சரியான முடிவு!

எட்டு மாதப் போராட்டத்திற்குப் பிறகு பஞ்சாப் மாநில மின்சாரம் மற்றும் பாசனத்துறை அமைச்சர் ராணா குர்ஜித் சிங் பதவி விலகியிருக்கிறார்.

எட்டு மாதப் போராட்டத்திற்குப் பிறகு பஞ்சாப் மாநில மின்சாரம் மற்றும் பாசனத்துறை அமைச்சர் ராணா குர்ஜித் சிங் பதவி விலகியிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், கட்டாயத்தின் பேரில் பதவி விலக நிர்பந்திக்கப்பட்டார். கடந்த 4-ஆம் தேதியே தனது பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்கிடம் அவர் அளித்து விட்டிருந்தார் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. இத்தனை நாள் அவரது பதவி விலகல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பாமல் முதல்வர் ஏன் காலதாமதப்படுத்தினார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இப்போதாவது ராணா குர்ஜித் சிங்கைத் தனது அமைச்சரவையிலிருந்து அகற்றி, ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை முதல்வர் அகற்ற முற்பட்டிருப்பது புத்திசாலித்தனமான முடிவு.
 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தன்னுடைய சொந்த பலத்தில் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கும் முக்கியமான மாநிலம் பஞ்சாப் மட்டுமே. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று, ஊழலற்ற, அரசியல் தலையீடு இல்லாத நேர்மையான நிர்வாகத்தை வழங்குவோம் என்பதுதான். முந்தைய அகாலி தளம் - பாஜக ஆட்சியில் பஞ்சாப் மாநிலம் மிக மோசமான நிர்வாகச் சீர்கேடுகளையும், முறைகேடுகளையும் எதிர்கொண்டது.
 பிரகாஷ்சிங் பாதல் தலைமையிலான அகாலி தள ஆட்சியின் மீதான வெறுப்பும், நாளும் பொழுதும் பொதுவெளியில் கசிந்த முறைகேடுகளும்தான் காங்கிரஸ் கட்சியை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பஞ்சாபில் வெற்றியடையச் செய்தன. 2012 முதல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் நிலைகுலைந்து போயிருந்த காங்கிரஸ் கட்சிக்கு, நேர்மையான, திறமையான ஆட்சியின் மூலம் புதியதொரு பரிமாணத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை பஞ்சாப் வழங்கியிருந்தது. ஆனால், காங்கிரஸ் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதைதான் ராணா குர்ஜித் சிங்கின் பதவி விலகல் வெளிப்படுத்துகிறது.
 கபூர்தலா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான ராணா குர்ஜித் சிங், அரசியல்வாதியாக மாறிய தொழிலதிபர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளுக்குப் பெரிய அளவில் நிதியுதவி வழங்குபவர் ராணா குர்ஜித் சிங் என்பது அவருக்கு பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிடம் நெருக்கம் ஏற்பட்டதற்கு மிக முக்கியமான காரணம். பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, ராணா குர்ஜித் சிங் மின்சாரம் மற்றும் பாசனத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
 அவர் பதவியேற்றது முதலே தனது பதவியைப் பயன்படுத்தி அவருக்கு நெருக்கமானவர்கள் பணம் பெறுவதற்கு வழிகோலத் தொடங்கினார் என்பது பரவலாகவே பேசப்பட்டது. அவரது நிறுவனங்களில் பணியாற்றிய, எந்தவிதப் பொருளாதாரப் பின்னணியும் இல்லாத பல முன்னாள் ஊழியர்கள், பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளில் மணல் அள்ளுவதற்கான பல கோடி ரூபாய் ஏலங்களில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு மே மாதம் இதற்காக நடத்தப்பட்ட ஏலங்களில் அவர்கள்தான் பெரும்பாலான ஏலங்களைக் கைப்பற்றினர்.
 இதுகுறித்து அமைச்சர் ராணா குர்ஜித் சிங்கிடம் கேட்கப்பட்டபோது, அவர் அளித்த பதில் விசித்திரமாக இருந்தது. ஏலத்தில் பங்கு பெற்று பல கோடி ரூபாய்க்கு மணல் அள்ள அனுமதி பெற்ற அமைச்சரின் நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், அவர்கள் இப்போது சொந்தமாக நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார் அமைச்சர். வேடிக்கை என்னவென்றால், ஏலம் எடுத்த அவரது முன்னாள் ஊழியர்கள் அனைவருமே அவரது அலுவலக முகவரியையும், இணையதள முகவரியையும் வைத்துக் கொண்டிருந்தனர் என்பதுதான்.
 ஊடகங்களில் இதுகுறித்த விவரங்கள் வெளியானவுடன் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், ராணா குர்ஜித் சிங்கை பதவி விலகப் பணித்திருந்தால் அவருடைய மதிப்பும் மரியாதையும் உயர்ந்திருக்கும். கடந்த 4-ஆம் தேதி ராணா குர்ஜித் சிங் தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்த பிறகும்கூட எந்த முடிவும் எடுக்காமல் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தாமதப்படுத்தியது அதைவிடத் தவறு. கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இது குறித்துக் கலந்தாலோசிப்பதற்காக முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் காலதாமதப்படுத்தியிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலின்போதே அவர் ராகுல் காந்தியின் பிரசாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கில் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தியவர்.
 ராணா குர்ஜித் சிங்கின் பதவி விலகல் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் தனிப்பட்ட செல்வாக்கையும் நற்பெயரையும் பாதித்திருக்கிறது. ராணா குர்ஜித் சிங் முதல்வருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்திருக்கிறார் என்பதுதான் அதற்குக் காரணம். மேலும், தனக்கு நெருக்கமானவர்களை காப்பாற்றுபவர் என்கிற நற்பெயர் தொண்டர்கள் மத்தியில் அமரீந்தர் சிங்குக்கு உண்டு. அது பாதிக்கப்படுமோ என்று முதல்வர் அச்சப்பட்டாரோ, என்னவோ?
 எதுவாக இருந்தாலும் தனிப்பட்ட நட்பும், தொண்டர்கள் மத்தியிலான தனது பெயரும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக, மாநிலத்தின் வளங்களை சிலர் கொள்ளையடிப்பதற்கு முதல்வராக இருக்கும் ஒருவர் துணைபோய்விட முடியாது என்பது பழுத்த அனுபவசாலியான முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு ஏன் தெரியாமல் போய்விட்டது?
 நதியிருந்தால் மணல் இருக்கும், மணல் இருந்தால் மணல் கொள்ளை இருக்கும், மணல் கொள்ளை இருந்தால், ஊழல் இருக்கும் என்பது இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் எழுதப்படாத விதி போலிருக்கிறது!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com