தவிர்த்திருக்க முடியும்!

தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் நடந்திருக்கும் துயரச் சம்பவம் தமிழகத்தின் மனசாட்சியையே உலுக்கிப்போட்டிருக்கிறது.

தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் நடந்திருக்கும் துயரச் சம்பவம் தமிழகத்தின் மனசாட்சியையே உலுக்கிப்போட்டிருக்கிறது. போதிய கவனமும் முன்னேற்பாடுகளும் எச்சரிக்கையும் இருந்திருந்தால் இப்படியொரு துயரச் சம்பவம் நேர்ந்திருக்காது. இத்தனை உயிர்கள் மடிந்திருக்காது. 
மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக சில பெண்கள் உள்ளிட்ட சென்னை மலையேற்ற மகிழ் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 39 பேரை ஈரோட்டிலுள்ள பயிற்சி மையத்தினர் மலையேற்றத்திற்காகக் குரங்கணி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இவர்களில் பெண்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. அந்தக் குழுவில் இருந்த 12 பேர் காட்டுத் தீயில் சிக்கி கருகிச் சாம்பலாகி இருக்கிறார்கள். இன்னும் பலர் மருத்துவமனைகளில் தீக்காயங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 
உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் மலையேற்றக் குழுக்கள் இருக்கின்றன. இதற்கென பயிற்சி அளிப்பதற்கு பயிற்சியாளர்களும் இருக்கிறார்கள். இமயமலை உள்ளிட்ட எல்லா மலைகளிலும் மலையேற்ற சாகசத்தில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் அவ்வப்போது விபத்தில் சிக்குவது புதிதல்ல. அவையெல்லாம் மலை ஏறும்போது ஏற்படும் பிரச்னைகளால் எழும் விபத்துகளே அல்லாமல், இதுபோல எதிர்பாராத விபத்து அல்ல.
சென்னையிலிருந்து 27 பேர், ஈரோட்டிலிருந்து 12 பேர் என இரு குழுக்களும் இணைந்து 39 பேர் தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்ற சாகசத்திற்குத் தயாரானார்கள். மார்ச் 11-ஆம் தேதி காலையில் கொழுக்கு மலையிலிருந்து குரங்கணிக்கு இறங்கி, ஒத்தை மரம் என்ற இடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் இந்த எதிர்பாராத காட்டுத் தீ விபத்து நேர்ந்திருக்கிறது. 
அதற்கு முந்தைய ஒரு வாரமாக தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் ஆங்காங்கே காட்டுத் தீ ஏற்பட்டு வருவதாக ஏற்கெனவே தகவல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பிப்ரவரி மாதம் தொடங்கி வனப்பகுதிகளில் இலைகள் வெயிலால் கருகத் தொடங்கும்போது அவ்வப்போது காட்டுத் தீ ஏற்படுவது ஆண்டுதோறும் வழக்கமாகவே இருந்து வருகிறது. பிப்ரவரி முதல் ஜூன், ஜூலையில் மழை வரும்வரை இதுபோன்ற காட்டுத் தீ ஏற்படுவது என்பது கேரள, தமிழ்நாடு எல்லையிலுள்ள வனப்பகுதிக்கு புதியதல்ல. 
இதெல்லாம் தெரிந்திருந்தும் மலை ஏறுவதில் பயிற்சியும் மலையேற்றத்திற்கு குழுக்களை அழைத்துச் செல்லும் பழக்கமும் உள்ள ஈரோடு மலையேற்ற சுற்றுலா நிறுவனம் ஏன் இந்த நேரத்தில் இந்த முயற்சியில் இறங்கியது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இந்திய வனப்பகுதியில் 59 சதவீதம் காடுகள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் எச்சரிக்கைப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகள் குறித்த விவரங்களைத் தொலையுணர்வு செயற்கைக்கோள் மூலம் (ரிமோட் சென்ஸிங்) அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமும், இந்திய தேசிய தொலையுணர்வு மையமும் தொடர்ந்து கண்காணித்து வனத்துறைக்கு காட்டுத் தீ குறித்த விவரங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. தொலையுணர்வு எச்சரிக்கைகளை வனத்துறை முறையாகப் பின்பற்றி வந்திருக்குமேயானால், மலையேற்ற சுற்றுலாவுக்குப் போன குழுவினரைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.
காடுகள் குறித்தும் வனப்பகுதியில் மனிதர்களின் செயல்பாடுகள் குறித்தும் சட்ட திட்டங்கள் இருக்கின்றன. அந்த சட்ட திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்தும் அவை போதுமானவையா என்பது குறித்தும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மாறுபட்ட காலச்சூழலில் இன்னும் நாம் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் இயற்றிய சட்ட திட்டங்களைத்தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனாலேயே வனத்துறையினர் மத்தியில் இதுபோன்ற மலையேற்றக் குழுவினருடைய செயல்பாடுகள் குறித்துப் போதுமான எச்சரிக்கை உணர்வோ, புரிதலோ இல்லாமல் இருக்கிறது.
இப்போதுதான் மத்திய அரசு மூங்கிலை வனச் சட்டத்திலிருந்து அகற்றி, யார் வேண்டுமானாலும் பயிரிட்டுக் கொள்ளலாம், வர்த்தகம் செய்யலாம் என்று அறிவித்திருக்கிறது. பெரும்பாலான காட்டுத் தீக்களுக்கு மூங்கில் ஒன்றோடு ஒன்று உரசுவதும் காரணமாக இருக்கிறது. அதேபோல, வனப்பகுதியில் மரக் கொள்ளையர்கள் தங்கள் வசதிக்காக புல்லுக்கும் சருகுகளுக்கும் தீ வைக்கும் 
பழக்கம் காணப்படுகிறது. புகை பிடிக்கும் வனச்சுற்றுலாப் பயணிகள் தூக்கியெறியும் தீக்குச்சி, சிகரெட் பீடி துண்டுகள் கோடைக்காலத்தில் காய்ந்து கிடக்கும் சருகுகளில் விழுந்து பெரும் காட்டுத் தீக்குக் காரணமாகிவிடுகின்றன. இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல இந்திய வனச் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்.
குரங்கணி வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது என்கிற காரணத்துக்காக ஒரேயடியாக இனிமேல் மலையேற்ற சுற்றுலாவோ, வனப்பகுதியில் மனித நடமாட்டமோ கூடாது என்று தடுத்துவிட முடியாது. அதேநேரத்தில், இந்த விபத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம், ஏராளம் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான பாடங்கள் இரண்டு. 
முதலாவது, மலையேற்ற சாகசத்தில் ஈடுபடுபவர்கள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்வது. இரண்டாவது, வட்ட, மாவட்ட மருத்துவமனைகளும் போதுமான அவசர சிகிச்சைகளுக்குத் தயாராக இருக்கும் அளவில் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பது. இவை இரண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தால், இப்போதைய அளவிலான உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் குறைத்திருக்க முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com