ஆப்பிரிக்காவின் எதிர்பார்ப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆப்பிரிக்க நாடுகளிலான மூன்று நாள் அரசுமுறைப் பயணம் பிரிக்ஸ்' மாநாட்டுடன் நிறைவு பெற்றிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆப்பிரிக்க நாடுகளிலான மூன்று நாள் அரசுமுறைப் பயணம் பிரிக்ஸ்' மாநாட்டுடன் நிறைவு பெற்றிருக்கிறது. பிரிக்ஸ்' மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதில் வியப்பில்லை. 
இந்தியாவைப் பின்பற்றிதான் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் காலனிய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து வெளியேறி, ஆப்பிரிக்க நாடுகளும் சுதந்திர நாடுகளாகத் தங்களை அறிவித்துக் கொண்டன. கானாவின் க்வாமே நிக்ருமா, காங்கோவின் பேட்ரிஸ் லுமும்பா எகிப்தின் கமால் அப்துல் நாசர் உள்ளிட்ட பல ஆப்பிரிக்க ஆளுமைகள் இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவாஹர்லால் நேருவுடன் நெருக்கமாக நட்புறவு பாராட்டியவர்கள். பண்டித நேருவும் 60 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவுடனான நட்புறவின் முக்கியத்துவத்தை உணர்ந்து அந்தக் கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளுடன் பொருளாதார ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் இந்தியாவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். இந்தியா அணிசேரா நாடுகளை ஒருங்கிணைக்க முற்பட்டபோது, அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவுக்குப் பக்கபலமாக இருந்தவை ஆப்பிரிக்க நாடுகள்தான்.
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மாணவர்கள் நிறவெறிக்கு பயந்து ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்குச் செல்வதைவிட, தங்கள் உயர்கல்விக்கு இந்தியாவைத்தான் தேர்ந்தெடுக்க முற்படுகிறார்கள். இப்போதும்கூட ஆப்பிரிக்க நாடுகளில் பல தலைவர்களும் உயர் அதிகாரிகளும் ஏதாவது ஒரு வகையில் இந்தியாவுடன் கல்வித் தொடர்பு உடையவர்களாக இருப்பவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். சமீப காலமாக ஆப்பிரிக்க மாணவர்களுக்கு எதிராக இந்தியாவில் ஆங்காங்கே நடத்தப்படும் தாக்குதல்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. அதையும் மீறி ஆயிரக்கணக்கில் ஆப்பிரிக்க மாணவர்கள் இந்தியாவை உயர் கல்விக்காகத் தேர்ந்தெடுப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்திய அரசு, ஆப்பிரிக்க நாடுகளுடனான தொடர்பைத் தக்கவைத்துக் கொள்ளாமல் போனதன் விளைவாக, முதலீட்டிலும் சரி, வர்த்தகத்திலும் சரி, சீனா நம்மை மிகவும் பின்தங்க வைத்திருக்கிறது. 2015 புள்ளிவிவரப்படி பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுடனான சீனாவின் மொத்த முதலீடு 3.5 ட்ரில்லியன் டாலர் (சுமார் ரூ. 240 லட்சம் கோடி). அதேநேரத்தில் 2020-இல்தான் இந்தியாவின் முதலீடு 500 மில்லியன் டாலரை (சுமார் ரூ. 3,434 கோடி) கடக்கும் நிலையை எட்டும். 
ஆப்பிரிக்காவில் இருக்கும் அளவு கடந்த இயற்கை வளம், அதிகரித்துவரும் நடுத்தர வர்க்கம், மேம்பட்டு வரும் நிர்வாக அமைப்புகள் இவை எல்லாம் உலகின் அடுத்த வளர்ச்சி மையமாக ஆப்பிரிக்கக் கண்டத்தை விரைவிலேயே உயர்த்தக்கூடும். 
சீனா மிகப்பெரிய அளவில் பல ஆப்பிரிக்க நாடுகளில் முதலீடுகளைச் செய்திருக்கிறது. சுமார் 4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.27 ஆயிரம் கோடி) முதலீட்டில் கென்யாவில் சீனா செய்திருக்கும் முதலீடு அந்த நாட்டைக் கடனாளியாக மாற்றியிருப்பதாக உள்ளூர் மக்கள் கருதுகிறார்கள். ஜிபோத்தியில் சீனா அமைத்திருக்கும் ராணுவ தளம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
இந்தியாவின் ஆப்பிரிக்கக் கொள்கை சீனாவின் வழிமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எங்கெல்லாம் இந்தியா முதலீடு செய்திருக்கிறதோ, அங்கெல்லாம் அந்த நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை நாம் கொள்கையாகக் கொண்டிருக்கிறோம். ஆனால், சீனா முதலீடு செய்யும்போது கூடவே அதிக அளவில் தனது நாட்டிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதும், அவர்களை அங்கே குடியேற்றுவதும் ஆப்பிரிக்கர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையில், அந்த நாடுகள் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ள விழைகின்றன.
கல்வி, கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆப்பிரிக்காவிலுள்ள எல்லா நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து செயல்படக் காத்திருக்கின்றன அப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்ந்து நரேந்திர மோடி அரசு ஆப்பிரிக்காவின் மீது அதிக கவனம் செலுத்தத் தொடங்கியது. ருவாண்டாவில் விரைவிலேயே இந்தியத் தூதரகம் அமைக்கப்படும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதி பெரும் வரவேற்பைப் பெற்றதில் வியப்பில்லை. அந்த நாட்டில் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், பிரதமரின் அரசு முறை பயணத்தின் போது 200 பசுக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவும், ருவாண்டாவும் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதன் அடையாளம்தான் இது. பிரெஞ்சு காலனிகளாக இருந்து விடுதலை பெற்ற ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்திய உறவு முன்பு வலுவாக இல்லை. அதை வலுப்படுத்துவதாக அமைந்தது பிரதமரின் சமீபத்திய விஜயம்.
பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் சீனாவை மட்டுமே சார்ந்திருக்கும் பொருளாதாரமாக இருக்க விரும்பவில்லை. இதை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அண்ணல் காந்தியடிகளை தங்களது வழிகாட்டியாகக் கருதும் ஆப்பிரிக்க மக்களின் உயர் கல்விக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுவதுடன், அவர்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் மிக மிக அவசியம். 
நாம் ஆப்பிரிக்காவில் சீனாவுடன் போட்டி போடுவதை இலக்காகக் கொள்ளாமல் ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சித் திட்டங்ளுக்கு உதவும் நட்புறவு நாடாக மாற முடியும். இதைத்தான் ஆப்பிரிக்க நாடுகளும் எதிர்பார்க்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com