திரிபுரா விடுக்கும் செய்தி!

திரிபுராவில் கால்நூற்றாண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாஜகவின் வெற்றி அமைந்திருக்கிறது

திரிபுராவில் கால்நூற்றாண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாஜகவின் வெற்றி அமைந்திருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னால் 1.5%-க்கு சற்று அதிகமாக வாக்குகள் பெற்ற பாஜக இப்போது ஆட்சி அமைக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது எதிர்பாராத வளர்ச்சி. புதிதாகத் தொடங்கும் கட்சிகள் இதுபோல திடீர் வெற்றி அடைந்து அதிர்ச்சி அளித்திருக்கின்றன. ஆனால், சட்டப்பேரவையில் ஓர் உறுப்பினர்கூட இல்லாமல் இருக்கும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வெற்றி பெற்ற வரலாறு சுதந்திர இந்தியாவில் இதற்கு முன் இல்லை.
 உள்ளாட்சி உறுப்பினர் ஒருவர்கூட இல்லாமல் இருந்த பாஜக, போட்டியிட்ட 50 இடங்களில் 35 இடங்களை வென்றது மிகப்பெரிய தேர்தல் சாதனை. பாஜகவின் கூட்டணிக் கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி, போட்டியிட்ட 9 இடங்களில் 8 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆட்சியில் இருந்த இடதுசாரிக் கூட்டணி 60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டப்பேரவையில் வெறும் 16 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. முந்தைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாகக் கோலோச்சிய காங்கிரஸ், ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
 ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்கத்தில் தனது ஆட்சியை திரிணமூல் காங்கிரஸிடம் இழந்த இடதுசாரிகள், இப்போது கடந்த 25 ஆண்டுகளாக தொய்வில்லாமல் தொடர்ந்து வந்த திரிபுரா மாநிலத்தை பாஜகவிடம் இழந்திருக்கின்றனர். மாணிக் சர்க்கார் அரசு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாதது, அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், அரசியல் வன்முறைகள், நிர்வாக அளவிலான ஊழல் என்று இடதுசாரி அரசின் தோல்விக்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால், பாஜகவின் தேர்தல் உத்திகளுக்கு, ஆட்சியில் நீண்டகாலம் இருந்துவிட்ட இடதுசாரிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதுதான் திரிபுராவை இழந்ததற்கு மிக முக்கியமான காரணம்.
 2013-இல் வெறும் 1.5% வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த பாஜக இப்போது 43% வாக்குகள் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் 2013-இல் 53% வாக்குகள் பெற்றிருந்த இடதுசாரி கூட்டணியின் வாக்கு 42.7%-ஆகச் சரிந்திருக்கிறது. இதற்கு காரணம், பாஜக மிகவும் சாதுர்யமாக மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு உள்ள ஆதிவாசிகளையும், பெரும்பான்மையினரான வங்காளிகளையும் குறிவைத்துத் தனது பிரசாரத்தை நகர்த்தியதுதான். ஏனைய வடகிழக்கு மாநிலங்களைப்போல அல்லாமல் திரிபுராவில் ஆதிவாசிகளைவிட வங்காளிகள்தான் பெரும்பான்மையினர். இந்த அடிப்படை உண்மையை பாஜக உணர்ந்து செயல்பட்டதுதான் அதன் வெற்றிக்குக் காரணம்.
 2016-இல் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலின்போது இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டிருக்கும் வங்கதேசக் குடியேறிகள் அனைவரையும் ஒருவர் விடாமல் வெளியேற்றுவோம் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் கோஷம், அஸ்ஸாமில் பாஜகவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. இப்போது அதே வழிமுறைதான் திரிபுராவிலும் பாஜகவுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.
 திரிபுராவின் பெரும்பான்மை வங்காளிகள் தங்களைக் கைவிட்டு பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்பதை இடதுசாரிகள் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. திரிபுராவில் இருக்கும் பெரும்பாலான வங்காளிகள் வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு ஊடுருவி அந்த மாநிலத்தைத் தங்களது மாநிலமாக்கிக் கொண்டிருக்கும் வங்காளி இந்துக்கள். இப்போது அவர்கள்தான் திரிபுராவில் பெரும்பான்மை சமூகத்தினர்.
 1955 குடியுரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்து, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு மத அடிப்படையில் குடியுரிமை வழங்க முற்பட்டது அந்தக் கட்சிக்கு சாதகமாக மாறும் என்பதை யாருமே உணரவில்லை. பிரிவினையின் காரணமாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்து வங்காளிகளுக்கு குடியுரிமை வழங்க இந்தச் சட்டத் திருத்தம் வழிகோலியது. அதனால் திரிபுராவில் உள்ள பெரும்பான்மை சமூகமாக வங்கதேசத்திலிருந்து திரிபுராவில் குடியேறிய இந்துக்கள் அனைவரும் இந்தியக் குடியுரிமை பெற்றனர். 1947-ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகும், 1971 வங்கதேசம் உருவாகியபோதும் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தவர்கள் இந்த இந்து வங்காளிகள்.
 வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய இந்து வங்காளிகள், அந்த மாநிலத்தில் பெரும்பான்மையினராக இருந்த பல்வேறு ஆதிவாசிகளை சிறுபான்மையினராக்கிவிட்டனர். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, ஆதிவாசிகளின் மக்கள்தொகை 30%. ஆதிவாசிகளல்லாத வங்காளி இந்துக்களின் மக்கள்தொகை 66%. ஆதிவாசிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 20 தனித் தொகுதிகளில் வெற்றி பெறாமல் இடதுசாரிகளிடமிருந்து திரிபுராவைக் கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்த பாஜக, தனி மாநிலம் கோரும் திரிபுரா மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது அதைவிட முக்கியமான ராஜதந்திர தேர்தல் வியூகம்.
 திரிபுரா தேர்தல் முடிவுகள் இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல, காங்கிரஸýக்கும் மிகப்பெரிய பின்னடைவு. 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் 36.53% வாக்குகள் பெற்ற காங்கிரஸின் வாக்கு இப்போது 2%-க்கும் குறைவாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. காங்கிரஸின் வாக்கு வங்கி பாஜகவுக்கு மாறியிருப்பதுகூட, பாஜகவின் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம். இடதுசாரிகளின் கோட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சரிந்துகொண்டே இருக்கிறது என்பது மட்டுமல்ல, காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை பாஜகவுக்கு இழந்து கொண்டிருக்கிறது என்பதும்கூட திரிபுரா தேர்தல் முடிவுகள் உரக்க எழுப்பும் செய்தி!
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com