ஜேட்லியின் தப்புக் கணக்கு!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பெட்ரோலியப் பொருள்கள் மீதான சில்லறை விற்பனையில் மத்திய அரசு விதித்திருக்கும் வரிகளை நியாயப்படுத்தி இருக்கிறார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பெட்ரோலியப் பொருள்கள் மீதான சில்லறை விற்பனையில் மத்திய அரசு விதித்திருக்கும் வரிகளை நியாயப்படுத்தி இருக்கிறார். நிதிப்பற்றாக்குறையை அதிகரிக்காமல் அரசின் செலவினங்களை அதிகரிப்பதன் மூலம், வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்பது அவர் கூறும் காரணம். 
சர்வதேசச் சந்தையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை பாதிக்குப் பாதியாகக் குறைந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்கத் தயக்கம் காட்டாத அரசு, அப்போது கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோலியப் பொருள்களின் விலை யைக் குறைக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெட்ரோல், டீசலில் வரி வருவாய் ஈட்டியிருக்கிறது மத்திய அரசு.
பெட்ரோல், டீசல் விலை தெற்காசிய நாடுகளில் இந்தியாவில்தான் அதிகம். நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் நம்மைப் போலவே சர்வதேசச் சந்தையில் இதே விலையைக் கொடுத்துத்தான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கின்றன. ஆனால், அந்த நாடுகளால் நம்மை விட மிகக் குறைந்த விலைக்கு பெட்ரோல், டீசல் கொடுக்க முடியும்போது இந்தியாவில் மட்டும் ஏன் இந்த விலை என்றால் அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளை அதிகரித்து, விலைக் குறைப்பின் பயன் மக்களுக்குக் கிடைக்காமல் தடுத்துவிட்டதுதான். 
சர்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ந்தபோது பெட்ரோல், டீசல் மீதான வரிகள் கடுமையாக அதிகரிக்கப்பட்டன. அதன் பயன் அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கும் நிலையில், அந்த விலை உயர்வை முழுமையாக வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தியிருக்கிறது அரசு. 2009 ஜூலையில் இப்போதுபோல அப்போதும் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 65 டாலருக்கு (சுமார் ரூ.4,400) உயரத்தான் செய்தது. ஆனால், இந்த அளவுக்கு அதிகமான சில்லறைவிற்பனை விலை உயர்வு இல்லாமல் இருந்தது. அரசு இந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பில் ஈடுபடாததே அதற்குக் காரணம்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுவதுபோல, அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் மூலம் அதிகமாக செலவழிப்பதால் பொருளாதாரம் புத்துணர்ச்சி பெறும் என்பது வெறும் மாயை. இதற்கு முன்னால் பலமுறை இந்த வழிமுறையை அரசு கடைப்பிடித்துத் தோல்வி அடைந்திருக்கிறது என்பது நிதியமைச்சருக்குத் தெரியாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. 
2008-2011 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மூன்று பட்ஜெட்டுகளில் மிக அதிகமாக மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவழித்தது. அதன் விளைவாக இந்தியப் பொருளாதாரம் ஒன்றும் புத்துணர்ச்சி பெற்றுவிடவில்லை. நிதிப்பற்றாக்குறையும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்து இந்தியா மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் தள்ளப்பட்டது என்பதுதான் உண்மை.
அந்த நெருக்கடியை எதிர்கொள்ள 2012 முதல் 2014 வரை அரசு தனது செலவினங்களைக் கடுமையாகக் குறைத்து, அதிகரித்து வரும் பற்றாக்குறையை ஓரளவு சரி செய்தது. கடந்த மார்ச் 2014-இல் நிதிப்பற்றாக்குறையும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் குறைக்கப்பட்ட பிறகுதான் பொருளாதார வளர்ச்சி மீண்டும் சுறுசுறுப்படைந்தது. 2016-இல் அதிக மதிப்புச் செலவாணிகள் செல்லாததாக்கப்படும் வரை இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிப் பயணித்தது என்பதை நிதியமைச்சர் அருண் ஜேட்லி புரிந்து கொள்ள மறுக்கிறார்.
அதிகரித்த பெட்ரோல், டீசல் மீதான வரிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டால் அதன் உடனடி விளைவுகள் இந்தியப் பொருளாதாரத்துக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக இருக்கும். காரணம், மக்கள் கையில் அதன் மூலம் கூடுதல் பணம் புரளக்கூடும். பெட்ரோல், டீசல் விலை குறைவால் போக்குவரத்து செலவு, எரிசக்திச் செலவு கணிசமாகக் குறையும்போது அதன் தொடர் விளைவுகள் ஆக்கபூர்வமாக இருக்கும். விலை குறைவு ஏற்பட்டிருக்கிறது என்கிற பொதுவான கருத்து வளர்ச்சியை தூண்டிவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக குறைந்த எரிசக்தி செலவால் இந்தியா சர்வதேசச் சந்தையில் முனைப்பாகப் போட்டிபோட முடியும். 
வளர்ச்சி என்பதுதான் அதிகரித்த வருவாய்க்கான உத்தரவாதம் என்பதை அரசு உணர வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்பட்டால் அதன் பயன் வாடிக்கையாளர்களுக்கு நிதர்சனமாகத் தெரியும். உள்நாட்டு வாங்கும் சக்தி அதிகரிக்கும்போது அதனால் ஏற்படும் வளர்ச்சிக்கான சூழல் இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்பதை உணர வேண்டும். 
கடந்த மூன்றாண்டுகளாக சர்வதேசப் பொருளாதார நிலை சாதகமாக இருந்தும்கூட இந்தியாவின் ஏற்றுமதி திருப்திகரமாக இல்லை. அரசு முனைப்புடன் ஏற்றுமதியாளர்கள் சர்வதேசச் சந்தையில் ஏனைய நாடுகளுடன் போட்டியிடுவதற்கான சூழலை ஏற்படுத்துவது இன்றைய நிலையில் மிக மிக அவசியம். அதற்கு ஜிஎஸ்டி வழிமுறைகளை சுலபமாக்குவதும், பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்து மக்கள் மத்தியில் பணப் புழக்கத்தை அதிகரிப்பதும்தான் உடனடி வழிமுறை. இது ஏன் நிதியமைச்சருக்குப் புரியவில்லை என்பது நம்மைப்போலப் பொருளாதாரம் தெரியாத சாமானியர்களுக்குப் புரியவில்லை. இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்த அரசு மக்களைச் சந்தித்தாக வேண்டும். 
அது குறித்த கவலை நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு இல்லை என்பதைத்தான் பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் வளர்ச்சி ஊக்குவிக்கப்படாது என்கிற அவரது தவறான வாதம் வெளிப்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com