அச்சமா இல்லை ராஜதந்திரமா?

கடந்த வாரம் மத்திய அமைச்சரவைச் செயலரிடமிருந்து மத்திய அரசின் எல்லா மூத்த அதிகாரிகளுக்கும் முக்கியமானவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் மத்திய அமைச்சரவைச் செயலரிடமிருந்து மத்திய அரசின் எல்லா மூத்த அதிகாரிகளுக்கும் முக்கியமானவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்படி, தலாய் லாமா கலந்து கொள்ளும் எந்த நிகழ்விலும் அதிகாரிகளோ, முக்கியமான தலைவர்களோ கலந்து கொள்வதோ, தொடர்பு கொள்வதோ தவிர்க்கப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான இரு தரப்பு உறவு மிகவும் தெளிவில்லாத பதற்ற நிலையில் இருப்பதால் தலாய் லாமா தொடர்பான எந்த ஒரு நிகழ்விலும் இந்திய அரசு தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதுதான் அந்தக் குறிப்புக்கான பின்னணி.
சில நாள்களுக்கு முன்னால் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், டோக்கா லாம் பகுதியில் சீனா மீண்டும் ராணுவ ஊடுருவலுக்குத் தயாராகி வருவதை மறுப்பதற்கில்லை என்று அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே டோக்கா லாம் பகுதியில் ஏற்பட்ட தொடர் பதற்ற நிலை தணிந்தபோது பிரச்னை அத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்தால், அது மாயத் தோற்றம் என்பது இப்போது வெளியாகியிருக்கிறது. இதன் பின்னணியில்தான் மத்திய அமைச்சரவைச் செயலரின் சுற்றறிக்கையை நாம் பார்க்க வேண்டும்.
டோக்கா லாம் பகுதியில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்பட இருக்கும் சூழலில், இந்தியா நோபல் சமாதானப் பரிசு பெற்ற தலாய் லாமாவைப் புறக்கணிக்கும் விதத்தில் இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது நிச்சயமாக சீனாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். இந்தியா அடிபணிகிறது என்கிற தோற்றத்தை சீனாவின் வெளி விவகார நோக்கர்கள் மத்தியில் கட்டாயம் ஏற்படுத்தக்கூடும். இதைத்தான் நீண்ட காலமாக சீனா எதிர்பார்த்தும், வலியுறுத்தியும் வந்திருக்கிறது.
இப்போது 14-ஆவது தலாய் லாமாவாக இருக்கும் தென்ஜின் கியாட்úஸா பெளத்தர்களுக்கும், குறிப்பாக திபெத்தியர்களுக்கும் மிக முக்கியமான ஓர் அடையாளம். திபெத்தை கம்யூனிஸ சீனா தனது முழுக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முற்பட்டபோது, 1959-இல் திபெத்திலிருந்து கால்நடையாக இமய மலையைக் கடந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் தலாய்லாமா. சீனா அன்று முதல் இன்று வரை திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவை ஒரு பிரிவினைவாதியாகவும் கம்யூனிஸ சீனைவைப் பிளவுபடுத்த சதித் திட்டம் வகுப்பவராகவும் கருதுகிறது.
பலமுறை இந்தக் குற்றச்சாட்டை தலாய் லாமா மறுத்துவிட்டிருக்கிறார். சீனாவுடன் நல்லுறவு பேண விரும்பும் தனது நோக்கத்தைப் பொது வெளியில் வெளிப்படுத்தி இருக்கிறார். தங்களது பெளத்த மதக் கலாசாரத்தையும் திபெத்திய பண்பாடுகளையும் பாதுகாக்கும் விதத்திலான சுயாட்சி உரிமையுடன் கம்யூனிஸ சீனாவின் அங்கமாக திபெத் தொடர்வதைத்தான் தாங்கள் விரும்புவதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். ஆனாலும்கூட அதை ஏற்றுக்கொள்ள சீனா தயாராக இல்லை. 
உலக நாடுகள் தலாய் லாமாவை வரவேற்பதையோ, அவருக்கு மரியாதை கொடுப்பதையோ சீனா வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை எந்த வெளிநாட்டுத் தலைவர் சந்திப்பதும் சீனாவுக்கு எரிச்சல் ஊட்டுகிறது.
1959-இல் இளைஞராக இந்தியாவுக்குத் தலாய்லாமா தப்பி ஓடிவந்தபோது, அன்றைய ஜவாஹர்லால் நேரு அரசு அவருக்கு அடைக்கலம் அளித்தது என்னவோ உண்மை. அதே நேரத்தில், இந்தியாவில் அடைக்கலம் புகுந்த தலாய் லாமா எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் இந்திய மண்ணிலிருந்து ஈடுபட மாட்டார் என்கிற உறுதியை அவரிடமிருந்து பெற்றது. அதைத் தொடர்ந்து இன்று வரை தலாய் லாமாவும் தன்னுடைய மதம் சார்ந்த எல்லைக்கு வெளியே எந்தவிதச் செயல்பாட்டிலும் ஈடுபட்டதில்லை.
அப்படி இருக்கும்போது, மத்திய அமைச்சரவைச் செயலரால் இப்படியொரு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழுகிறது. உயர்மட்டத்திலிருந்து அனுமதியோ, உத்தரவோ இல்லாமல் மத்திய அமைச்சரவைச் செயலர் இந்த ஆணையைப் பிறப்பித்திருக்க வழியில்லை. சீனாவைத் திருப்திப்படுத்தும் வகையிலான இப்படியொரு நிலைப்பாடு எதற்காக எடுக்கப்படுகிறது என்பது புரியவில்லை.
சீனாவுக்கான இந்தியத் தூதராக இருந்து இப்போது இந்தியாவின் வெளிவிவகாரத் துறையின் செயலராகி இருப்பவர் கடந்த மாதம் பெய்ஜிங்கில் சீனாவின் வெளி விவகாரத் துறை அமைச்சர் வாங்யீயை சந்தித்தபோது, அவர் இந்தியா புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாகத் தெரிகிறது. அதன் விளைவுதானா அமைச்சரவைச் செயலரின் அறிவிக்கை என்கிற ஐயப்பாடு எழுகிறது.
ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் நடக்கும் ஷாங்காய் கூட்டுறவு நிறுவன உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார். அப்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பொதுப் பிரச்னைகளையும், இரு நாட்டு உறவு குறித்தும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் கலந்துரையாட இருக்கிறார். அதன் முன்னோடி நடவடிக்கையாக சீனாவைத் திருப்திப்படுத்தவும், சமாதானப்படுத்தவும் தலாய் லாமாவை இந்தியா தனிமைப்படுத்த முயற்சிக்கிறதா என்று புரியாமல் வெளி விவகாரத் துறை நோக்கர்கள் தடுமாடுகிறார்கள்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நட்புறவு நிலவ வேண்டும் என்பதிலும் கருத்து வேறுபாடுகள் ஆக்கப்பூர்வமான முறையில் அகற்றப்பட வேண்டும் என்பதிலும், மாறுபட்ட கருத்து இல்லை. அதே நேரத்தில், சீனாவின் அச்சுறுத்தலுக்குப் பயந்து இந்தியாவில் அடைக்கலம் தேடியிருக்கும் சமாதானத்தின் சின்னமான ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை விட்டுக்கொடுக்கவோ, தனிமைப்படுத்தவோ முயல்வது, இந்தியாவின் தன்மானத்துக்கும் கெளரவத்துக்கும் இழுக்கு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com