இதுவல்லவா நாகரிகம்!

மும்பை நகரவாசிகளால் தங்களது கண்களை நம்ப முடியவில்லை. அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, சிவப்புக் குல்லாயுடன், சிவப்புக் கொடி தாங்கிய ஆயிரக்கணக்கான விவசாயிகள்

மும்பை நகரவாசிகளால் தங்களது கண்களை நம்ப முடியவில்லை. அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, சிவப்புக் குல்லாயுடன், சிவப்புக் கொடி தாங்கிய ஆயிரக்கணக்கான விவசாயிகள் அமைதியாக சாலையில் ஊர்வலமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் எந்தவிதத் தொந்தரவும் இல்லை. அதே நேரத்தில், அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்துத் தங்களது கோரிக்கையை ஆணித்தரமாக வலியுறுத்தவும் முற்பட்டார்கள்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலிருந்து தொடங்கி 180 கிமீ தூரம் ஐந்து நாட்கள் நடந்து கடந்து, 35,000-க்கும் அதிகமான விவசாயிகள் மும்பை ஆசாத் மைதானத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காகக் கூடியபோது, மும்பையும், மகாராஷ்டிர மாநிலமும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே அவர்களை வியந்து நோக்கியது.
கடந்த திங்கள்கிழமை, மகாராஷ்டிர மாநில அரசு அவர்களது கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்று, அந்தப் போராட்டத்துக்குத் தற்காலிக முடிவை ஏற்படுத்தியது என்றாலும், அந்த விவசாயிகள் முன்வைத்திருக்கும் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு எட்டப்படவில்லை. இந்த விவசாயிகளின் வேளாண் இடர்பாடு என்பது வெறும் கடன் தள்ளுபடியால் தீர்ந்துவிடும் பிரச்னை அல்ல 
என்பதை இந்தப் போராட்டம் வெளிப்படுத்தியது.
கடந்த ஜூன் மாதம் முதல் இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் நடந்த வண்ணம் இருக்கின்றன. வறட்சி, எதிர்பார்த்த அளவில் அமையாத பருவமழை உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால், நாடு தழுவிய அளவில் வேளாண் இடர்பாடு ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா என்று பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது மட்டுமல்ல, இப்போதும் தொடர்கிறது என்பதுதான் எதார்த்த நிலைமை.
இதற்கு முன்னால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்துக்கும் இப்போது மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற இந்த விவசாயிகளின் பேரணிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவருமே செழிப்பான பகுதிகளில் உள்ள விவசாயிகள், நில உடைமையாளர்கள். இந்த விவசாயிகள் அப்படிப்பட்டவர்கள் அல்ல.
மேற்கு மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசத்தில் மாண்ட்செளர், ரட்லாம், ராஜஸ்தானில் ஹடோதி, ஷெகாவதி, தமிழ்நாட்டில் காவிரி டெல்டா என்று நன்றாக விளைச்சல் உள்ள பகுதிகளில் போதுமான பாசன வசதி இல்லாமல் போனதாலோ, அதிகரித்த விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்காததாலோ, விவசாயிகள் போராடினார்கள். இன்னும் சிலர் விவசாயக் கடன் தள்ளுபடிக்காகப் போராடியவர்கள். அப்படிப் போராடியவர்கள் அனைவருமே மராட்டா, ஜாட் உள்ளிட்ட வேளாண் ஜாதிப் பிரிவினர்.
ஆனால், கடந்த திங்கள்கிழமை மும்பை ஆசாத் மைதானத்தில் கூடிய விவசாயிகள் அவர்களிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டவர்கள். இவர்கள் அனைவருமே ஏழைப் பழங்குடியினர். மல்கர், தாணே, நாசிக், துலே உள்ளிட்ட ஆதிவாசிப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினர் இந்த விவசாயிகள். மகாராஷ்டிர மாநிலத்தின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த இந்த விவசாயிகளின் பிரச்னைகளும் கோரிக்கைகளும், ஏனைய விவசாயிகளின் கோரிக்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இந்தப் போராளிகளின் கோரிக்கைகளும் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விளைபொருள்களுக்கு 50% அதிகரித்த விலை நிர்ணயம் செய்வது, விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வது போன்றவைதான் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், இவர்களது கோரிக்கையே வேறு. இவர்கள் நிவாரணம் பெறுவதற்காகப் போராடவில்லை. தங்களது உரிமைகளைக் கோரிப் போராடுகிறார்கள்.
இந்தப் பழங்குடியினர், மலைவாழ் மக்கள், இவர்கள் வாழும் மலைப்பகுதிகளில் பல தலைமுறைகளாகப் பாரம்பரியமாக விவசாயம் செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஆனால் அந்த நிலங்களுக்கான எந்த உரிமையும் இவர்களிடம் கிடையாது. அதன் உரிமை வனத் துறையிடம்தான் இருக்கிறது. தங்களுக்குப் 'பட்டா' இல்லாததால், அந்த நிலத்தில் பயிரிடுவதற்காக எந்தவொரு வங்கியிலும் இவர்கள் கடன் பெற முடியாது. அதனால் கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி ஆகியவற்றால் எல்லாம் இவர்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை.
நிலத்தின் உரிமை இல்லாததால் இந்த ஏழை பழங்குடி விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்கி வறுமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். 2006-ஆம் ஆண்டு இயற்றிய வன உரிமைச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுமானால், இந்த நிலமில்லா ஆதிவாசி விவசாயத் தொழிலாளர்கள், தாங்கள் பாரம்பரியமாகப் பயிர் செய்து கொண்டிருக்கும் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக முடியும். அதைத்தான் அவர்கள் கோருகிறார்கள். மகாராஷ்டிர அரசு அடுத்த ஆறு மாதங்களில் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எதிர்பார்த்து இப்போதைக்கு அவர்கள் கலைந்து சென்றிருக்கிறார்கள்.
பழங்குடியினர், ஆதிவாசிகள் என்றெல்லாம் நாம் அழைக்கிறோம். படித்த பட்டணத்து நாகரிக மனிதர்களைவிட எவ்வளவு அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் ஜனநாயக ரீதியாகத் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திவிட்டுக் கலைந்து போயிருக்கிறார்கள். இவர்களா ஆதிவாசிகள்? இவர்களுக்கா நாகரிகம் இல்லை?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com