நியாயமற்ற வெட்டு!

மத்திய அரசு மாத ஊதியம் பெறும் நடுத்தர வர்க்கத்தினரின் சேமநல நிதிக்கான வட்டியை மீண்டும் குறைக்க முற்பட்டிருக்கிறது

மத்திய அரசு மாத ஊதியம் பெறும் நடுத்தர வர்க்கத்தினரின் சேமநல நிதிக்கான வட்டியை மீண்டும் குறைக்க முற்பட்டிருக்கிறது.மாத ஊதியம் பெறும் ஏறத்தாழ 6 கோடி ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட இருக்கிறார்கள். இது குறித்து எந்தவித சலனமோ விவாதமோ இல்லாமல் இருக்கிறது என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
தொழிலாளர் சேமநல நிதி நிறுவனம் (எம்பிளாயீஸ் பிராவிடன்ட் பண்ட் ஆர்கனைசேஷன்) 2017-18 நிதியாண்டின் வட்டி விகிதத்தை 8.65% லிருந்து 8.55% ஆகக் குறைத்திருக்கிறது. 2015-16-இல் வட்டி விகிதம் 8.8% ஆக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 8.55% தான் மிகவும் குறைவான வட்டி விகிதம். இன்றைய நிதி சூழலின் நிலையற்ற தன்மையில் இதுதான் தங்களால் தரமுடிந்த அதிகபட்ச வட்டி என்று தொழிலாளர் சேமநல நிதி நிறுவனத்தின் மத்திய அறங்காவலர் குழுக் கூட்டத்திற்குப் பிறகு தொழிலாளர் நலத்துறை செயலர் எம். சத்யவதி தெரிவித்திருக்கிறார்.
சேமநல நிதி நிறுவனத்தின் முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாய் கணிசமாகக் குறைந்திருப்பதால், நிதி நிறுவனமும், வட்டிக் குறைப்பில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்திருக்கிறார். இத்தனைக்கும் தொழிலாளர்களின் சேமநல நிதியைக் கையாளும் அந்த அமைப்பு தனது பங்குகளின் ஒரு பகுதியை விற்றதன் மூலம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக முதலீட்டு ஆதாயம் அடைந்திருந்தும், கடந்த ஆண்டு அளவுக்கு இந்த ஆண்டு தொழிலாளர்களின் சேமநல நிதிக்கு வட்டி தர முடியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
சேமநல நிதியில் அரசு கொண்டுவந்திருக்கும் வட்டிக் குறைப்பு ஒட்டுமொத்த நடுத்தர வர்க்கத்தினரைக் குறிப்பாக, மாத ஊதியம் பெறுபவர்களைக் கடுமையாகப் பாதிக்க இருக்கிறது. வங்கிகளில் முதலீடு செய்தால், மிகக்குறைந்த வட்டிதான் தரப்படுகிறது. அந்த வட்டி, அதிகரித்துவரும் விலைவாசியை ஈடுகட்டும் விதத்தில் இல்லை என்பதைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. நீரவ் மோடி பாணியிலான பல்வேறு வங்கி மோசடிகளைத் தொடர்ந்து வங்கிகளில் பணத்தை முதலீடு செய்வது என்பது நடுத்தர வர்க்கத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சரி, வங்கிகளில்தான் முதலீடு செய்ய முடியவில்லை, தாங்கள் வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்ததால் கிடைக்கும் ஓய்வூதியத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா என்றால், அதுவும் நம்பத் தகுந்ததாகவும், உத்தரவாதம் உள்ளதாகவும் இல்லை. பங்குச் சந்தையின் நிலையற்ற தன்மையால், நடுத்தரவர்க்கத்தினரின் அச்சத்தில் அர்த்தமிருக்கிறது.
