தொடங்கியது தேர்தல் சீசன்!

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு முழுவதும் வரிசையாக பல்வேறு மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. தொடர்ந்து அடுத்த ஆண்டும் பல்வேறு மாநில சட்டப்பேரவை
களுக்கும் மக்களவைக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. 
பிப்ரவரி மாதம் இறுதியில் நடைபெற இருக்கும் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயம் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை முதன்மை வகித்து வந்த காங்கிரஸ் கட்சியை அகற்றி நிறுத்தி, மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக முதன்மைப்படுவதற்கான காரணிகள் பல காணப்படுகின்றன. பொதுவாகவே வடகிழக்கு மாநிலங்களில் மத்திய அரசின் நிதியுதவியை நம்பித்தான் நிர்வாக இயந்திரம் இயங்குகிறது என்பதால், அங்கேயுள்ள மாநிலக் கட்சிகளும் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியுடன் இணைந்து செயல்படுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன. 
மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்து கொண்டிருப்பதும், பாஜக ஓர் அரசியல் கட்சியாக உயர்ந்திருப்பதும் எதிர்பாராததல்ல. 2016}இல் அஸ்ஸôம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பிலும், திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பிரதான எதிர்க்கட்சியாகவும் இருந்தது. அஸ்ஸôம், நாகாலாந்து, அருணாசல பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளையத்திற்குள் வந்துவிட்ட நிலையில், நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் திரிபுரா, மேகாலய மாநிலங்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவு மாநிலங்களாக மாற்றுமா என்பதுதான் இந்தச் சுற்று தேர்தல்களின் முக்கியத்துவத்தை 
அதிகரித்திருக்கிறது.
அடுத்த மாதம் தேர்தலைச் சந்திக்க இருக்கும் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய மூன்று மாநிலங்களும் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்களில் சில. அதற்காக அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களின் போக்கை இந்தத் தேர்தல்கள் நிர்ணயித்துவிடாது என்றாலும்கூட, பாஜகவைப் பொருத்தவரை அந்தக் கட்சியின் "காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்கிற இலக்கை நோக்கிய பயணத்தில் இந்தத் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 
பிப்ரவரி 18}ஆம் தேதி திரிபுரா சட்டப்பேரவைக்கான 60 இடங்களுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. கேரளத்தைத் தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மற்றொரு மாநிலம் இது மட்டும்தான். கடந்த 25 ஆண்டு காலமாக, தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் செல்வாக்கு குறைந்திருக்கிறதா, இல்லையா என்பதை வர இருக்கும் தேர்தல் முடிவு வெளிப்படுத்தும். முதல்வர் மாணிக் சர்க்காரின் தனிப்பட்ட செல்வாக்குக்கு சவாலாக இருக்கப்போகிறது பிப்ரவரி 18}ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தல்.
திரிபுராவைப் பொருத்தவரை, அதிக அளவில் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்து மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவது வழக்கமாக இருந்துவருகிறது. கடந்த 2013 சட்டப்பேரவை தேர்தலில் திரிபுராவில் 90% வாக்குப்பதிவு காணப்பட்டது. மாணிக் சர்க்கார் தலைமையிலான ஆட்சியில் திரிபுரா பல்வேறு அம்சங்களில் முன்னேற்றத்தை சந்தித்தது. அநேகமாக 100 சதவீத கல்வியறிவு, மிகக் குறைந்த சிசு மரண விகிதம், மிக அதிகமான மனிதவள மேம்பாட்டுக் குறியீடு என்று மாணிக் சர்க்கார் ஆட்சி நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் பல. இத்தனைக்கும் விவசாயமும் வனமும் சார்ந்த பொருளாதார மாநிலம் திரிபுரா.
மார்க்சிஸ்ட் கட்சியின் நீண்ட நாள் ஆட்சியில் ஆதிவாசிகளின் தீவிரவாதம் அநேகமாக இல்லை என்று சொல்லலாம். ஆனால், அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டமும், கட்டமைப்பு ரீதியில் பெரிய விரிவாக்கமும், முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதும் மக்கள் மத்தியில் நீண்ட நாள் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு எதிரான சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த முறை திரிபுராவில் பிரதான எதிர்க்கட்சியாக இதுவரை இருந்த காங்கிரஸ் கட்சியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பாஜக தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்திருக்கிறது. திரிபுராவில் 32 சதவீதத்துக்கும் அதிகமான ஆதிவாசிகளைத் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளவும் அதன் மூலம் தன்னை ஓர் அரசியல் கட்சியாக நிலைநிறுத்திக் கொள்ளவும் பாஜக முனைந்திருக்கிறது. திரிபுராவின் ஆதிவாசிகள் பகுதிகளைப் பிரித்து "த்விப்ராலாந்து' என்கிற தனி மாநில கோரிக்கையை முன் வைக்கும் த்விப்ரா தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க முற்பட்டிருக்கிறது பாஜக. இது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை தேர்தல் முடிவுகள்தான் தெரிவிக்கும்.
நாகாலாந்தைப் பொருத்தவரை, ஏற்கெனவே ஆளும் நாகாலாந்து கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறது பாஜக. நாகா ஆதிவாசிகளின் இயக்கமான "நாகா ஹோ ஹோ' தேர்தல் புறக்கணிப்புக்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. மேகாலயத்தைப் பொருத்தவரை, வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் மிகவும் வலிமையாக இருக்கும் மாநிலம். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்த மாநிலமும் மத்திய நிதியுதவிக்காக மத்திய அரசில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியை சார்ந்து வாக்களிக்கக் கூடும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.
பருவமழை தொடங்கியிருப்பது போல, தேர்தல் சீசன் தொடங்கி இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com