சித்தராமையாவின் கணக்கு!

பாரதிய ஜனதா கட்சியின் மீது காங்கிரஸ் என்ன குற்றச்சாட்டை முன்வைக்கிறதோ, அதே குற்றச்சாட்டுக்கு இப்போது ஆளாகி இருக்கிறது காங்கிரஸ். "மதவாத அரசியலில் இறங்கிவிட்டிருக்கிற

பாரதிய ஜனதா கட்சியின் மீது காங்கிரஸ் என்ன குற்றச்சாட்டை முன்வைக்கிறதோ, அதே குற்றச்சாட்டுக்கு இப்போது ஆளாகி இருக்கிறது காங்கிரஸ். "மதவாத அரசியலில் இறங்கிவிட்டிருக்கிறது காங்கிரஸ்' என்று பாஜக குற்றம் சாட்டுகிறது என்பதிலிருந்து, இரண்டு கட்சிகளுமே மதவாத அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல என்பது தெளிவாகிறது.
 எப்போது வேண்டுமானாலும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வரக்கூடும் என்கிற நிலையில், முதல்வர் சித்தராமையா, லிங்காயத் சமுதாயத்தைத் தனி மதமாக அங்கீகரித்து, அதற்கு சிறுபான்மை அந்தஸ்தை அளிக்க முற்பட்டிருப்பதுதான் பிரச்னைக்குக் காரணம். மாநில அரசு அறிவித்துவிட்டதாலேயே இது முடிந்துவிடவில்லை. இந்த முடிவுக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்றாலும்கூட, இப்போதைக்கு "லிங்காயத்' பிரிவினரைத் தனி மதமாக அறிவிக்க சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவெடுத்திருப்பது, தேர்தலில் விவாதப் பொருளாகவும், முடிவைத் தீர்மானிக்கும் காரணியாகவும்கூட இருக்கக்கூடும். சித்தராமையாவின் இந்த முடிவுக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இல்லையென்றால், சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு அவர் சர்ச்சையைக் கிளப்புவானேன்?
 பசவண்ணா என்பவர் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீர்திருத்தவாதி. பிராமணராகப் பிறந்த பசவண்ணா, வைதிகச் சடங்குகளையும், ஆசார அனுஷ்டானங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சிவபெருமானை மட்டுமே ஏக இறைவனாகக் கருதி வழிபட்டவர். ஜாதி பேதங்களைப் புறக்கணித்தவர். உருவமில்லாத லிங்க வழிபாட்டை வலியுறுத்திய பசவண்ணாவின் வழி வந்த சைவர்கள்தான் "லிங்காயத்' என்று அழைக்கப்படும் பிரிவினர்.
 "லிங்காயத்' பிரிவினர் பூணூல்போல தங்கள் மார்பில் சிறிய சிவலிங்கத்தை அணிந்திருப்பவர்கள். இதற்கு தினசரி பூஜையும் செய்வார்கள். இவர்களில் இரண்டு பிரிவினர். லிங்காயத், வீர சைவர்கள் என்று அழைக்கப்படும் அந்த இரண்டு பிரிவினரையும் இணைத்துத்தான் இப்போது லிங்காயத்துகளைத் தனி மதமாக அறிவித்திருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
 கர்நாடக மாநிலத்திலுள்ள 224 பேரவைத் தொகுதிகளில் குறைந்தது 100 தொகுதிகளில் லிங்காயத் பிரிவினரின் வாக்குகள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடியது. இதுவரை கர்நாடகத்தில் பதவி வகித்த 22 முதலமைச்சர்களில் எட்டு பேர் "லிங்காயத்' சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல், ஏன், இப்போதைய கர்நாடக பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கூட, லிங்காயத் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான்.
