விலைவாசி சவால்!

மக்களவையில் நரேந்திர மோடி அரசு எதிர்கொள்ளும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்,

மக்களவையில் நரேந்திர மோடி அரசு எதிர்கொள்ளும் நம்பிக்கையில்லாத் தீர்மானம், அரசின் செயல்பாடு குறித்த விமர்சனங்களை முன்வைக்க எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த வாய்ப்பு என்பதைத் தவிர, அதனால் அரசுக்கோ ஆட்சிக்கோ பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. நரேந்திர மோடி அரசு சந்திக்கும் மிகப்பெரிய சவால் நாடாளுமன்றத்துக்கு வெளியேதான் காணப்படுகிறது. 
இந்தியாவின் மொத்த விற்பனை விலையில் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வு அச்சம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவிலான விலைவாசி உயர்வை இந்தியா இப்போது எதிர்கொள்கிறது. ஜூன் மாத மொத்த விற்பனை விலை, 4.4 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக உயர்ந்திருப்பது நிதி நிர்வாகத்தில் காணப்படும் குறைபாடுகளுக்கு எதிரான எச்சரிக்கையாகக் கருதப்பட வேண்டும். ஜூன் மாத விலை உயர்வு கடுமையானது என்பது மட்டுமல்ல எதிர்பார்க்காததும்கூட.
இந்தியாவின் நிதிக் கொள்கையை நிர்வகிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி, அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு ஜூலை மாதம் வட்டி வீதத்தை அதிகரிக்கக்கூடும். அப்படியொரு முடிவை எடுப்பதற்கு முன்னால் ஒருமுறைக்கு பல முறை அது குறித்து தீவிர சிந்தனை மேற்கொண்டாக வேண்டும். காரணம், அதிகரிக்கப்படும் வட்டி வீதம் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும்.
பொதுவாக ரிசர்வ் வங்கி, சில்லறை விற்பனையின் விலைவாசி உயர்வின் அடிப்படையில்தான் வட்டி வீதம் குறித்த கொள்கை முடிவுகளை ஏற்படுத்துவது வழக்கம். கடந்த மாதம் நுகர்வோர் விலைவாசிக் குறியீடு 4%-ஐ கடந்தபோது வட்டி வீதத்தை உயர்த்தி அதைக் கட்டுப்படுத்த முற்பட்டது. அதற்குப் பிறகும்கூட சில்லறை விலைவாசி விற்பனை உயர்வு 5%-ஆக உயர்ந்துவிட்டிருக்கிறது. இந்த நிலையில் விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வந்து பொதுமக்களை விலைவாசி உயர்விலிருந்து ஓரளவு பாதுகாக்க ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக வட்டி வீதத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் தோன்றுகிறது.
உயர்மதிப்பு செலாவணிகளை செல்லாததாக்கியது, முழுமையாக தயார்நிலையில் இல்லாமல் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்தியது உள்ளிட்ட பல கடுமையான சோதனைகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருக்கும் தொழில் துறையையும், வணிகத் துறையையும் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்கும் முடிவு நிச்சயமாக பாதிக்கும். அதுமட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கும் அது முட்டுக்கட்டை போடும். ஏற்கெனவே, சர்வதேச நிதியம் தனது சமீபத்திய அறிக்கையில் 2018-19-இல் இந்தியாவின் வளர்ச்சி 7.3 சதவீதம் என்றும், 2019-20-இல் 7.5 சதவீதம் என்றும் குறைத்து மதிப்பிட்டிருக்கிறது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். 
இந்தியாவின் இப்போதைய விலைவாசி உயர்வு குறுகியகால மற்றும் நீண்டகாலத் தாக்கங்களின் விளைவாகக் காணப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் ஈரானுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு ஒரு காரணம் என்றால், ரூபாயின் மதிப்பு குறைவது இன்னொரு காரணம். இவை மட்டுமல்லாமல், மின்சக்தி, உலோகங்கள், தொழில் உற்பத்தி ஆகியவற்றின் விலைவாசியும் ஏறியிருப்பதை நாம் மறந்துவிட முடியாது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதற்குக் குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாத நிலை காணப்படுகிறது. 
எது எப்படி இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் நிலைமை தர்மசங்கடமானது. வட்டி வீதத்தை அதிகரிக்காமல் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. வட்டி வீதத்தை அதிகரித்தால் பொருளாதார வளர்ச்சியும் முதலீடுகளும் குறைந்துவிடும்.
இது தேர்தல் காலம். இந்த ஆண்டு கடைசியிலும் அடுத்த ஆண்டின் முற்பகுதியிலும் பல்வேறு மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் மிசோரம் தவிர, ஏனைய மாநிலங்கள் அனைத்துமே பாஜக ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள். அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2019-இல் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையை நிச்சயமாக பாதிக்கக்கூடும். இப்படிப்பட்ட சூழலில்தான் மத்திய அரசுக்கு விலைவாசி உயர்வு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே காரிப்' பருவத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அரசாங்கம் அறிவித்துவிட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுக்கு மேல் 50 சதவீத லாபம் கிடைப்பதை உறுதிப்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி 2014 தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. 
மக்களவைத் தேர்தலுக்கு முன்னால் மத்திய அரசு வாக்காளர்களைக் கவருவதற்காக மேலும் பல கவர்ச்சிகரமான திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிடக்கூடும். இவையெல்லாம் நிதிப்பற்றாக்குறையை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். ஆனாலும்கூட, அவை தேர்தலை சந்திக்கும் அரசுக்கு தவிர்க்க முடியாத நிர்பந்தங்கள். 
ஓரளவுக்கு பருவமழை சாதகமாக இருக்கிறது என்பதுதான் மத்திய ஆட்சியாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி. நாடாளுமன்றத்துக்கு வெளியே மக்கள் மன்றத்தில் எதிர்கொள்ளும் விலைவாசி சவாலை, பொருளாதாரத்துக்கு பாதிப்பில்லாமல் நரேந்திர மோடி அரசு எப்படி கையாளப் போகிறது என்பதில்தான் மக்களவைத் தேர்தலில் அதன் வெற்றியோ, தோல்வியோ அடங்கியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com