறது. பிற்காலத்தில் என்னதான் நல்ல உணவு வழங்கப்பட்டாலும்கூட முதல் இரண்டு ஆண்டுகளில் ஆரோக்கியமான உணவு இல்லாமல் போனால், அதனால் ஏற்படும் பாதிப்பை ஈடுகட்டிவிட முடியாது. 
மிகக்குறைந்த வயதில் கர்ப்பம் தரிப்பதும், கர்ப்பக் காலத்தில் ரத்த சோகையால் பாதிக்கப்படுவதும் பிரசவ கால மரணங்களுக்கு மிக முக்கிய காரணம். சர்வதேச ஊட்டச்சத்து மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபை ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின்படி, உலகளாவிய அளவில், 10 பேருக்கு 4 பேர் என்கிற விகிதத்தில் கர்ப்பிணிப் பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 20% பேறுகால மரணங்களுக்கு ரத்த சோகைதான் காரணம். பேறுகால மரணம், குறைப்பிரசவம், குறைந்த எடையுள்ள குழந்தை பிறத்தல், சிசு மரணம் (பிறந்த 28 நாள்களுக்குள் மரணம் அடைதல்) ஆகியவற்றுக்கும் ரத்த சோகைதான் காரணம்.
சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகிலுள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்தியா 97-ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகளில் 39% குழந்தைகள் அதாவது, 2 கோடி குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 
உலகிலேயே மிக அதிகமான வளர்ச்சி தடைப்பட்டுள்ள குழந்தைகள் (4.8 கோடி) இந்தியாவில் காணப்படுவதாக 2017 மே மாதம் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 
பொருளாதார ரீதியாக நம்மைவிட மிகவும் பின்தங்கியிருக்கும் மாலவி, மடகாஸ்கர், வங்கதேசம் முதலிய நாடுகள் வெற்றிகரமாக ஊட்டச்சத்துக் குறைவை எதிர்கொண்டு வெற்றி அடைந்திருக்கின்றன. அதேபோல இந்தியாவிலேயே கூட கேரளம், கோவா, திரிபுரா, சத்தீஸ்கர் முதலிய மாநிலங்கள் தொடர் முயற்சியின் மூலம் குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைவை மெல்ல மெல்லக் குறைத்து வெற்றி கண்டிருக்கின்றன. இவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் ஊட்டச்சத்துக் குறைவால் எள்ளளவும் பாதிக்காத வண்ணம் இருப்பதை நாம் உறுதிப்படுத்துவது அவசியம்.
தேசிய அளவில் ஓரளவுக்கு நாம் முனைப்புடன் செயல்படாமல் இல்லை. 2005 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில், ஊட்டச்சத்துக் குறைவின்மை 2% குறைந்திருக்கிறது. அதேபோல, 5 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் மத்தியில் காணப்படும் வளர்ச்சி இன்மையும், 48% லிருந்து 38% ஆகக் குறைந்திருக்கிறது. இதற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை மிக முக்கியமான காரணம். ஆனாலும்கூட முழுமையான வெற்றியை அடைந்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியவில்லை. 
'லான்செட்' என்கிற மருத்துவ இதழ் ஊட்டச்சத்தின்மையை எதிர்கொள்ள சில பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. பேறுகாலத்துக்கு முன், பேறுகாலத்தின்போது, பிரசவத்திற்குப் பிறகு என்கிற மூன்று காலகட்டங்களிலும் அதிகரித்த ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்குவது என்பது முதலாவது பரிந்துரை. பிரசவத்துக்குப் பிறகு முதல் ஆறு மாதம் கட்டாயமாகக் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது இரண்டாவது பரிந்துரை. அதன் மூலம் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் 13 லட்சம் குழந்தைகளின் முறையான வளர்ச்சியும், 
தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகிறது.
தாய்-சேய் நலம் குறித்த திட்டங்களில் உடனடியாக அதிகரித்த முதலீடு மிக மிக அவசியம். லட்சக்கணக்கான குழந்தைகளின் வருங்காலம் தொடர்புடையது என்பதால், அரசு இதில் மெத்தனமாக இருக்கக்கூடாது. மத்திய அரசு இதற்காகச் செய்துவரும் ஒதுக்கீடு குறைந்து வருவது வேதனைக்குரியது. 
2015-16-இல், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைக்காகச் செய்யப்பட்ட ஒதுக்கீடு, 2016-17-இல் 9.6% குறைக்கப்பட்டது. அதேபோல 2014-15-க்கான மத்திய அரசின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.74%, மதிய உணவுத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. 2016-17-இல் அது 0.49% ஆகக் குறைக்கப்பட்டது. இந்தியாவின் ஜி.டி.பி. யில் வெறும் 1%தான் சுகாதாரத்துக்காக ஒதுக்கப்படுகிறது. சர்வதேச சராசரி 5.99%.
அரசு இனிமேலாவது சுகாதாரம் குறித்தான தனது கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டு ஒதுக்கீட்டை அதிகரிப்பது மட்டுமல்லாமல், முனைப்புடன் தாய்-சேய் நலத்தில் கவனம் செலுத்துவது மிகமிக அவசியம். ஆரோக்கியமான குழந்தைகள்தான் வலிமையான பாரதத்துக்கு உத்தரவாதம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com