ராணுவத்தின் உடனடித் தேவை!

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கத்தை சீனா எதிர்க்கத் தொடங்கியிருக்கிறது.

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கத்தை சீனா எதிர்க்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல் சீனா தனது கடற்படையை வலுப்படுத்தத் தொடங்கி அதற்காக நீர் மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் என்று தன்னை பலம் மிக்கதாக்கி வருகிறது. கடந்த ஆண்டு டோக்காலாமில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலையைத் தொடர்ந்து, சீனா தன்னுடைய விமானப் படையையும், காலாட் படையையும் வலுப்படுத்தி வருவதாகத் தெரிகிறது.
இந்தியாவின் ராணுவத்துக்கான ஒதுக்கீடு சீனாவின் ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை என்றாலும்கூட, உலகில் அதிகமாக ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்யும் ஐந்தாவது நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது. 2016-இல் 51.1 பில்லியன் டாலராக (ரூ.3.32 லட்சம் கோடி) இருந்த இந்தியாவின் ராணுவத்துக்கான ஒதுக்கீடு 2017-இல் 52.5 பில்லியன் டாலராக (ரூ.3.41 லட்சம் கோடி) அதிகரித்திருக்கிறது.
ஆனாலும்கூட, ஏனைய வல்லரசுகளை ஒப்பிடும்போது இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக கூறிவிட முடியவில்லை. ராணுவ தளவாடங்களில் குறைபாடு, உதிரி பாகங்கள் இல்லாமை, ராணுவ முகாம்களுக்கு இடையேயான தளவாடங்கள் மற்றும் படைகளின் விரைவான இடமாற்றம் இல்லாமை ஆகியவை இந்திய ராணுவத்தின் வலிமையைக் கடுமையாக பாதிக்கிறது. 
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத்துக்கான தளவாடங்களையும், தேவைகளையும் வாங்குவதிலும், உற்பத்தி செய்வதிலும் பல தடைகள் காணப்படுகின்றன. பல்வேறு ராணுவத் தளவாடங்கள் குறித்த கோரிக்கைகள் தேவைகளுக்கேற்ப முப்படைகளாலும் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலும் கிடைத்தும்கூட, அவை வாங்கப்படவோ, உற்பத்தி செய்யப்படவோ இயலாமல் அமைச்சகத்தின் சிவப்பு நாடா கோப்புகளில் முடங்கிப் போய்விடுகின்றன. இந்த நிலையை மாற்றியாக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரும், இப்போதைய பாதுகாப்பு அமைச்சரான நிர்மலா சீதாராமனும் முனைப்புடன் செயல்பட முயன்றும்கூட, முந்தைய அரசுகளைப் போலவே இந்த அரசும் ராணுவத்துக்கான தளவாடங்களை முறையாகப் பெற்று இந்தியாவின் முப்படைகளை வலுப்படுத்தும் முயற்சியில் வெற்றி காணவில்லை.
இதற்கு மூன்று முக்கியமான காரணிகள் இருக்கின்றன. முதலாவது காரணி, பாதுகாப்பு அமைச்சகத்தில் காணப்படும் நிர்வாக மெத்தனம். முப்படைகளின் தேவைகளை அறிந்து உடனடியாக எந்தவொரு தளவாடத்தையும் வாங்க அனுமதிப்பதில்லை என்பதில் அதிகாரிகள் தீர்மானமாக இருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் தளவாடங்கள் வாங்குவதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் 10 விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் குறிப்பிட்ட காலவரம்பிற்குள் நிறைவேறியிருக்கின்றன. சாதாரணமாக இருப்பதைவிட ஆறு மடங்கு அதிகமான நேரம் ஒப்பந்தப்புள்ளி அளவிலேயே கடந்து விடுகிறது. யாரும் பொறுப்பேற்க தயாராக இல்லாத காரணத்தால், நிர்வாக முறைகளும், அதிகாரிகளின் மெத்தனப்போக்கும் தளவாடங்கள் வாங்குவதை தள்ளிப்போடுவதிலேயே முனைப்புக் காட்டுகின்றன.
இரண்டாவது பிரச்னை, நிதியாதாரம். ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம் உள்ளிட்ட பிரச்னைகள் நிதியமைச்சகத்தின் ஒதுக்கீட்டை கபளீகரம் செய்துவிடுகின்றன. போதாக்குறைக்கு ராணுவ அமைச்சகத்தில் தேவைக்கு அதிகமான கணக்கர்களும், நிர்வாக ஊழியர்களும் சம்பளம், ஓய்வூதியம் என்று ஒதுக்கீட்டில் பெரும் பகுதியை எடுத்துக்கொண்டு விடுகின்றனர். 2018-19இல் ராணுவ அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் 56% முப்படைகளுக்கோ, தளவாடங்களுக்கோ செலவிடப்படாமல் ஊழியர்களுக்கு ஊதியமாகவும் ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது. இது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 12% அதிகம். முப்படைகளை நவீனப்படுத்துவதற்கான ஒதுக்கீடு கடந்த ஏழு ஆண்டுகளில் 26%-திலிருந்து 18%-ஆகக் குறைந்திருக்கிறது.
மூன்றாவது பிரச்னை, ராணுவ தளவாடங்களின் உள்நாட்டு உற்பத்தி. ஒவ்வோர் அரசும் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று விரும்பினாலும் அந்த முயற்சி வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. அரசு நடத்தும் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், ஒன்று, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த பாகங்களைக் கொண்டு தளவாட உற்பத்தி செய்கின்றன. அல்லது, தரம் குறைந்த தளவாடங்களை உற்பத்தி செய்கின்றன. இவை இரண்டுமே இந்திய ராணுவத்தின் வலிமைக்கு சவாலாக இருக்கிறதே தவிர, வலு சேர்ப்பதாக இல்லை.
உலக அளவில் ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் ஊழல் என்பது தவிர்க்க முடியாதது. அது சீனாவானாலும், அமெரிக்காவானாலும், சர்வாதிகார நாடானாலும் ஜனநாயக நாடானாலும் இதில் மாற்றம் இல்லை என்பதுதான் உண்மை. அதே நேரத்தில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் ராணுவ தளவாடங்கள் தரமாக இருக்கின்றனவா, தேவைக்கு ஏற்றவைதானா என்பதுதான் எந்தவொரு நாடும் கவனத்தில் கொள்ள வேண்டிய செயல்பாடு.
ரூ.64 கோடி ஊழல் குற்றச்சாட்டை எழுப்பிய போஃபர்ஸ் பீரங்கிகள்தான், கார்கில் போரில் இந்தியாவின் வெற்றிக்குத் துணை நின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ராணுவ தளவாடம் வாங்குவதில் ஊழல் குற்றச்சாட்டு எழுமோ என்கிற அச்சத்தில் தளவாடங்களே வாங்காமல், முப்படைகளை நவீனப்படுத்தாமல் தள்ளிப்போடுவதுதான் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். இதை ஆளும் கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும் உணர்ந்து இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதுதான் உண்மையான தேச நலன் கருதிய அணுகுமுறை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com