 கர்நாடக மக்கள்தொகையில் ஏறத்தாழ 17% உள்ள லிங்காயத்துகளும், வொக்கலிகா சமுதாயத்தினரும்தான் இரண்டு முக்கியமான பெரும்பான்மை சமுதாயத்தினர். கர்நாடக அரசியலில் இந்த இரண்டு பிரிவினர் மட்டுமே கோலோச்சி வந்ததை எழுபதுகளில் தேவராஜ் அர்ஸ் உடைத்தார். "லிங்காயத்', "வொக்கலிகா' சமுதாயங்கள் தவிர்த்த அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரையும் ஒருங்கிணைத்துப் புதியதொரு ஜாதிக் கூட்டணியை தேவராஜ் அர்ஸ் உருவாக்கினார். அந்தக் கூட்டணிக்கு எதிராக லிங்காயத்துகள், வொக்கலிகாக்கள், சிறுபான்மை சமூகத்தினர் ஆகியோரை இணைத்ததுதான் ராமகிருஷ்ண ஹெக்டேயின் பிற்கால வெற்றிக்குக் காரணம்.
 இப்படி ஜாதிக் கூட்டணிகளை ஏற்படுத்தி அரசியல் வெற்றி காண்பது என்பது கர்நாடகத்துக்குப் புதிதல்ல. பாஜகவின் அசைக்க முடியாத வாக்கு வங்கி என்று கருதப்படும் "லிங்காயத்' பிரிவினரின் மத்தியில் பிளவை ஏற்படுத்தி, அதில் ஒரு பகுதியினர் காங்கிரஸுக்கு வாக்களிக்க முன் வந்தால், தனது வெற்றி உறுதிப்படுத்தப்படும் என்பது முதல்வர் சித்தராமையாவின் தேர்தல் கணக்காக இருக்கக் கூடும்.
 பாஜகவின் வாக்குவங்கியும், தனது சமுதாயமுமான "லிங்காயத்' பிரிவினரைப் பகைத்துக் கொள்ள முடியாத தர்மசங்கடம் பாஜக தலைவர் எடியூரப்பாவிற்கு. முதல்வர் சித்தராமையாவின் அறிவிப்பை அவர் வரவேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இதனால், பாஜக பலவீனப்படுமா என்கிற கேள்விக்கு இப்போதே விடை கூறிவிட முடியாது.
 லிங்காயத்துகளில் ஒரு பிரிவினரான வீர சைவர்கள், "லிங்காயத்' என்பதைத் தனி மதமாக அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. தாங்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவினர்தானே தவிர, தனி மதத்தினரல்ல என்று அவர்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். இதற்காக சில இடங்களில் அரசை எதிர்த்துப் போராட்டமும் நடத்த முற்பட்டிருக்கிறார்கள். இந்துக்களில் பெரும்பான்மை சமுதாயமாக இருக்கும் லிங்காயத்துகள் தனி மதமாக அறிவிக்கப்பட்டு, சிறுபான்மை சமுதாயமாகும்போது, கல்வி நிலையங்களை ஏற்படுத்துவதில் பயனடைய முடியும் என்பது தவிர அதனால் வேறு எந்த லாபமும் இல்லை என்பது அவர்கள் வாதம்.
 முதல்வர் சித்தராமையா எடுத்திருக்கும் முடிவு அவருக்கு சாதகமாகத்தான் அமைய வேண்டும் என்பதில்லை. லிங்காயத்துகளின் ஒரு பகுதியினர்தான் காங்கிரஸுக்கு ஆதரவு தர முற்படுவார்களே தவிர, காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்த அந்த சமூகத்தினரின் ஒட்டுமொத்த ஆதரவும் இந்த முடிவால் காங்கிரஸுக்குக் கிடைத்து விடாது. அதே நேரத்தில், இந்துக்களில் பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முற்படுகிறது என்கிற கருத்து வலுவடையுமானால், காங்கிரஸின் லிங்காயத் அல்லாத ஜாதியினரின் வாக்குவங்கியிலேயே கூட அது சரிவை ஏற்படுத்திவிடக்கூடும்.
 கர்நாடக முதல்வர் சித்தராமையா போட்டிருப்பது வெற்றிக் கணக்கா, தப்புக் கணக்கா என்பதைத் தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்கும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com