பார்வை தவறு!

மத்திய பணியாளர் தேர்வாணையம்

மத்திய பணியாளர் தேர்வாணையம், அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி அதன் மூலம் உயர் அரசு பதவிகளுக்கான நியமனங்கள் செய்யப்படுகின்றன. அரசுத் துறை தேர்வுகளின் முதல் கட்டத் தேர்வில் ஒருவர் பெறும் மதிப்பெண்கள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
நீதிபதிகள் ஏ.கே. கோயல், யூ.யூ. லலித் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் வாதங்களை ஏற்று முதல் கட்டத் தேர்வுகளில் (பிரிலிமினரி) ஒருவர் பெறும் மதிப்பெண்கள் குறித்துத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்வி கேட்க முடியாது என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். பொதுத் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையை அடிக்கடி வலியுறுத்தும் உச்ச நீதிமன்றம், தன்னுடைய கருத்துக்கு மாறாகத் தீர்ப்பை வழங்கியிருப்பது ஏன் என்பது புரியவில்லை? இதற்கு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கின்ற மத்திய பணியாளர் தேர்வாணையம் கூறியிருக்கும் காரணம் விசித்திரமாக இருக்கின்றது.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்பது அரசுத் துறையின் திறமையான செயல்பாட்டுக்கும், நிதியாதாரத்தை கவனமாகக் கையாள்வதிலும், மிகவும் முக்கியமான தகவல்களில் ரகசியத்தைக் காப்பதிலும் ஊறுவிளைவிக்காமல் இருக்க வேண்டும். இந்த வாதத்தைக் காரணம் காட்டித்தான் உச்ச நீதிமன்ற அமர்வு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழிலான உரிமையை மறுத்திருக்கிறது. 

மத்திய பணியாளர் தேர்வாணையம் 2010}இல் நடத்திய இந்திய அரசுப் பணி அதிகாரிகளுக்கான தேர்வில் தேர்ந்தெடுக்கப்படாத மாணவர்கள் சிலர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் தங்களுக்குக் கிடைத்திருக்கும் மதிப்பெண்கள் குறித்த தகவலை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரினார்கள். அவர்களது கோரிக்கையை தில்லி உயர் நீதிமன்றம் ஏற்று ஒவ்வொரு பாடத்திற்குமான தேர்வுக்கான அதிகபட்ச மதிப்பெண் (கட்ஆப் மார்க்), தேர்ந்தெடுக்கும் முறை, விடைகளின் மாதிரி, தேர்வில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் அதைக் கோருபவர்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. 

இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத மத்திய பணியாளர் தேர்வாணையம், தீர்ப்புக்குத் தடை பெற்றது மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தது. அந்த மேல்முறையீட்டில்தான் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 

2011}இல் உச்ச நீதிமன்றம் இதுபோன்ற இன்னொரு பிரச்னையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் தேர்வெழுதியவர்களுக்கு அவரது விடைத்தாளை வழங்கியாக வேண்டும் என்று ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு வழக்கு அது. பொதுத் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை மிகமிக முக்கியம் என்றும், தேர்வு முடிவுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது என்பது தேர்வு முறைமீதான மக்கள் நம்பிக்கையைக் குலைக்கும் என்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்துப் பல்வேறு பொதுத் தேர்வாணையங்கள் செய்த மேல்முறையீட்டில்தான் கொல்கத்தா உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஆமோதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரசின் பல்வேறு பொதுத்துறை நிர்வாகத்தினரால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளில், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு என்பது மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்குக் காரணம், இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் இந்திய அரசின் பல்வேறு முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றி, தலைமைச் செயலர், மத்திய அரசு செயலர், அமைச்சரவை செயலர், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் என்று பல்வேறு தலைமைப் பதவிகளை வருங்காலத்தில் வகிக்க இருப்பவர்கள். அப்படிப்பட்ட நிலையில் அதுபோன்ற பதவிகளுக்கான மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியது அவசியம் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம், கொல்கத்தா உயர் நீதிமன்றம், 2011}இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை புறம்தள்ளும் விதத்தில் இப்படியொரு தீர்ப்பை வழங்கியிருப்பது ஏன் என்று புரியவில்லை.

இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. வெளிப்படைத்தன்மையும் பொறுப்பேற்பும் (அக்கவுன்டபிலிடி) ஒருபுறமும், தன்னிடமுள்ள நிதியாதாரத்தை கவனமாக செலவிடலும் முக்கியமான தகவல்களில் ரகசியத்தன்மை காப்பதும் மறுபுறமும் வைத்துப் பார்க்கும்போது இரண்டாவதுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்று அந்த அமர்வு கூறியிருக்கிறது. இது தவறான பார்வை என்று சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

தேர்வு முடிவுகள் குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாமல் போனால், தேர்வாணையத்துக்கு எந்தவிதமான பொறுப்பேற்பும் இல்லாமல் போவதுமட்டுமல்ல, கேள்வி கேட்க முடியாத சூழலில் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புக்கு இடமளிப்பதாக அமையும். இதை உச்ச நீதிமன்றம் புரிந்துகொள்ளாமல் இல்லை. 

அது குறித்த புகார் எழுப்பப்படுமானால் அதை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறது. ஒவ்வொரு முறையும் தேர்வு எழுதும் ஒவ்வொருவரும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் தங்களுக்கு சரியான மதிப்பெண் தரப்படவில்லை என்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட முடியுமா? இந்த மேல்முறையீடே எட்டு ஆண்டுகள் எடுத்திருக்கும்போது, நீதிமன்றப்படிகளில் அந்த இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை வீணாக்குவது நியாயம்தானா? 

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அவர்கள் கோரிப் பெறக்கூடிய தேர்வு குறித்த விவரங்களுக்காக நீதிமன்றங்களை நாட வைப்பது சரியல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com