மனை வணிகத்தில் முதலீடு செய்வது என்பதில் இருந்த முந்தைய கவர்ச்சி இப்போது இல்லை. அதற்குக் காரணம், சாமானிய நடுத்தர வர்க்கத்தினரின் குறைந்த அளவிலான முதலீடுகளுக்கு மனை வணிகத்தில் வாய்ப்பில்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதிகரித்துவரும் குற்றங்களும், சட்ட ஒழுங்குப் பிரச்னைகளும் தங்கத்தில் முதலீடு செய்வதிலிருந்தும் நடுத்தரவர்க்கதினரை அகற்றி இருக்கின்றன.
அரசு இப்போது சேமநல நிதிக்குப் பங்களிப்பதை நிறுத்திவிட்டது. அரசின் பங்களிப்பில்லாத சேமநல நிதியைத்தான் ஊழியர்கள், தொழிலாளர் சேமநல நிதி நிறுவனத்தில் வைப்புத் தொகையாக வைக்கிறார்கள். அந்த முதலீட்டைப் பயன்படுத்தி நிதி நிறுவனம் பல்வேறு முதலீடுகளிலிருந்து வட்டி ஆதாயம் பெறுகிறது. அப்படி இருக்கும்போது, ஊழியர்களின் சேமநல நிதிக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் என்ன?
தொழிலாளர் சேமநல நிதி நிறுவனம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியபோது, அந்த நிறுவனத்தின் மத்திய அறங்காவலர் குழு, இதன் மூலம் அதிக ஆதாயம் பெற்று வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் வட்டி விகிதம் வழங்க முடியும் என்று தெரிவித்தது. பங்குச் சந்தையில் தொழிலாளர் சேமநல நிதி நிறுவனம் விளையாடத் தொடங்கி இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், ஆண்டுக்கு ஆண்டு வாடிக்கையாளர்களின் வட்டி விகிதம் குறைந்து வருகிறதே தவிர, கூடவில்லை. 
ஆண்டுதோறும் தொழிலாளர் சேமநல நிதி நிறுவனம் சுமார் ரூ. 500 கோடியிலிருந்து ரூ. 600 கோடி வரை ஒதுக்கிவைத்துக் கொள்கிறது. இப்படி ஒதுக்கிவைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை. 8.65 % வட்டி விகிதம் தொடர்ந்தாலும் கூட அரசுக்கு ரூ. 48 கோடி கூடுதலாகக் காணப்படும் நிலையில் வேண்டுமென்றே வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 
கடந்த நிதி நிலை அறிக்கையில் தொழிலாளர் சேமநல நிதி வாடிக்கையாளர்கள் தேசிய சேமநலத் திட்டத்திற்கு மாறிக்கொள்வதற்கான வசதி அறிவிக்கப்பட்டது. ஆனால், தேசிய சேமநலத் திட்டத்திலிருந்து தொழிலாளர் சேமநல நிதிக்கு மாறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அரசின் ஒரு நிறுவனத்தை ஊக்குவிப்பதற்காக இன்னொரு நிறுவனம் ஏன் தகர்க்கப்பட வேண்டும்?
இதற்குப் பதிலாக தேசிய சேமநலத் திட்டத்தை அதிக வட்டி வழங்கும் திட்டமாக மாற்றி, வாடிக்கையாளர்களைக் கவர்வதுதானே, அரசுக்கும் நல்லது, சேமநல நிதியில் தங்களது சேமிப்பை முதலீடு செய்யும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் நல்லது? 
12% ஆக இருந்த சேமநல நிதியின் வட்டி விகிதம் இப்போது வெறும் 8.55.% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு (2015-16) 8.8.%லிருந்து 8.7%ஆகக் குறைத்தபோது அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து, அரசின் முடிவைத் தடுத்து நிறுத்திய தொழிற்சங்கங்கள் இப்போது அரசின் முடிவை தலையாட்டி அங்கீகரித்திருக்கின்றனவே, இதன் பின்னணிதான் என்ன? 6 கோடி நடுத்தர வர்க்கத்தினரின் தொழிலாளர் சேமநல நிதி வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம் ஆளும் பாஜக தனது வாக்கு வங்கியை இழக்கப் போகிறது என்கிற உண்மையை பிரதமர் நரேந்திர மோடிக்கு யார் புரிய வைப்பது?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com