சிறையும் பிணையும்!

இந்தியச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 4,19,623 கைதிகளில் சுமார் 2.82 லட்சம் பேர் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பவர்கள்.

இந்தியச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 4,19,623 கைதிகளில் சுமார் 2.82 லட்சம் பேர் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பவர்கள். மொத்த சிறைச்சாலை கைதிகளில் இவர்கள் 67%. குற்றவியல் சட்டப்பிரிவு 436(அ) பிரிவின்படி, குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனையில் பாதி காலம் விசாரணைக் கைதியாக இருந்தவர்கள் விடுவிக்கப்படலாம் என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. கொலை, தீவிரவாதம், தேசத் துரோகம் முதலிய குற்றங்களைத் தவிர, ஏனைய குற்றவியல் வழக்குகளில் விசாரணைக் கைதிகளை அரசே விடுவிக்க முடியும்.
 இந்த நிலையில்தான், சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு புதியதொரு திட்டத்தை இப்போது மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது. பிணை கொடுக்க வழியில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரனைக் கைதிகளுக்கான பிணைத் தொகையை அரசே ஏற்றுக்கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறது.
 இதன் மூலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவர். அதன் முதல் கட்டமாக பிணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 11,916 பெண் கைதிகள் விடுவிக்கப்பட இருக்கிறார்கள். பிணையில் எடுக்க யாரும் இல்லாததாலும் பிணைத் தொகையை செலுத்த வழி இல்லாததாலும் நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்கள் இவர்கள்.
 இந்தியாவில் பெரிதும் சிறிதுமாக 1,401 சிறைகள் இருக்கின்றன. இவற்றில் அதிகபட்சமாக 3,66,781 கைதிகள் இருக்க முடியும். ஆனால், இன்றைய நிலையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 4,19,623. அளவுக்கு அதிகமாகக் கைதிகள் காணப்படுவதால் சிறைச்சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் கைதிகள் ஆடு, மாடுகள் போல அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறைச்சாலைகளில் நிலவும் மோசமான சூழல் குறித்தும், பராமரிப்புக் குறைகள் குறித்தும், சுகாதாரக் கேடு குறித்தும் உச்சநீதிமன்றம் பலமுறை கவலை தெரிவித்திருக்கிறது.
 சிறைச்சாலை வன்முறை, போதுமான மருத்துவ வசதி இல்லாமல் இருப்பது, சிறை நிர்வாகத்தின் கவனக்குறைவு, கைதிகளுக்கிடையே ஏற்படும் தனிப்பட்ட மோதல்கள், தற்கொலைகள் ஆகியவை இந்திய சிறைச்சாலைகளில் காணப்படும் பொதுவான நிலைமை. பொதுமக்கள் மத்தியில் காணப்படுவதைவிட சிறைச்சாலைகளில் நடைபெறும் தற்கொலைகள் 50% அதிகம். சிறைச்சாலை மரணங்கள் அதிகரிப்பதற்கு அதிக அளவில் கைதிகள் இருப்பதும்கூட ஒரு காரணம்.
 மோசமான பல குற்றவாளிகளுக்கு இடையில் நிரபராதிகள் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்படும்போது, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அந்த நிரபராதிகளை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அவர்களில் பலரை குற்றவாளிகளாக மாற்றி விடுகிறது. தங்களது வாழ்க்கையின் நல்ல பகுதிகளையெல்லாம் சிறைச்சாலையில் கழித்துவிட்டு, குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் விசாரணைக் கைதிகளில் பலர் வெளியில் வந்தாலும்கூட சமுதாயம் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை.
 அதேபோல விசாரணைக் கைதிகள் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் மன வேதனையும், பொருளாதாரச் சீர்குலைவும், குழந்தைகளின் இருண்ட வருங்காலமும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளாகி விடுகின்றன. அவர்களுடைய குழந்தைகள் குற்றவாளிகளின் குழந்தைகள் என்கிற முத்திரை குத்தப்பட்டு விடுவதால், மன அழுத்தம் காரணமாக சமூக விரோதிகளாக வளர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
 தேசிய குற்ற ஆவணத் துறையின் தகவலின்படி, இந்தியாவின் பல்வேறு சிறைகளில் நான்காயிரத்துக்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். விசாரணைக் கைதிகளில் பலர் எந்தத் தவறும் செய்யாமல், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும், தவறான சாட்சிகளின் அடிப்படையிலும், செல்வாக்கு மிக்கவர்களின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டதாலும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள். அவர்களில் பலருக்குக் கல்வி அறிவோ, பொருளாதாரப் பின்னணியோ இல்லாததால் வழக்குரைஞர்களை நியமித்து தங்களுக்காக வாதாடக்கூடத் தெரிவதில்லை என்பதுதான் உண்மை.
 விசாரணைக் கைதிகளில் பலருடைய வழக்குகள், காவல் துறையினரின் மெத்தனப் போக்கால் இழுத்தடிக்கப்படுபவை. போதிய சாட்சியம் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் அவர்களைக் கைது செய்திருப்பதால் அத்தகைய வழக்கு வரும்போது விசாரணை அதிகாரி ஆஜராகாமல் வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. அதனால், தங்களின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் பல விசாரணைக் கைதிகள் சிறையில் வாடும் அவலம் இந்தியாவில் மட்டுமே நடக்கும் மிகப்பெரிய மனித உரிமை மீறல்.
 குற்றம் நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டவர்களுக்கு அரசால் எந்தவொரு இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. எந்தவொரு வழக்கிலும் "இயன்றவரை பிணைதான் சிறையல்ல' என்கிற உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல் கீழமை நீதிமன்றங்களால் பின்பற்றப்படாமல் இருக்கும் காலம் வரை இந்த அவலம் தொடரும்.
 மத்திய அரசு தானே பிணைத் தொகையை ஏற்று, விசாரணைக் கைதிகளை விடுவிப்பது என்று எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது. சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் குறைக்கப்பட்டு, சிறைச்சாலைகளின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சி தொய்வில்லாமல் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com