தனிமைக்கு என்னதான் தீர்வு?

உலகளாவிய அளவில் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்திருப்பது 'தனிமை' என்கிற நோயாகத்தான் இருக்கும்.

உலகளாவிய அளவில் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்திருப்பது 'தனிமை' என்கிற நோயாகத்தான் இருக்கும். விரல் நுனியில் உலகம் என்று நாம் ஒரு புறம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், கடல்களையும் கண்டங்களையும் கடந்து உலகம் சுருங்கிவிட்டது என்று வியந்து கொண்டாலும் இன்னொரு புறம் உண்மையான உறவுகள் மறைந்து, போலித்தனமான சமூக வலைதள சிநேகங்களிலும், சொந்தங்களிலும் உறவாடிக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து இணைய தளத்தின் நண்பர்களைப் பெற முடிகிறது. தூர தேசத்தில் இருக்கும் சொந்தங்களுடன் அன்றாடம் உறவாடி மகிழ முடிகிறது. கணக்கிலடங்காத மனிதர்களுடன் செய்திப் பகிர்தலும், கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்று வருகின்றன. ஆனால், எத்தனை பேருடன் நிஜமான தொடர்புகள், நேரிடையான உரையாடல்கள், நெருக்கமான உறவுகள் இருக்கிறது என்று பார்த்தால், வேதனை அளிப்பதாக இருக்கிறது.
ஒரே கூரையின் கீழ் வாழும் குடும்பத்திலேயே கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும், கருத்துகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதும், சிரித்து மகிழ்வதும் குறைந்து, எங்கெங்கேயோ இருக்கும் முகம் தெரியாத மனிதர்களுடன் இணையத்தின் மூலம் உறவாடிக் கொண்டிருக்கும் அவலம் நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பம் பெயரளவில் மனிதர்களை இணைத்திருக்கிறதே தவிர, உலகளாவிய அளவில் மனிதர்களை தனிமைப்படுத்தி இருக்கிறது என்பதுதான் எதார்த்த நிலைமை. 
வயிற்றுப் பிழைப்புக்காக, வேலை நிமித்தம் காரணமாக இடம் பெயர்தல் பெரிய அளவில் நடந்திருப்பதால் கூட்டுக்குடும்ப முறை என்பது அசுர வேகத்தில் சிதைந்து வருகிறது. நேரிடை உறவுகளைத் தவிர ஒன்றுபட்ட உறவுகளுடன் எந்தவிதத் தொடர்போ அறிமுகமோ இல்லாத சமுதாயம் வளர்ந்து வருகிறது. ரத்த உறவுகள் அகன்று அந்நியர்கள் நட்புறவாகிவிட்டிருக்கும் சமுதாய முறை
உலகெங்கிலும் உருவாகி இருக்கிறது. 
கூட்டுக் குடும்ப முறை தகர்ந்து, சிறு குடும்ப முறை உருவாகி இருப்பதால், மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி இருப்பது முதியோரும் குழந்தைகளும்தான். வயதான காலத்தில் தங்களைப் பேணவும், பாதுகாக்கவும், குழந்தைகள் இல்லாமல் தனியாக வாழும் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல அவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்துக்கும் நரம்பு தொடர்புடைய நோய்களுக்கும் ஆளாகும் அவலம் அதிகரிக்கிறது. 
அதேபோல குழந்தைகளும் நண்பர்களுடன் உறவாடுவதை விட்டுவிட்டு, செல்லிடப்பேசியிலும் இணையத்திலும் நண்பர்களை உருவாக்கி, அவர்களுடன் உறவாடி மகிழும் நிலைமை அதிகரித்து வருகிறது. ஒருபுறம் உலகம் இணைகிறது என்று மகிழ்ந்தாலும், இன்னொருபுறம் மனித மனம் தீவுகளாக மாறுகின்ற அவலம், அதனால் உளவியல் ரீதியாக அவர்கள் மனதில் ஏற்படுகின்ற தனிமை, மன அழுத்தம், சமூக ரீதியாகத் தனிமைப்படல், உளவியல் ரீதியாக சமூக விரோத மனோநிலைக்குத் தள்ளப்படல் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள நேர்கிறது.
பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, தனிமை பிரச்னைக்கென்று ஓர் அமைச்சரை நியமித்திருப்பதைப் பாராட்ட வேண்டும். 'டிரேசி கிரெளச்' என்பவரை 'தனிமை' பிரச்னைக்கான அமைச்சராக நியமித்து, சமுதாயத்தில் காணப்படும் தனிமையை அகற்ற வழிமுறைகள் தேட அவரை பணித்திருக்கிறார் தெரசா மே.பிரிட்டனின் 6.56 கோடி மக்கள் தொகையில் ஏறத்தாழ 90 லட்சம் பேர் தனிமையில் வாழ்கிறார்கள். பிரிட்டிஷ் செஞ்சிலுவை சங்கம் நடத்திய ஓர் ஆய்வின்படி முதியோர், மாற்றுத் திறனாளிகள், 17 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர், அகதிகள் ஆகியோர் மிக அதிகமாகத் தனிமை மனநிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.
விவாகரத்து, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல், பெற்றோரின் ஆதரவில்லாத குழந்தைகள், குழந்தைகளின் ஆதரவில்லாத பெற்றோர் என்று தனிமையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினரை பேட்டி கண்டு பிரிட்டிஷ் செஞ்சிலுவைச் சங்கம் ஓர் அறிக்கையைத் தயாரித்திருக்கிறது. அந்த அறிக்கை, புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தனிமை பிரச்னைக்கான அமைச்சகத்தால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
தனிமை என்பது இந்தியாவிலும்கூட வேதனை தரும் உண்மை. உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு தயாரித்திருக்கும் அறிக்கையின்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 4.5 % பேர் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தேசிய மாதிரி ஆய்வுத்துறை 2004-இல் எடுத்த கணக்கின்படி 12.3 லட்சம் ஆண்களும், 36.8 லட்சம் பெண்களும் இந்தியாவில் தனிமையில் வாழ்வதாகவும், அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. இந்த எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில் நிச்சயமாகப் பலமடங்கு அதிகரித்திருக்கும்.
கூட்டுக்குடும்ப முறை சிதைந்துவிட்ட நிலையிலும்கூட, ஒருவருக்கொருவர் நேரிடையாக உறவாடுவதும், ரத்த உறவுகளுடனும், நண்பர்களுடனுமான உறவை செல்லிடப்பேசியுடன் சுருக்கிக் கொள்ளாமல் நேரில் சந்திப்பதும், கூடிப்பேசுவதும் அதிகரிப்பதன் மூலம்தான் தனிமை பாதிப்பை மாற்ற முடியும். முதியோரின் தனிமையையும், மன அழுத்தத்தையும் எப்படிப் போக்குவது என்பதையும் இளைஞர்கள் மத்தியில் இன்றைய வாழ்க்கை முறையும் தகவல் தொழில் நுட்பமும் ஏற்படுத்தி இருக்கும் தனிமையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் தீவிரமாக சிந்தித்து முடிவு கண்டாக வேண்டும். 
மன அழுத்தம், தனிமைப்படுதல் உள்ளிட்டவை மனநிலை பாதிப்பு அல்ல என்பதை உணர்ந்து, அதற்கான ஆலோசனைத் தீர்வுகளை நாடும் போக்கு அதிகரிக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வுத் திட்டங்களை அரசுதான் முன்னெடுத்துச் செல்ல முடியும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com