இந்தியாவும் புதினின் வெற்றியும்!

நான்காவது முறையாக ரஷிய அதிபராக விளாதிமீர் புதின் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எதிர்பாராததல்ல

நான்காவது முறையாக ரஷிய அதிபராக விளாதிமீர் புதின் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எதிர்பாராததல்ல. மிகப்பெரிய மாற்றங்களை ரஷியா எதிர்கொள்ளும் நிலையில் அடுத்த ஆறு ஆண்டு
களுக்கு புதினிடம் மக்கள் கிரெம்ளினின் அதிகாரத்தை வழங்கி இருக்கிறார்கள். நடந்து முடிந்திருக்கும் தேர்தல் அதிபர் பதவிக்கான தேர்தல் என்பதைவிட, புதினின் கடந்த 6 ஆண்டு ஆட்சி குறித்த மக்களின் மதிப்பீடு எனலாம். அதில் புதின் வெற்றி பெற்றிருப்பது அவரது ஆட்சி மக்களிடம் பெற்றிருக்கும் செல்வாக்கின் எதிரொலி என்றுதான் கொள்ள வேண்டும். 
77% வாக்குகள் பெற்ற அதிபர் புதினுக்கு அடுத்தாற்போல் வந்த கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பவேல் குரூடினினால் வெறும் 12% வாக்குகள்தான் பெறமுடிந்தது. ஏனைய வேட்பாளர்கள் ஓரிலக்க விழுக்காடுதான் ஆதரவு பெற்றிருந்தனர். புதினுக்கும் ஊழலுக்கும் எதிரான போராளி அலெக்ஸி நவால்னி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தார். அவர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுத்திருந்த வேண்டுகோள் மக்களால் நிராகரிக்கப்பட்டு, அதிக அளவில் வாக்குப் பதிவாகி இருப்பதும்கூட புதினின் வெற்றி என்றுதான் கருத வேண்டும்.
ரஷியர்கள் அதிக அளவில் வாக்களித்து புதினை வெற்றிபெறச் செய்திருப்பதற்கு சில காரணிகள் இருக்கின்றன. ரஷியாவின் தேசிய கெளரவத்தை மீட்டெடுத்துத் தந்தவர் அவர் என்று மக்கள் நம்புகிறார்கள். சர்வதேச அளவில் ரஷியாவை மீண்டும் ஒரு வலுவான சக்தியாக மாற்றிய பெருமை விளாதிமீர் புதினுக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல், ரஷியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் கணிசமாக உயர்த்தி, அதலபாதாளத்தில் வீழ்ந்துகிடந்த ரஷியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திய பெருமையும் அவரைச் சாரும்.
1991-இல் சோவியத் யூனியன் பிளவுபட்டுச் சிதறிய அடுத்த பத்தாண்டு காலத்தை இன்றைய ரஷியாவின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வேறுபாடு பளிச்சிடும். அப்போது அமெரிக்காவுடனான பனிப்போரில் தோல்வியடைந்த அவமானம் போதாதென்று சோவியத் யூனியனின் பிளவால் பல லட்சம் சதுர கி.மீ. பரப்பை இழந்து, 15 புதிய நாடுகள் உருவானதை மாஸ்கோவால் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிந்தது. சோவியத் யூனியன் நெல்லிக்காய் மூட்டைபோல் சிதறும் என்று யாரும் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. அதன் பிறகு அடுத்த 10 ஆண்டுகள் அதிபர் போரிஸ் யெல்ட்ஸினின் ஆட்சிக் காலத்தில் எல்லைகள் சுருங்கிய ரஷியா எதிர்கொண்ட பிரச்னைகளைச் சொல்லி மாளாது. பற்றாக்குறை, விலைவாசி உயர்வு என்று ரஷியா வீழ்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
விளாதிமீர் புதின் அதிபரான பிறகு மாற்றத்தைப் படிப்படியாக ஏற்படுத்த முற்பட்டார். பொருளாதாரச் சரிவை தடுத்து நிறுத்தி, பற்றாக்குறையை அகற்றத் தலைப்பட்டார். அமெரிக்க நேச நாடுகளின் கூட்டணியான 'நேட்டோ' கிழக்கு நோக்கி தன்னுடைய ஆதிக்கத்தை விரிவாக்கத் தொடங்கியதை அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரஷியா, அதிபர் புதினின் தலைமையில் துணிந்து தடுக்க முற்பட்டது. 
கிரீமியாவில் நேட்டோ கூட்டணியைத் தடுத்து, பின்தள்ளி, ரஷியாவின் ராணுவ பலத்தை அதிபர் புதின் நிலைநாட்டியதை அந்த மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைத்தான் இந்தத் தேர்தல் வெளிப்படுத்துகிறது. உக்ரைனுடன் போரிட்டு ரஷியாவுடன் இணைந்த கிரீமியா பகுதியில் 92% வாக்குகள் அதிபர் புதினுக்கு ஆதரவாக விழுந்திருக்கிறது.
ஒருபுறம் புதினின் தேர்தல் வெற்றி அவரது கரத்தை வலுப்படுத்தி இருக்கிறது என்றாலும்கூட, அவரது பயணம் அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். சிரியாவின் பஷார் அல்-அஸாத் ஆட்சிக்கு ஆதரவாக அதிபர் புதின் எடுத்திருக்கும் நிலைப்பாடு பல மேற்கத்திய நாடுகளுடனான ரஷிய உறவில் மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. 
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்தது என்கின்ற குற்றச்சாட்டும், பிரிட்டனுடனான ரஷியாவின் இப்போதைய மோதலும் மேற்கத்திய வல்லரசுகளிடமிருந்து ரஷியாவைத் தனிமைப்படுத்தி இருக்கின்றன.
தேர்தலில் வெற்றியைத் தேடித்தந்த அதிபர் புதினின் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பு நிலைப்பாடு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுமேயானால், அது ரஷியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்று பொருளாதார நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அதிபர் புதினின், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான நிலைப்பாடும், அதனால் ஏற்பட்ட தனிமைப்படுத்தலும் அதிபர் தேர்தலில் புதினுக்கு மிகப்பெரிய ஆதரவைத் தேடித்தந்திருக்கிறது. அவர் மீது தேர்தல் முறைகேடு குறித்த சில குற்றச்சாட்டுகள் இருந்தாலும்கூட ரஷியாவின் கெளரவத்தையும் தேசியத் தன்மையையும் பாதுகாப்பவர் என்கின்ற கருத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்துகிறது.
அதிபர் புதினின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இந்தியா, தனது உறவில் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டும். மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவிழந்து வரும் நிலையில், இந்தியா தனது பழைய நண்பர்களுடனான உறவைப் புதுப்பித்து, வலுப்படுத்திக் கொண்டாக வேண்டும். இந்தியாவின் உலக வர்த்தகக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா, மறைமுகமாக நம்மீது பொருளாதார யுத்தம் தொடுத்திருக்கும் நிலையில், நாம் ரஷியாவின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டாக வேண்டும். 
ஏற்கெனவே பல்வேறு பொருளாதார, தொழில்நுட்ப ஆய்வுகளில் இணைந்து செயல்படும் இந்தியாவும் ரஷியாவும் இப்போது வங்க தேசத்தில் இணைந்து அணுமின் நிலையம் நிறுவும் பணியிலும் ஈடுபட்டிருக்கின்றன. புதினின் தேர்தல் வெற்றியில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு ரஷியாவில் கொள்கை ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியா அதை பயன்படுத்திக்கொண்டு ரஷியாவுடனான உறவில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை அகற்றி, உறவை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com