என்று அகலும் இந்த அவலம்?

கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி விஷவாயு தாக்கி ஏறத்தாழ 22,300 பேர் ஆண்டுதோறும் மரணமடைவதாக பத்து ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரம் கூறுகிறது.

கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி விஷவாயு தாக்கி ஏறத்தாழ 22,300 பேர் ஆண்டுதோறும் மரணமடைவதாக பத்து ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த எண்ணிக்கை இருமடங்காக ஆகாமல் இருந்தாலும் நிச்சயமாக கணிசமாக அதிகரித்திருக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை.
சாக்கடையில் இறங்கி நேரிடையாக துப்புரவு செய்யும் முறை தவிர்க்கப்பட வேண்டும். அப்படி இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவர்கள் தகுந்த பாதுகாப்புடன்தான் இறக்கப்பட வேண்டும். துப்புரவுப் பணியில் ஈடுபடும்போது ஒருவர் இறந்தால் அவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தரப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வலியுறுத்தியிருக்கிறது. தீர்ப்பு வழங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை.
இந்தியாவிலுள்ள துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களும் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில்லை. கழிவுநீர் தொட்டிகளில், குறிப்பாக, மனிதக் கழிவுகள் உள்ள தொட்டிகளில் கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைட், கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட மிகவும் அபாயகரமான விஷவாயுக்கள் காணப்படும் நிலையில், அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இருப்பதை உள்ளாட்சி நிர்வாகம் உணராமல் இருப்பதற்கு அதிகாரிகளிடம் காணப்படும் ஆதிக்க ஜாதி உணர்வும் ஒரு காரணம் என்பதை முழுமையாக மறுத்துவிட முடியாது.
மனிதக் கழிவுகளை அகற்றுவது, நேரிடையாகக் கழிவுநீர் தொட்டிகளில் பணியாளர்களை இறக்கிப் பணிபுரியச் செய்வது ஆகியவை 1993-இல் சட்டம் இயற்றப்பட்டு தடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றுவரை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் இதை ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நடைமுறை உண்மை அதுதான். 
கழிவுநீர் தொட்டிகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் நேரிடையாக பயன்படுத்தப்படும்போது அவர்கள் இறந்தால் அவர்களைப் பணிக்கு பயன்படுத்திய ஒப்பந்தக்காரர்களோ, தனிநபர்களோ பொறுப்பேற்கும்படி சட்டம் விரிவாக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, அந்தத் தொழிலாளர்களுக்கான இழப்பீடை (ரூ.10 லட்சம்) பணிக்கு அமர்த்துவோரே தர வேண்டும் என்றும் சட்டமாக்கப்பட்டது. இது 1993-இல் சட்டம் உருவாக்கியபோதே சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். எப்படி ஏனைய இழப்பீடு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லையோ அதேபோல, கடைப்பிடிக்காமல் தவிர்க்கப்படும் இன்னொரு சட்டமாக இதுவும் இருக்கப்போகிறது, அவ்வளவே.
ஒப்பந்தக்காரர்கள் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புக் கவசங்களையும் ஆக்ஸிஜன் உபகரணத்தையும் வழங்க வேண்டும் என்று இருந்தாலும் அவை கடைப்பிடிக்கப்படுவதில்லை. மாநில அரசுகள் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், பன்னிரண்டு மாநிலங்கள் மட்டுமே இந்தியாவில் கண்காணிப்புக் குழு அமைத்திருக்கின்றன. அவற்றிலும்கூட நான்கு மாநிலங்களில்தான் கண்காணிப்புக் குழுக்கள் கூடி விவாதித்து முடிவுகளை எடுத்திருக்கின்றன. 
அரசின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 13,368 துப்புரவுத் தொழிலாளர்கள்தான் இருக்கிறார்கள். ஆனால், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்டி, அவர்களது எண்ணிக்கை 1,82,505. இந்த முரண்பாட்டுக்கு இரண்டு காரணங்கள். முதலாவது காரணம், மாநிலங்கள் துப்புரவுத் தொழிலாளர்களை முறையாக அடையாளம் கண்டு பதிவு செய்யவில்லை. இரண்டாவது, புள்ளிவிவரங்களை அவை மறைக்கின்றன. மாநிலங்கள் மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் இருப்பதையே ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு மறுவாழ்வை எப்படி உறுதிப்படுத்துவது, விபத்து நேர்ந்தால் அவர்களுக்கு இழப்பீடு எப்படி வழங்குவது?
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 1,82,505 துப்புரவுத் தொழிலாளர்கள் இருப்பதில் வியப்பில்லை. ஏனென்றால், இந்தியாவில் இப்போதும் 7,40,078 வீடுகளில் உள்ள கழிப்பறைகளில் மனித மலம் நேரிடையாக அகற்றப்படுகிறது. ஏறத்தாழ 26 லட்சம் கழிப்பறைகளில் இன்னும் துப்புரவுத் தொழிலாளர்கள் தினந்தோறும் மனிதக் கழிவுகளை நேரிடையாக அகற்றும் நிலை இருக்கும்போது, அவர்களை முழுமையாக தவிர்ப்பது என்பது எப்படி சாத்தியம்?
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறைகள் கட்டப்படுகின்றனவே தவிர, மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் நிலையை மாற்றவோ, அந்த வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவோ எந்தவிதமான முயற்சியும் இல்லை. 2013-14இல் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக ரூ.557 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அது கடந்த நிதியாண்டில் ரூ.5 கோடியாக குறைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால், மனிதர்களின் மூலம் மனிதக் கழிவுகளை அகற்றும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
மனிதக் கழிவுகளை அகற்றும் இந்த வழக்கத்தின் பின்னணியில் தலைமுறை தலைமுறையாக இந்தியாவில் காணப்படும் மூடப்பழக்க வழக்கங்கள், ஜாதீய நடைமுறைகள், சமூகப் பார்வை என்று பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்தும்கூட இன்னும் நம்மால் இந்தத் தலைக்குனிவை ஏற்படுத்தும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் இருப்பது தேசிய அவமானம். 
சட்டங்கள் மாற்றப்படலாம், கடுமையாக்கப்படலாம், மேம்படுத்தப்படலாம். ஆனால், அவை நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதுதான் முக்கியம். இந்த அவலம் தொடரும்வரை, இந்தியா வளர்ச்சி அடைவதாகவோ, நாகரிக சமுதாயமாக மாறிவிட்டதாகவோ பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com