பழையன கழிதல்...

நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய சாதனை நூற்றுக்கணக்கான நடைமுறைக்கு ஒவ்வாத தேவையற்ற காலனியகாலச் சட்டங்களையும் விதிமுறைகளையும் அகற்றி வருவது.

நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய சாதனை நூற்றுக்கணக்கான நடைமுறைக்கு ஒவ்வாத தேவையற்ற காலனியகாலச் சட்டங்களையும் விதிமுறைகளையும் அகற்றி வருவது. அடிமை இந்தியாவை ஆள்வதற்கு பிரிட்டிஷ் காலனிய அரசு இயற்றிய பல சட்டங்களும் விதிமுறைகளும் இந்தியா விடுதலை அடைந்தும்கூட கடந்த 70 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றன என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. 
சட்ட அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் பதவி ஏற்றதற்குப் பிறகு பழைய சட்டங்கள் அனைத்தையும் மீள்ஆய்வு செய்யும் முயற்சியில் இறங்கியது பாராட்டுக்குரியது. இன்றைய சூழலுக்கு அவசியம் இல்லாத, தேவையற்ற 1800 பிரிட்டிஷ் காலனிய சட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அகற்றப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் 235 காலாவதியான சட்டங்களும், சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் இயற்றப்பட்ட ஒன்பது அவசரச் சட்டங்களும் அகற்றப்பட்டிருக்கின்றன.
இந்தச் சட்டங்கள் எல்லாம் ஒவ்வொரு காலத்தில் அன்றைய சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப இயற்றப்பட்டவை. அவை அறிமுகப்படுத்தப்பட்டபோது அந்தச் சட்டங்களுக்கான, விதிமுறைகளுக்கான தேவை இருந்திருக்கக்கூடும். அதற்குப் பிறகு அந்தச் சட்டங்களை மீள் பார்வை செய்யவோ, தேவைக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தவோ அல்லது அகற்றவோ யாரும் முன்வரவில்லை. அவை தொடர்ந்து இந்தியக் குடிமையியல், குற்றவியல் சட்டப் புத்தகங்களில் தேவையில்லாமல் தொடர்ந்து வந்தன.
இந்தியா விடுதலை பெற்றவுடன், முதல் வேலையாக பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்களையும், கொண்டுவரப்பட்ட விதிமுறைகளையும் மத்திய அரசு மீள் பார்வைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், 1947-இல் பதவி ஏற்றுக்கொண்ட பண்டித ஜவார்ஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசின் முழு கவனமும் அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் இருந்ததால், இது குறித்த சிந்தனை எழவில்லை. 1952க்குப் பின்னால் அமைந்த ஆட்சிகளிலும், தேவையில்லாத, நடைமுறைக்கு ஒத்துவராத சட்ட திட்டங்களை அகற்றுவதில் எந்தவொரு சட்ட அமைச்சரும் கவனம் செலுத்தாமல் இருந்ததுதான் வியப்பாக இருக்கிறது. 
ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட சமூக, பொருளாதார நடைமுறை சூழலுக்கேற்ப உருவாக்கப்பட்ட அந்தச் சட்டங்கள் இன்றைய சூழலில் மிகவும் கடுமையானதாகவும், ஒருசில சட்டங்கள் கொடுமையானதாகவும் காட்சி அளிக்கின்றன. விடுதலைக்குப் பிறகு சுதந்திர நாட்டின் வளர்ச்சிக்கேற்ப அந்தச் சட்டங்கள் திருத்தப்படவோ அல்லது கைவிடப்படவோ செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை.
1911-இல் 'தேச விரோத சந்திப்புகள் தடுப்புச் சட்டம்' என்கிற சட்டம் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியால் பிறப்பிக்கப்பட்டது. 1907-இல் அப்போதைய பிரிட்டிஷ் கவர்னல் ஜெனரலால் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் 1911-இல் சட்டமாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி விவாதங்களுடன் கூடிய பொதுக்கூட்டம் நடத்துவது, மக்களின் உணர்வுகளைத் தூண்டும் விதத்திலான துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் ஓரிடத்தில் கூடுவது ஆகியவை தடைசெய்யப்பட்டன. காவல் துறை ஆணையரிடமிருந்தோ, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடமிருந்தோ மூன்று நாள்களுக்கு முன்னால் எழுத்து மூலம் அனுமதி பெற்றிருந்தால் மட்டும்தான் கூட்டமே நடத்த முடியும். இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்வதோ, பங்கு பெறுவதோ தேசத் துரோகம் என்று வரையறுக்கப்பட்டது.
1932-இல் 'வங்காள தீவிரவாத செயல்பாடுகள் அடக்குமுறைச் சட்டம்' கொண்டுவரப்பட்டது. இதேபோல இன்னும் எத்தனை எத்தனையோ சட்டங்கள் அடிமை நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக பிரிட்டிஷ் காலனிய அரசால் கொண்டுவரப்பட்டன.
ஏற்கெனவே சட்ட ஆணையம் தனது முந்தைய அறிக்கைகளில் இதுபோன்ற தேவையில்லாத பல சட்டங்களை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றும்படி பரிந்துரைத்திருக்கிறது. தனது 96ஆவது மற்றும் 148ஆவது அறிக்கைகளில் இதுபோல பல சட்டங்களை அகற்ற வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்திருந்தது. நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து 2014-இல் இதுகுறித்து ஆய்வு செய்ய முடிவெடுத்தது.
இதற்கு முன்னால் 1998-இல் அகற்றப்படுவதற்காக அடையாளம் காணப்பட்ட 253 சட்டங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என்பதை பி.சி.ஜெயின் ஆணையம் அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. 1941-க்கும் 1946-க்கும் இடையேயான 5 ஆண்டுகளில் அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் 9 அவசரச் சட்டங்களைப் பிறப்பித்திருந்தார். இவை இப்போதுதான் நமது சட்டப் புத்தகங்களிலிருந்து அகற்றப்படுகின்றன.
1857-இல், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட 'ஹெளரா குற்றச் சட்டம்', 1879-இல் போக்குவரத்துக்கான வாடகை வண்டிகள் தொடர்பான 'ஹேக்னி கேரேஜ் சட்டம்', 1876-இல் கொண்டுவரப்பட்ட 'நாடகம் நடத்தும் சட்டம்' - இவையெல்லாம் நூறாண்டுகள் கடந்தும் தேவையில்லாமல் சட்டங்களாகத் தொடர்ந்தன. 
இவை அகற்றப்படாததற்கு ஒரு காரணம் உண்டு. ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும் யாரையாவது தொந்தரவு செய்ய வேண்டும் என்று நினைத்தால், இந்தச் சட்டங்களைக் கையில் எடுத்துக் கொண்டு, அவர்கள் மீது நடவடிக்கையை முடுக்கிவிட முடியும். 
அப்பாவிகள் மாட்டிக் கொள்வார்கள்.
தேவையில்லாத சட்டங்களை அகற்றி, குறைந்த அளவு சட்டங்களின் மூலம் லஞ்ச, ஊழல் இல்லாத, திறமையான சட்ட ஒழுங்கு நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதுதான் நல்லரசுக்கு அடையாளம். அதன் முதல் கட்டமாகத் தேவையில்லாத சட்டங்களை 'போகி' கொளுத்தி அகற்றி இருப்பதற்கு சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாதுக்கு நன்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com