திருப்பமா? திருத்தமா? 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 84-ஆவது கூட்டம் சில முக்கியமான செய்திகளை முன்வைத்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுதில்லியில் நடந்த இரண்டு நாள் கூட்டத்தில்,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 84-ஆவது கூட்டம் சில முக்கியமான செய்திகளை முன்வைத்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுதில்லியில் நடந்த இரண்டு நாள் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இக்கட்டான அரசியல் சூழலை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைஏற்றுக்கொண்டிருப்பது மிகப்பெரிய மனநிலை மாற்றம்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத எண்ணிக்கை வீழ்ச்சியை காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள நேர்ந்ததைத் தொடர்ந்து, கட்சியில் பரவலாகச் சோர்வும், தோல்வி மனப்பான்மையும், தன்னம்பிக்கையின்மையும் காணப்படுவது என்னவோ உண்மை. கடந்த ஆண்டு நடந்த குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சிறிதளவு உற்சாகமும், மீண்டும் புத்துயிர் பெறமுடியும் என்கிற நம்பிக்கையும் துளிர்விட்டிருக்கிறது. ராஜஸ்தானில் நடந்த இடைத்தேர்தல் முடிவும் காங்கிரஸின் நம்பிக்கைக்கு வலுசேர்த்தது. 
இந்தப் பின்னணியில்தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் தில்லியில் கூடியது. அதற்கு ஒருவாரத்திற்கு முன்பு சோனியா காந்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்கிற முறையில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்தளித்தார். அந்த விருந்தின் நோக்கம், தனது தோழமைக் கட்சிகளைச் சிதறவிடாமல் கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்வதுடன், பாஜகவுக்கு எதிரான அணியை பலப்படுத்துவது என்பதுதான். 
2019-இல் காங்கிரஸ் எதிர்கொள்ள இருக்கும் சவால், முன்பு 2004-இல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்றியதைவிட மிகவும் கடுமையாக இருக்கும் என்பது சோனியா காந்திக்குத் தெரியாமல் இருக்காது. கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்கள் காங்கிரஸையும் இடதுசாரிகளையும் பின்னுக்குத் தள்ளி, மாநிலக் கட்சிகளை வலுவடையச் செய்திருக்கின்றன. இதுவும் சோனியா காந்திக்குத் தெரியாமல் இருக்க நியாயமில்லை.
தில்லியில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் சோனியா காந்தி பேசும்போது, 1997 'பஞ்ச் மரி' தீர்மானம் குறித்துப் பேசியதற்கு ஒரு பின்னணி உண்டு. 1997-இல் முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் பஞ்ச் மரி என்ற ஊரில் கூடி மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தனர். அதன் விளைவாகத்தான் வாஜ்பாய் தலைமையில் தேசிய
ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தது. 
2003-இல் சோனியா காந்தி தலைமையில் சிம்லாவில் கூடிய காங்கிரஸ் தலைவர்கள், 1997-பஞ்ச் மரி தீர்மானத்தைப் புறந்தள்ளி, தனியாகப் போட்டியிடாமலே தேர்தலில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்று முடிவெடுத்தனர். அதன் விளைவுதான் 2014 மக்களவைத் தேர்தல் வெற்றி. 
இப்போது தில்லி மாநாட்டில் பழைய வரலாற்றை சோனியா காந்தி மீள் பார்வை செய்ததன் நோக்கம், மாநிலக் கட்சிகளுடன் நெருக்கமான உறவையும் கூட்டணியையும் வலுப்படுத்துவது என்பதாக இருந்தால் வியப்படையத் தேவையில்லை. 
'ஆட்சியைப் பிடிப்பதற்காக மட்டும் காங்கிரஸ் போராடுகிறது என்கிற கருத்து ஏற்படுமானால், இந்த நாடு காங்கிரஸ் கட்சியைத் தண்டித்துவிடும்' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், கூட்டணியின் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார் என்பதாகக் கூட பொருள் கொள்ளலாம்.
ஏற்கெனவே மாநிலக் கட்சிகளான தெலுங்கு தேசம் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்டவை மாநிலக் கட்சிகளின் மூன்றாவது அணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும், நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் மறைமுகக் கூட்டணியை அமைத்துக் கொண்டனரே தவிர, காங்கிரஸை இணைத்துக் கொள்ளவில்லை. காங்கிரஸும் இணைந்து செயல்பட முன்வரவில்லை. இடதுசாரிகளும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸுடனான கூட்டணி வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறது. 
இப்படிப்பட்ட சூழலில் எந்த அளவுக்குக் காங்கிரஸ் தலைமையிலோ அல்லது காங்கிரஸை உள்ளடக்கியோ ஒரு கூட்டணி உருவாகும் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை மம்தா பானர்ஜியோ, அகிலேஷ் யாதவோ, மாயாவதியோ, சந்திரபாபு நாயுடுவோ, சந்திர சேகர ராவோ, ராகுல் காந்திக்கு விட்டுக்கொடுப்பார்களா என்பது சந்தேகம்தான் எனும்போது, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக 2004-இல் அமைந்தது போல வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணி அமையுமா என்கிற கேள்வி முன்நிற்கிறது.
கூட்டணிப் பிரச்னை ஒருபுறம் இருக்க, தில்லியில் கூடிய இரண்டு நாள் காங்கிரஸ் கட்சி மாநாடு கட்சியை வலுப்படுத்த சூளுரைத்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது முதல் கடமையாகத் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே இருக்கும் தடைகளையும் மனத்தடைகளையும் உடைத்தெறிந்து, அடிமட்டத் தொண்டனுக்குக் கட்சியில் மரியாதை ஏற்படுத்துவது என்று அறிவித்திருக்கிறார். பேசுவதற்கு நன்றாக இருந்தாலும் கடந்த அரை நூற்றாண்டு காலமாக உட்கட்சித் தேர்தலே முறையாக நடக்காமல் நியமனங்கள் மூலம் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியில் இது சாத்தியப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பாஜகவின் மீதும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் மீதும் மக்கள் மத்தியில் பரவலாகவே அதிருப்தி காணப்பட்டாலும் அது எந்த அளவுக்குக் காங்கிரஸுக்கு சாதகமாக மாறும் என்று இப்போதே சொல்லிவிட முடியாது.
காங்கிரஸுடன் இடதுசாரிகள் சேர மாட்டார்கள், இடது சாரிகளுடன் மம்தா கைகோக்க மாட்டார், மாநிலக் கட்சிகள் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்றுக்கொள்ளாது என்று, புலி - ஆடு- புல்லுக்கட்டுக் கதையாக எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும்வரை பாஜகவுக்குக் கொண்டாட்டம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com